நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள நிலையிலும், அதன் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தோல்வியடைந்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் அடைந்துள்ள தோல்வி, கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஈபிஆர்எல்எவ் கட்சிக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொன்.செல்வராசா மற்றும் அரியநேத்திரன் ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.
வன்னி மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், வினோநோகராதலிங்கம் இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளார்.
இவர்கள் நால்வரும், கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வந்தவர்களாவர்.
அதேவேளை, முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து இம்முறை கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டவர்கள் சிலரும் தோல்வியடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான குணசேகரம் சங்கர், சந்திரநேரு சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கோவிந்தன் கருணாகரம், குணசீலன் சௌந்தரராஜன், ஆகியோரும் இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் 91 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழர்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களும் உணரவேண்டும் என்ற அடிப்படையில் தான் குருநாகலில் களமிறங்குவதாக சிவாஜிலிங்கம் களமிறங்கினார். விடுதலைப் புலிகளின் தலைவரின் உறவினர் ஒருவர் குருநாகலில் தனக்கு எதிராக களமிறங்கியுள்ளதாகக் கூறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பிரசாரத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை ஆற்றியிருந்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
இந்நாட்டு அரசியல் வரலாற்றில் நடைபெற்ற மிகவும் சமாதானமான தேர்தல் என்றால் நேற்று நடைபெற்ற பொது தேர்தலை கூறலாம்.
நான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட 06 மாத காலப்பகுதியினுள் இந்நாட்டில் ஏற்படுத்த கூடிய மாற்றங்களில் விசேடமாக நல்லாட்சியின் முடிவாக இத் தேர்தல் மிகவும் சமாதானமாக நடை பெற்றதென நான் நம்புகின்றேன்.
கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், நான் போட்டியி்ட்ட தேர்தலுக்கு முன்னரும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்றுள்ள மாற்றங்கள் குறித்து உங்களுக்கு தெரியும்.
ஜனவரி 08 ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது என் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், அதே போன்று பத்தேகம பிரதேசத்தில் தேர்தல் மேடை மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு,
பொலனறுவை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு, அதேபோல் நிவித்திகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும் நாட்டில் ஏனைய பிரதேசங்களில் மிகவும் தீவிரமான சம்பவங்கள் இடம்பெற்றன.
பிரதானமாக அரசாங்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை, அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தியமை, விசேடமான அரசாங்க ஊடகங்கள் ஊடாக ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் அரசாங்கம் செயற்பட்ட முறைகள் தொடர்பில் இந்நாட்டு மக்களுக்கு நினைவில் இருக்கும்.
எனினும் இம்முறை நடைபெற்ற தேர்தல் முற்றிலுமாக மாற்றமடைந்திருந்தமையும் உங்களுக்கு தெரியும். எனவே சமாதானமான முறையில் நடைபெற்ற தேர்தல் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
நான் ஜனாதிபதியாக செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில், வரலாற்றில் முதல் தடவையாக மிகவும் சமாதானமாக தேர்தல் நடைபெற்றமை மிகவும் மகழ்ச்சியான ஒரு விடயமாகும்.
அரசாங்க தலைவர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாது சுயாதீனமாக மத்தியில் செயற்படுவதன் முடிவாகவே சமாதானமான தேர்தல் ஒன்றினை நடாத்த முடியும் என்பதனை இதன் ஊடாக நாங்கள் கற்றுக் கொண்ட பாடமாக இருக்கின்றது.
தனது அரசியல் அதிகாரத்தை பெரிய அளவில் காவல்துறை ஊடாக, அரசாங்க அதிகாரிகள் ஊடாக, தேர்தலுக்கு பயன்படுத்துவதன் மூலம் சமாதானமான மற்றும் சுதந்திரமான தேர்தல் ஒன்றினை நடாத்த முடியாது.
