Latest News
Showing posts with label திருகோணமலை. Show all posts
Showing posts with label திருகோணமலை. Show all posts

July 11, 2020

திருக்கோணேஸ்வரம் தமிழரின் பூர்வீகம், தேரரின் கருத்திற்கு பலத்த கண்டனம்!
by Editor - 0

திருக்கோணேஸ்வரம் தமிழரின் பூர்வீகம், 
தேரரின் கருத்திற்கு பலத்த கண்டனம்!
-செந்தில் தொண்டமான் போன்ற தெளிவு தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவசியம்-
வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கோணேஸ்வரம் சிவாலயம் பௌத்த விகாரையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்ட கருத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் செந்தில் தொண்டமான் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

சீகிரியாவில் தான் மிகப் பழைமையான சிங்கள இலக்கிய எழுத்துகள் காணப்படுகின்றன. அவை கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என கணிப்பிடப்படுகிறது. 

ஆனால் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வாயுபுராணத்தில் இலங்கையில் உள்ள திருக்கோணேஸ்வரம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களின் வரலாறு, கலாசாரம் தொடர்பில் தவறான கருத்துகள் முன்வைக்கப்படும்போது அதனை எதிர்ப்பதற்கு நான் ஒருபோதும் தயங்குவதில்லை.

வெறும் அறிக்கைகளை மாத்திரமே வெளியிடுவதற்கு நான் எதிர்க்கட்சி அரசியல்வாதி கிடையாது. ஆளும் கட்சியில் இருந்துகொண்டே அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு எப்போதும் தயாராகவே உள்ளேன்.

திருக்கோணேஸ்வரம் ஆலய விவகாரம் தொடர்பில் தேரருக்கும் அவர் போன்ற கருத்துடையோருக்கும் சில விடயங்களை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணியின் செயற்பாடானது தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதே அன்றி, சமூகத்துக்கு இடையில் குழப்பங்களைத் தோற்றுவிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவதல்ல என்பதை ஞாபகப்படுத்த விருப்புகிறேன்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை மக்களின் அங்கத்தவன் நான். அந்த வகையில் தேரருக்கு ஒரு விடயத்தைச் சொல்வதற்கு எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அதேபோல அவர் சொல்லும் கருத்து தவறு என அதனை எதிர்ப்பதற்கும் எனக்கு முழு உரிமையும் உண்டு.

இந்து மதம் ஒரு புனிதமான மதம். அந்த மதத்தை பின்பற்றுபவர்கள் சமய ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள். அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பவர்கள். அவ்வாறானவர்கள் வேறு மத சின்னங்களை அழிக்கும் அளவுக்கு கீழ்த்தரமானவர்கள் அல்லர்.

தேரரின் கருத்து தொடர்பில் நான் விரிவாக ஆராய்ந்தேன். ஒருசில அரசியல்வாதிகளைப் போல தரவுகள், ஆதாரங்கள் இன்றி அறிக்கை வெளியிடுவதற்கு நான் அரசியல் ஞானமற்ற அரசியல்வாதி அல்ல.

அந்தத் தேரருக்கு தகுந்த பதில் கொடுக்க வேண்டும் என்றுதான் இது குறித்து முழுமையாக ஆராய்ந்தேன். தேரர் கருத்து வெளியிட்டது முதல், இது தொடர்பில் தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்புகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடினேன்.

அதனடிப்படையில் இலங்கையில் தமிழ் எழுத்துக்கள் பதிவாகிய ஆண்டு முதற்கொண்டு சிங்கள எழுத்துகள் எவ்வாறு, எப்போது பதிவாகியன என்பது தொடர்பான தகவல்களை சேகரித்துள்ளேன்.

சீகிரியாவில் தான் மிகப் பழைமையான சிங்கள இலக்கிய எழுத்துகள் காணப்படுகின்றன. அவை கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என கணிப்பிடப்படுகிறது.

ஆனால் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வாயுபுராணத்தில் இலங்கை, மலையதீவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அந்தத் தீவின் கிழக்கிலே அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களின் பூர்வீக வரலாறு விஜயன் வருகைக்கு முன்னர், அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய பண்பாடுகளில் இருந்து தொடங்குவதாக கட்டுக்கரை அகழ்வாய்வுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற சான்றுகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

சிங்கள மொழி உருவாக்கம் பெற்றதாகக் கருதப்படும் காலகட்டமான கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதியாக இலங்கை விளங்கியமைக்கான ஆதாரபூர்வமான ஆவணங்கள் உண்டு. இதனை நான் ஆதாரத்துடனேயே குறிப்பிட்டுள்ளேன்.

ஜனாதிபதி செயலணி உறுப்பினரான தேரரின் தேவையற்ற, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையிலான இந்தக் கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.

அதேபோல தேரரின் கருத்துக்கு ஆவண ரீதியாக உறுதிப்படுத்தவும் தயார், அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கும் தயார். - இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Read More

July 09, 2020

தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்றவர்களுக்கு வாக்களிக்கவேண்டும்! – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்!
by Editor - 0

தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்றவர்களுக்கு வாக்களிக்கவேண்டும்! – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்! 
கட்சி என்ற மாயைக்குள் சிக்கிவிடாது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு சிலரை தெரிவு செய்யவேண்டும். அவர்களுக்கு வாக்களிக்க முயற்சிப்போம்.