அதனால் தான் எங்கள் தேர்தல் வரலாற்றில் அதிக அளவிலான கருப்பு புள்ளிகள் காணப்படுகின்றது. எனவே இம்முறை எனது நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தி காவல்துறை மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்காமல், திருத்தச்சட்டத்திற்கமைய தேர்தல் ஆணையாளர் மற்றும் அவரது அதிகாரிகளுக்கும்,
காவல்துறையினர் மற்றும் அவர்களின் அதிகாரிகளுக்கும், தேர்தல் கடமைகளுக்கமைய வேட்பு மனு வழங்கிய நாளில் இருந்து இன்று வரையில் செயற்பட்ட அனைத்து நபர்களுக்கும் தங்கள் கடமைகளுக்கு தங்களிடம் காணப்படுகின்ற அதிகாரங்களை கொண்டு சட்ட ரீதியாகவும் சமாதானமாகவும் செயற்படுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
எனவே இதனை குறித்து நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும். தேர்தல் ஆணையாளர் மற்றும் அவரது அனைத்து அதிகாரிகளுக்கும், வாக்குசாவடிகளில் செயற்பட்ட அதிகாரிகள், வாக்கெண்ணும் அதிகாரிகள்,
இந் நடவடிக்கைகளுக்கு அனைத்து முறையிலும் ஆதரவு வழங்கிய மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும், அதேபோல் காவல்துறை அதிபர் உட்பட அவரது அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பிரிவின் இராணுவ பிரதான உட்பட அனைவருக்கும் எனது முழுமையான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பாரிய அளவிலான அர்ப்பணிப்புகளுடனும் பொறுப்புடனும் செயற்பட்ட, சமாதானமான தேர்தலை நடாத்துவதற்கு அனைவரிமும் காணப்பட்ட அர்ப்பனிப்புகளுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
அத்துடன் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பலர் கடந்த நாட்களில் எங்களுக்கு நாட்டிற்கு வருகை தந்திருந்தார்கள், இலங்கை வரலாற்றில் இவ்வளவு சமாதானமாக நடைபெற்ற தேர்தல் இதுவென அவர்களினாலும் காண முடிந்தது.
எங்களுக்கு அவசியமான ஆதரவு வழங்கியமை மற்றும் எங்கள் நாட்டிற்கு வந்தமைக்காக அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
இறுதியாக இத் தேர்தலின் முடிவுகள் வெளியாகும் தினங்களில் தேர்தல் வன்முறைகளின்றி, அரசியல் கட்சி பேதமின்றி, இந்நாட்டின் கௌரவமான, அன்பான மக்கள் மிகவும் சமாதானமான முறையில் தேர்தல் முடிவுகளை அனுபவிக்குமாறு நான் அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.
அதனால் தேர்தல் வன்முறைகள் எவ் முறையிலும் இடம்பெறாமல் செயற்படுவதன் மூலம் தேசிய ரீதியிலும் விசேட கௌரவத்தை பாதுகாக்க முடியும்.
வெற்றி பெற்ற குழு தோல்வியடைந்த குழு தொல்லைகள் கொடுக்காது, மன ரீதியிலும் மிகவும் சமாதான முறையில் தேர்தல் முடிவுகளை கொண்டாடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தம் 14 இடங்களை வென்றிருந்தது.
தற்போதைய தேர்தலில் அது குறைந்தபட்சம் 15 இடங்களை வெல்வது உறுதியாகிவிட்ட நிலையில், தேசியப் பட்டியலில் கிடைக்கக்கூடிய இடங்கள் இரண்டாக உயர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மொத்த உறுப்பினரின் எண்ணிக்கை இந்த நாடாளுமன்றத்தில்16ஐத் தொடக்கூடும் என்று அந்தக் கட்சியின் தரப்பில் நம்பிக்கை நிலவுகிறது.
தேர்தல் ஆணையத்தால் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின்படி,
யாழ். மாவட்டத்தில் 5 இடங்களும்,
வன்னி மாவட்டத்தில் 4 இடங்களும்,
திருகோணமலை மாவட்டத்தில் 1 இடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது.