நிராகரிக்க வேண்டியவர்களை அவதானத்துடன் நிராகரிப்போம். தெரிவுசெய்ய வேண்டியவர்களை அவதானிப்புடன் தெரிவு செய்வோம்.

தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ள அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங், எமக்கு முன் இருக்கின்ற தார்மீகக் கடமையை சரியானமுறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பொதுத் தேர்தல் தொடர்பாக மக்கள் முன் உள்ள சவால்கள் குறித்து கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தேர்தலையொட்டி பெரும் மாயை ஒன்று எங்களைச் சுற்றி இருக்கின்றது. கட்சி, தேசியம், பிரதேசம், சாதியம் இவ்வாறு பல மாயைகளுக்கு ஊடாக தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய சூழல் உள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வட கிழக்கு மக்கள் பெரு அணியாக ராஜபக்சேக்களுக்கு எதிராக வாக்களித்திருந்தார்கள். அவர்கள் அல்லது நாம் சஜித்தை ஆதரிக்கின்றோம் என்பதற்கு அப்பால் எமது இனத்திற்கு எதிராக ராஜபக்சேக்கள் செய்த துரோகத்திற்காக அந்த வாக்கு அளிக்கப்பட்டது.

அத்தகைய நிலையில் இருந்த நாம் இந்தத் தேர்தலை எவ்வாறு சந்திக்கின்றோம் என்பதை நாங்கள் சிந்திக்கவேண்டும். யாருக்கு வாக்குபோடவேண்டும் என்பதை பலரும் கேட்கின்றார்கள்.

யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை ஒவ்வொரு நலன்விரும்பியும் தேசவிரும்பியும் சிந்திக்கவேண்டும். என்னிடமும் பலர் இதனைக் கேட்கின்றார்கள்.

ஒரு மதகுருவாக யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவது தவறான விடயம். ஒரு கட்சி சார்பாக நின்று நாங்கள் பேசமுடியாது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆகவே தமிழ் மக்கள் ஒரு தெளிவைப்பெறவேண்டும் என்பதை நாங்கள் சிந்திக்க தூண்டப்படுகின்றோம். இந்தத் தெளிவு என்பது தமிழ்த் தேசியத்திற்கான தெளிவாக இருக்கவேண்டும்.

வேலைவாய்ப்பை வழங்கக்கூடியவர்கள் அல்லது ஒரு சில திட்டங்களை செய்யக்கூடியவர்கள் சில வாய்ப்புக்களைத் தரக்கூடியவர்கள் என்பதற்கு அப்பால் எங்களுடைய தேசத்திற்கான விடுதலையைத் தரக்கூடியவர்கள் என்றோ அல்லது இன்நாள் வரையும் நாங்கள் முயற்சித்த போராட்டங்களுக்கான தீர்வுகளை அடையக்கூடியவர்கள், சர்வதேச ரீதியாக எமது பிரச்சினைகளை அணுகக்கூடியவர்கள் தெற்கில் எமது தேசத்திற்காக உழைக்கக்கூடியவர்கள் யார் என்பதை பட்டியல் இடவேண்டும்.

இன்று தெற்கு அரசியலுக்கு முண்டுகொடுக்கிறவர்களுக்கு நாங்கள் கொடுக்கின்ற ஒவ்வொரு புள்ளடியும் எமது இருப்புக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடியது. கிழக்கில் உருவாக்கப்பட்ட செயலணி வடக்கிற்கும் உருவாக்கப்படவுள்ளது.

ஆகவே தெற்குக்கு முண்டுகொடுக்கிறவர்கள் இதற்கும் ஒத்துழைப்புக் கொடுப்பார்கள் இதைத்தான் ரணில் அரசும் செய்தபோது தமிழ் கட்சிகள் தேசிய ரீதியில் செயற்படுகின்றவர்கள் கூட வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் விகாரைகள் அமைப்பது என்ற திட்டத்திற்கும் ஆதரவாக இருந்தார்கள்.

அதன் வளர்ச்சியாக கிழக்கில் உருவாக்கப்பட்ட செயலணி வடக்கிற்கும் உருவாகவுள்ளது. அவ்வாறு உருவாகின்றபோது தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகும். எதிர்காலத்தில் பெரும் குழப்பத்தை உருவாக்கும்.

ஆகவே நாங்கள் போடுகின்ற புள்ளடி எமது பெறுமதியானது. அதனை நேர்மையாக நேர்த்தியாக செய்யவேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. எந்தக் கட்சி என்று நாங்கள் தெரிவு செய்வதா எந்த நபர் என்று தெரிவு செய்வதில் போராட்டம் உள்ளது.

கட்சி என்ற மாயைக்குள் சிக்கிவிடாது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு சிலரை தெரிவு செய்யவேண்டும். அவர்களுக்கு வாக்களிக்க முயற்சிப்போம். நிராகரிக்க வேண்டியவர்களை அவதானத்துடன் நிராகரிப்போம். தெரிவுசெய்ய வேண்டியவர்களை அவதானிப்புடன் தெரிவு செய்வோம்.

எமக்கு முன் இருக்கின்ற தார்மீகக் கடமையை சரியானமுறையில் நிறைவேற்ற நாமும் தெளிவடைவோம் அருகிலுள்ளவர்களையும் தெளிவடையச் செய்வோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Read More