இவை தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இடங்களும்
அம்பாறை மாவட்டத்தில் 1 இடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைப்பது உறுதியாகிவிட்டதாக பிபிசி தமிழோசையின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஆக மொத்தம் 14 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் வென்றால் அதற்கு தேசியப்பட்டியலில் குறைந்தது ஒரு இடம் கிடைக்கும் என்றும், அது சில வேளை இரண்டு இடங்களாக அதிகரிக்கலாம் என்றும் நமது செய்தியாளர் குறிப்புணர்த்துகிறார்.
உறுப்பினர் எண்ணிக்கை மட்டுமல்லாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாங்கிய ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு இந்தத் தேர்தலில் அதிகரித்திருப்பதாகவே இதுவரையிலான தேர்தல் திணைக்களத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வென்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டு அளவுகோள்களின் கீழும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடமான தனது ஆதரவை தக்கவைத்துக்கொண்டது மட்டுமல்ல, அதிகரித்திருப்பதாகவுமே அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் 33,834 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.
அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டவர்களில் ஐதேக சார்பில் எம். மஹ்ரூப் 35,456, விருப்பு வாக்குகளையும், இம்ரான் மஹ்ரூப் 32, 582 விருப்பு வாக்குகளையும் பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் சுசந்த புஞ்சிநிலமே 19,953 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார்.
பொதுத் தேர்தலில் குறைந்தது 30 ஆசனங்களையாவது கைப்பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வேண்டும் என்ற மக்கள் விடுதலை முன்னணியின் கனவு கலைந்து போயுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் அந்த கட்சியின் வெற்றிக்காக பாரிய பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் அந்தக் கட்சி மேற்கொண்ட பிரசாரம் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த பிரசாரத்தின் மூலம் பலன் கி்டைக்காத நிலையில், மக்கள் விடுதலை முன்னணிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
குறைந்தது 30 ஆசனங்களை எதிர்பார்த்திருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கு தேர்தல் முடிவுகளின்படி 7 முதல் 8 ஆசனங்களே கிடைக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் நிருபமா ராஜபக்ஷ ஆகியோரே ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து தேர்தல் களத்தில் குதித்தவர்களாவர்.
மாத்தறை மாவட்டத்தில் ஐ.தே.க.சார்பில் போட்டியிட்ட புத்திக பத்திரன கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இவர் 98,815 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அதற்கு அடுத்த இரண்டாம் ஸ்தானத்தில் உள்ள ஐ.தே.கவின் மங்கள சமரவீர 96082 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள அதேநேரம், சாகல ரத்நாயக்கா 86772 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இம்மாவட்டத்தில் ஐ.தே.க. 03 ஆசனங்களையும், சுதந்திர முன்னணி 05 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
முன்னதாக அவர் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டதாகவும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாகவும் ஏஎஃப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், அதனை தனது டுவிட்டர் செய்தியில் மஹிந்த மறுத்துள்ளார்.
இறுதியான அதிகாரபூர்வ முடிவை தான் இன்னமும் பெறாத நிலையில் தனது தோல்வியையோ அல்லது வெற்றியையோ ஒப்புக்கொள்ள தன்னால் முடியாது என்று அவர் அதில் கூறியுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள மொத்த முடிவுகளின் அடிப்படையில் 44.92 வீத வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 45 ஆசனங்களைப் பெற்று முதலாவது இடத்திலும், 42.90 வீத வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி 43 ஆசனங்களைப் பெற்று இரண்டாவது இடத்திலும் காணப்படுகின்றது.
இதேவேளை, 4.73 வீத வாக்குகளைப் பெற்று இலங்கை தமிழரசுக் கட்சி 6 ஆசனங்ளைப் பெற்றுள்ளது. 5.09 வீத வாக்குளைப் பெற்ற மக்கள் விடுதலை முன்னணி 2 ஆசனங்களை தக்கவைத்துள்ளது.
விகிதாசார ரீதியில் இதுவரை வெளியான வாக்குகளின் அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணி மூன்றாவது இடத்தில் காணப்படுகின்றது. ஈ.பி.டி.பி. கட்சி இதுவரையில் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons