Latest News

Slider Area

தமிழீழம்

சினிமா

தமிழ் வளர்ப்போம்

May 24, 2016

ஐ.எஸ்., பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள்
by kavi siva - 0

இணையதளத்தில், கடந்த வாரம், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது: கடந்த வாரம், 'தி லேண்ட் ஆப் ஹிந்த்: பிட்வீன் பெய்ன் அண்ட் ஹோப்' என்ற பெயரில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பிரசார வீடியோ, இணையதளத்தில் வெளியானது. 22 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி, ஐ.எஸ்., வீடியோவில் இடம்பெற்றுள்ளான். இவனும், குடும்பத்தினரும், ஆறு ஆண்டுக்கு முன், சிங்கப்பூரில் குடியேறினர். 2013, நவம்பரில், மனைவி, மூன்று குழந்தைகளுடன், ஹாஜா பக்ருதீன், சிரியாவுக்கு சென்று, போரில் பங்கேற்க முயன்றுள்ளான். ஆனால், ஐ.எஸ்., இயக்கத்தினருடன், அவனால் தொடர்பு கொள்ள முடியாததால், மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளான். பின், 2014, ஜனவரியில், ஹாஜா பக்ருதீன், சென்னையிலிருந்து, சிரியா சென்றுள்ளான். அது முதல், ஐ.எஸ்., இயக்கத்தில், அவன் தீவிரமாக செயல்பட்டு வருகிறான்.

தமிழகத்தை சேர்ந்த மற்றொரு பயங்கரவாதி, குல் முகம்மது மரைக்காயர், கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவன். இவன், ஐ.எஸ்., இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கும் பணியை செய்து வந்தான். 2014ல், இவனை, சிங்கப்பூர் அரசு நாடு கடத்தியுள்ளது. 2015க்கு பின், குல் முகம்மது பற்றிய தகவல் தெரியவில்லை. தற்போது, ஐ.எஸ்., வெளியிட்ட வீடியோவில் அவன் இடம்பெற்றுள்ளான்.

கடந்த வாரம் வெளியான வீடியோ, 10 மாதங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இதில், அடையாளம் காணப்பட்டுள்ள இந்திய பயங்கரவாதிகளில் ஒருவனான, சாஜித், 2015, செப்டம்பரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டான். இவ்வாறு அரசு அதிகாரி கூறினார்.
Read More

யாழ்ப்பாண மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவது எப்போது எனக்கூறும் உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்
by kavi siva - 0

இளஞ்செழியன்
தாம் முன்நோக்கி செல்லுகின்ற நேர்வழியில் எதிர்படும் எந்தவிதமான தடைகள் ஏற்படினும் அதனை எதிர்கொண்டு முன்னோக்கி செல்லப்போவதாக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற சர்வோதைய அமைப்பின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் யாழ்ப்பாணத்தின் கல்வி கலாசாரம் என்பவற்றை 1970ஆம் ஆண்டில் இருந்தவாறு மாற்றப்போவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு சகலரும் தம்முடன் இணைந்து ஒத்துழைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
1970ஆம் ஆண்டு நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் நிரப்பிய யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி தரம் இன்று 21ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.
தண்டனை தான் சமூகத்தை திருத்தும் என்ற போதிலும் மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட கூடாது என்பதே தமது வாதம் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.
தண்டனைகள் மூலம் யாழ்ப்பாணத்தில் சிறந்த சமூகத்தை உருவாக்குவது தமது கடமை எனவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது பொதுமக்களின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.
சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் தம்மை தற்காப்பதற்கான உரிமை சட்டத்தில் உள்ளதாகவும் அவர் கோடிட்டு காட்டினார்.
யாழ்ப்பாண குடாநாட்டு பெண்கள் இரவு 12 மணிக்கு யாழ்ப்பாண நகரில் தாம் சுதந்திரமாக திரிகிறோம் என்ற குரல் எழும்பும் போதே தாம் யாழ்ப்பாண மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதாக நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிட்டார்.
Read More

கடல்நீரில் விளக்கெரியும் புதுமை மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடார்ந்த உற்சவம்
by kavi siva - 0
கடல்நீரில் விளக்கெரியும் வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ஆலய வருடார்ந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பக்தர் கூட்டம் படைபெடுத்தபடியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடார்ந்த உற்சவங்கள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்து வரப்பட்டு விசேட பூசை வழிபாடுகளுடன் இன்று காலை உற்சவம் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

ஈழத்தில் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்கு சிறப்பு மிக்க தலமாக முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம் பல புதுமைகளையும் அற்புதங்களையும் கொண்டு காணப்படுகின்றது.

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் உற்சவ காலங்களில் முல்லைத்தீவுக் கடலில் எடுக்கப்பட்ட கடல் நீரில் ஒரு வாரத்திற்கும் மேலாக விளக்கு எரிக்கப்படுவது புதுமை மிக்க அர்ப்புதமாகக் காணப்படுகின்றது.
பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் நோக்குடன் தூக்குக்காவடி, பறவைக்காவடி, ஆட்டக்காவடி, பாற்செம்பு, அங்கப்பிரதஸ்டனை போன்ற பல வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இன்று அதிகாலை ஆரம்பமான வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் உற்சவம் இரவிரவாக சிறப்பு மிக்க பூசை வழிபாடுகள் என்பன நடைபெற்று நாளை வரை சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Read More

May 23, 2016

பன்முகச் செயற்திட்டங்களுடன் உத்வேகம் கொண்ட ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் !!
by kavi siva - 0

பன்முகச் செயற்திட்டங்களுடன் உத்வேகம் கொண்ட ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் !!


ஈழத்தமிழர்களுக்கான தனித்துமான அடையாள சினிமாவை கண்டடையும் நோக்கில் செயலாற்றும் ஈழத் தமிழர் திரைப்பட சங்கம் பன்முகச் செயற்திட்டங்களுடன் உத்வேகம் பெற்றுள்ளது.

உலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர் தமிழர்களின் திரைத்துறையை தனித்துவமாக வளர்த்தெடுத்து, ஈழத்தமிழினத்தின் எதிர்கால சமுக-அரசியல் இருப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில்  முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னராக, 2010ம் ஆண்டில் ஈழத் தமிழர் திரைப்பட சங்கம் பிரான்சில் தோற்றம் பெற்றிருந்தது.
கடந்த ஞாயிறன்று (22-05-2016)தலைநகர் பாரிசில் கூடிய இதன் பொதுச் சபைக் கூட்டத்தில்,  பல்வேறு செயற்திட்டங்களுக்கான பொறிமுறையினை உருவாக்கியதோடு, புதிய நிர்வாகத்தினையும் தேர்வும் இடம்பெற்றிருந்தது. 


பல்வேறு வாதப்பிரதிவாதங்களுடன் சனநாயக முறையில் இடம்பெற்றிருந்த நிர்வாகத் தேர்வில், 
தலைவராக திரு.றொபேட், செயலாளராக திரு.குணா, பொருளாளராக திரு.சதாபிரணவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
உப தலைவராக திரு.கெங்கேஸ், உப செயலாளராக திரு.அஜந்தன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களாக திரு.ஜனேசன், திரு.சதீஸ், திரு.அகீபன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
திரையிடல், பரப்புரை, ஆவணப்படுத்தல், சந்தைப்படுத்தல், நிதிவளம், கூட்டுச்செயற்பாடு, பன்னாட்டு தளம் என பன்முகச் செயற்திட்டங்களுக்கான உப குழுக்களும் உருவாக்கம் பெற்றிருந்தன.
புதிய நிர்வாக தேர்வுக்கான ஏற்பாட்டுக்குழுவின் சம்பிரதாய நடைமுறைகளைத் தொடர்ந்து, சமூக செயற்பாட்டாளர்களான திரு.பாஸ்கரன், திரு.சுதன்ராஜ் ஆகியோர் நிர்வாக தேர்வுக்கான சபையினை கூட்டாக நடாத்தியிருந்தனர். 
புதிய நிர்வாக குழுவின் சார்பில் ஏற்புரையினை வழங்கிய திரு.றொபேட் அவர்கள், ஆர்வமும் ஆற்றலும் அனுபவமும் உள்ள நாம் அனைவரும் கூட்டாக செயற்படுவதன் ஊடாக, ஈழத் தமிழர் திரைப்பட சங்கத்தின் இலக்கினை எட்ட முடியும் என நம்பிக்கையினைத் தெரிவித்திருந்தார்.
இவைகள் பதவிகள் அல்ல, பொறுப்புக்கள் மட்டுமே, இந்தப் பொறுப்புக்களின்  பின்னால் உள்ள  கடப்பாட்டினை உணர்ந்து எல்லோரும் சமம் என்ற நிலையிலேயே பாகுபாடற்று இந்த நிர்வாகம்  செயற்படுமெனவும் திரு.றொபேட் அவர்கள் தெரிவித்திருந்தார்.
வளப்பெருமக்களாக பங்கெடுத்திருந்த திரு.முகுந்தன், திரு.நாகேஸ் ஆகியோரும் தங்களது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
Read More

ஸ்டாலினுக்கு ஜெயலலிதா வைத்த ஆப்பு - நாகரிகமற்ற தமிழ்நாட்டு அரசியல்
by kavi siva - 0

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் ஒதுக்கியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை: 23-5-2016 அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழாவில், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு – அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு – அமர வைத்து வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழகத்தை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்! இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Read More

முல்லைத்தீவில் மர்மமான சடலம்
by kavi siva - 0

முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டார புதறிகுடா குளத்திற்கு அருகில் நேற்றுக் காலை 11மணியளவில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது சடலமாக மீட்கப்பட்டவரின் பையினுள் இருந்த வங்கி புத்தகத்தின்படி யாழ் நெல்லியடியை சேர்ந்த 74 வயதான t s சிவபாதன் என்பவருடையது மேலதிக விசாரனணை நடைபெற்று வருகிறது.

மரணத்தில் மர்மம் தொடர்வதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read More

May 22, 2016

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்
by kavi siva - 0

நல்லாட்சி என்ற மாயைக்குள் இலங்கைத்தீவில் தொடர்ந்தும் நடந்தேறும் மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இவ் ஆர்ப்பாட்டமானது, இன்று 22ஆம் திகதி மதியம் ஒரு மணி தொடக்கம், மாலை நான்கு மணி வரை பிரித்தானியப் பிரதமர் வாயில் தளத்தின் முன் NO 10 DOWNING STREET WESTMINISTER, LONDON நடைபெற்றது.

இலங்கையில் தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும், வெள்ளைவான் கடத்தலுக்கு எதிராகவும், புலம்பெயர் தேசங்களில் இருக்கின்றவர்களை திருப்ப அனுப்ப வேண்டாம் என தெரிவித்தும் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இக் கோரிக்கைகளை பிரித்தானிய அரசிற்கு முன் வைக்கும் அதேநேரம், பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்து. இதில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து தமது எதிர்ப்பை வெளிப் படுத்தினர் 


Read More

May 21, 2016

2021 நமக்கான ஆண்டு தம்பிகள் யாரும் சோர்வடைந்திட வேண்டாம்-சீமான்
by kavi siva - 0

சென்னை: 2021-ம் ஆண்டு நமக்கான ஆண்டாக இருக்கும். தம்பிகள் யாரும் சோர்வடைந்துவிட வேண்டாம். தேர்தலை எதிர்கொண்ட ஓராண்டிலேயே நம்மை ஒரு சதவீதம் பேர் ஆதரித்திருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி தொண்டர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. 

திமுக வலிமையான எதிர்கட்சியாக சட்டசபைக்குள் நுழைகிறது. காங்கிரஸ் சில எம்.எல்.ஏக்களை சட்டசபைக்குள் அனுப்பியுள்ளது


திமுக, அதிமுக தவிர மாற்று கோஷத்தை முன்வைத்த அத்தனை கட்சிகளும் வாஷ் அவுட் ஆகியுள்ளனர். 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 5000 வாக்குகளுக்கு உள்ளேதான் பெற்றுள்ளனர்.

அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 12ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை பறிகொடுத்துள்ளார். சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றி எதிர்கட்சிகள், பாமக, தமாகா, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் அறிக்கை, பேட்டி அளித்துக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் முடிவுகளைப் பார்த்த சீமான், தனது கட்சித் தொண்டர்களுக்கு ஆறுதல் வார்த்கைள் தெரிவித்தாராம்.

நேற்று தனது வீட்டில் தொண்டர்களிடம் பேசிய சீமான், ஜாதியை கூறி கட்சி நடத்துகிற ராமதாஸ், காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார். ஐம்பது ஆண்டு பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான வைகோ, நம்மைவிடவும் குறைந்த ஓட்டுக்களைத்தான் வாங்கியிருக்கிறார். எண்பது ஆண்டு பாரம்பரியம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட நாம் வாங்கிய ஓட்டை வாங்கவில்லை.

8.3 சதவீத ஓட்டை வைத்திருந்த விஜயகாந்துக்கு 2.3 சதவீதம்தான் வாக்கு கிடைச்சிருக்கு. அவருக்கு ஆந்திரா கிளப் உள்பட பல தொழிலதிபர்கள் பணம் கொடுத்தார்கள். எந்தப் பணபலமும் இல்லாமல்தான் தேர்தலை எதிர்கொண்டோம். இப்பதான் களத்துக்குள்ள வந்திருக்கோம். இந்தத் தேர்தலை முயற்சி மற்றும் பயிற்சி என்ற அடிப்படையில்தான் எதிர்கொண்டோம் என்று கூறினாராம் மானத் தமிழன், வாங்கின காசுக்கு விசுவாசமா ஓட்டுப் போட்டிருக்கான். நாம என்ன பண்ண முடியும்? தி.மு.கவும் அ.தி.மு.கவும் பணத்தைக் கொட்டி வேலை பார்த்தார்கள். நாம் உண்டியல் குலுக்கி தமிழனிடம் கையேந்தி நின்னோம். நமக்கு ஒரு சதவீதம் கொடுத்திருக்கான்.


நமக்கு இன்னமும் வயசு இருக்கு. அடுத்த தேர்தலை வலிமையோடு சந்திப்போம். 2021-ம் ஆண்டு நமக்கான ஆண்டாக இருக்கும். தம்பிகள் யாரும் சோர்வடைந்துவிட வேண்டாம். தேர்தலை எதிர்கொண்ட ஓராண்டிலேயே நம்மை ஒரு சதவீதம் பேர் ஆதரித்திருக்கிறார்கள். பணபலம் எதுவுமில்லாமல் நமக்குக் கிடைத்த வெற்றி இது. இந்த வாக்கு சதவீதத்தை இன்னும் உயர்த்தப் பாடுபடுவோம்' என எங்களை உற்சாகப்படுத்தினார் என்றும் சீமான் ஆறுதல் தெரிவித்தாராம்.


Read More

ஊடகவியலாளர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு யாழ்ப்பாணத்தில்.
by kavi siva - 0

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவினால் மனித உரிமை பாதுகாவலர்களான ஊடகவியலாளர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு நேற்றுத் தொடக்கம் இன்று வரை யாழ்ப்பாணம் கிறீன்கிறாஸ் கோட்டலில் நடைபெற்றுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வில் இலங்கைச் சட்டங்கள், அடிப்படை உரிமைகள், சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், அவை மீறப்படும் சந்தர்ப்பங்கள், பாதுகாப்புப் பெறுதல், ஊடகவியலாளர்களது சமூகப்பொறுப்புக்கள், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் பொறிமுறைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கி பயனுள்ள கருத்துரைகள், சம்பவ ஆய்வுகள், கலந்துரையாடல்கள் என்பன இடம்பெற்றிருந்தன.இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான மேற்படி செயலமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் எஸ்.அம்பிகா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்வி அதிகாரி எஸ்.கபிலன், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆலோசனை மையத்தின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான சுபாசினி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள்.

ஊடகவியலாளர்களுக்கான இச்செயலமர்வில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Read More

கிளிநொச்சியில் 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட சிறுபோகம் அழிவு! விவசாயிகள் கவலையில்!!
by kavi siva - 0

கிளிநொச்சி மாவட்டத்தில் 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட சிறுபோகப் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது. கடன்பட்டு பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் செய்வதறியாது பெருங்கவலையில் மூழ்கியுள்ளார்கள்.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தமையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் வாழ்விடங்களுக்குள்ளும் பயிர்ச்செய்கை நிலங்களுக்குள்ளும் வர்த்தக நிலையங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்து பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

கிளிநொச்சி மாவட்டத்தில் செய்கைபண்ணப்பட்டு வெள்ளப்பெருக்கினால் அழிவடைந்துள்ள நெற்பயிர்ச்செய்கை, சிறுதானியப் பயிர்ச்செய்கை என்பவற்றின் விபரம் மாவட்டச் செயலகத்தின் புள்ளிவிபரங்களின்படி அக்கராயன் பகுதியில் 2790 ஏக்கர் சிறுபோக நெற்செய்கையில் 2500 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளது. வன்னேரிக்குளம் பகுதியில் 121 ஏக்கர் சிறுபோக நெற்பயிர்ச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளது. இதேவேளை இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 1500 ஏக்கர் சிறுதானியப் பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாகத் விபரங்கள் தெரிவிக்கின்றன.
இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றமையால் இம்முறை இரணைமடுக்குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கிளிநொச்சியின் ஏனைய குளங்களின் கீழான சிறுபோக நெற்செய்கையே இடம்பெற்றிருந்தது என்பதும் அதுகும் தற்போது பெய்த கனமழை வெள்ளப் பெருக்கால் அழிவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கிளிநொச்சியில் பெய்த பெருமழையினால் குளங்களில் நீர் தேங்கியுள்ளமையைப் பயன்படுத்தி வெள்ளப்பெருக்கினால் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ள வயல் நிலங்களில் துரிதமாக மீள்விதைப்பை மேற்கொள்வது பற்றிய முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள போதிலும் இலங்கையில் அசாதாரண காலநிலை தொடர்ந்தும் காணப்படுகின்றமையால் கடன்பட்டு பெருமளவு பணத்தைச் செலவுசெய்து மீண்டும் விதைத்துப் பயிரழிவுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடனும் கவலையுடனும் விவசாயிகள் குழப்பமடைந்த நிலையில் காணப்படுகின்றார்கள்.

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மீள்குடியேற்ற ஆரம்ப காலங்களில் வங்கிளிடமிருந்து கடனாகப் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபட்டிருந்தபோது அப்போது ஏற்பட்ட கனமழை வெள்ளப்பெருக்கினால் வயல் நிலங்கள் முற்றாக அழிவடைந்துள்ள நிலையில் வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களைத் தற்போதுவரை திருப்பிச் செலுத்தமுடியாது அவலப்பட்டு நிற்கும் விவசாயிகள் தற்போதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விவசாயிகளால் வங்கிகளிடமிருந்து பெறப்பட்டு பயிர்ச்செய்கையில் ஈடுப்ட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளது விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதாகவும் மானியமாக்குவதாகவும் கூறியபோதிலும் அப்படியான செயற்பாடுகள் எவையும் இடம்பெறாதமையால் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி விவசாயிகள் வங்கிக்கடன் சுமையுடன் மென்மேலும் இயற்கையின் சீற்றத்தினால் பயிரழிவுகளை எதிர்நோக்கிப் பாதிக்கப்பட்டுக் கலங்கிநிற்கின்றார்கள்.
Read More

தமிழ் மக்கள் மீது வீசப்பட்டது கிளஸ்ரர் குண்டுகள்!
by kavi siva - 0

முள்ளிவாய்காலில் இலங்கை அரசாங்கத்தினால் தமிழின படுகொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள் பூர்த்தி ஆகியுள்ள நிலையில் இந்த கட்டுரையை எழுதுவதற்கு உந்தப்படுகிறேன்.

ஐ. நா மனித உரிமைகள் சபையில் கடந்த வருடம் இலங்கை தொடர்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, தமக்கெதிரான அநீதிகளுக்கு ஓரளவுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்மக்களிடம் ஏற்ப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கை இன்று வெறும் கானல் நீராக மாறிவிட்டது.

தீர்மானம் இயற்றப்பட்டபோது சர்வதேச சமூகத்துக்கு அது தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கி இருந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இன்றுவரை எதையுமே செய்யவில்லை. போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகள் இலங்கையில் ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விகிரமசிங்கவும் பல சந்தர்ப்பங்களில் தீர்க்கமாக கூறி இருக்கிறார்கள்.

பொறுப்புக்கூறல் தொடர்பிலான உண்மையான தன்மை மற்றும் உள்ளக விசாரணைக்கான அரசாங்கத்தின் முனைப்புக்களும், குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்களின் தீவிரத் தன்மை தொடர்பில் கவலை கொண்டுள்ளவர்களுக்கு சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றன. இந்த விசாரணைகளில் யார் நீதிபதிகளாகவும், விசாரணையாளர்களாகவும், தடயவியல் நிபுணர்களாகவும் இருக்கப்போகிறார்கள் என்பது கேள்வியாகவே இருந்துவருகிறது.

மிக முக்கியமாக, சாட்சியாளர்கள் தமது அனுபவங்கள் மற்றும் விபரங்களை தெரிவிப்பதற்கு ஏதுவான ஒரு சூழ்நிலை இருக்கிறதா என்று நாம் கேட்கவேண்டும். குறிப்பாக, பல சாட்சியாளர்கள் வெளிநாடுகளில் வாழுகின்றனர், பலர் ஏற்கனவே சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர், சிலர் தமது அனுபவ உண்மைகளை விட்டுக்கொடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.


நான் ஒரு மருத்துவர். வடக்கு கிழக்கில் யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது அங்கு பணியாற்றினேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த யுத்தத்தில் பெரும் துன்பப்பட்டதை நான் நேரடியாக பார்த்துள்ளேன். விமான குண்டு வீச்சு தாக்குதல்கள், எறிகணை வீச்சுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஆயுதங்களால் காயமடைந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் சிகிற்சை அளித்திருக்கிறேன். மருத்துவ வழங்கல்கள் இல்லாத நிலையிலும், சிகிற்சை அளிப்பதற்கு போதிய வசதிகளோ மருத்துவ பணியாளர்களோ இல்லாத நிலையிலும் எவரையும் சாவதற்கு அனுமதிப்பதில்லை என்ற பற்றுறுதியுடன் நாம் எம்மால் முடிந்தளவு சிகிற்சைகளை வழங்கினோம்.

ஆனாலும், மயக்கமளிக்கும் மருந்துகளோ இரத்தமோ இல்லாதநிலையில் நோயாளிகள் பலர் இறக்கும் நிலைமையை பார்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருந்தோம். நானும் ஏனைய சில மருத்துவர்களும் எமது சொந்த பாதுகாப்பையும் பொருட்படுத்தாது எமது உயிரை பணயம் வைத்து நோயாளிகளுக்கு சிகிற்சை அழிப்பது என்று முடிவு செய்து யுத்தம் முடிவடையும் வரை அங்கிருந்து பணியற்றினோம்.

கடும் விமானத்தாகுதல்கள், எறிகணை தாக்குதல்கள் மற்றும் சிறி லங்கா இராணுவத்தினரின் முன்னேற்றம் காரணமாக மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு தொடர்ந்து இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டபோதிலும் மிகவும் சொற்ப அளவிலான மருந்துகள், போதிய வசதிகள் மற்றும் பணியாளர்கள் இன்றிய நிலையிலும் காயம் அடைந்தவர்களுக்கு சிகிற்சை அளிப்பதற்காக தற்காலிகமாக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து திறந்து இருந்தன.

மறக்க முடியாத ஆயிரக்கணக்கான பல சம்பவங்களில், என்னால் என்றைக்குமே ஞாபகத்தில் வைத்திருக்கக்கூடிய ஒரு சம்பவம் உண்டு- அது கிளஸ்ரர் குண்டுடன் தொடர்புபட்டது.

காலில் ஆழமான காயத்துடன் புதுமாத்தளன் மருத்துவமனைக்கு ஒரு பெண் கொண்டுவரப்பட்டார். அவருக்கு 50 வயது இருக்கும். முழங்காலுக்கு கீழ் அவருக்கு காயம் ஏற்ப்பட்டிருந்தது. அவரது காலை அகற்றாமல் அவருக்கு சிகிற்சை அளிக்கலாம் என்று நினைத்தோம். காயத்தை சுத்தம் செய்தபோது அவரது காலுக்குள் கொள்கலன் ஒன்றுக்குள் வெடிக்காத குண்டு ஒன்று உட்செருகி இருந்ததை கண்டோம் . இது ஒரு கானின் அளவில் இருந்தது. இது வழமைக்கு மாறாக இருந்ததுடன் இதனை ‘கிளஸ்ரர்’ குண்டு என்று அறிந்துகொண்டோம். இது எமக்கு பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. சத்திரசிகிற்சை அறைக்குள் இது வெடித்து மருத்துவர்களையும் பணியாளர்களையும் கொல்லுமோ என்று பயந்தோம். மருத்துவ பணியாளர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் எப்படி இந்த பெண்ணுக்கு சிகிற்சை அளிக்கலாம் என்று ஆராய்ந்தோம். இந்த குண்டு வெடிக்காமல் எப்படி அதை வெளியே எடுக்கலாம் என்று எம்முள் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இந்த செய்தியை அறிந்த சிலர் மருத்துவமையில் இருந்து ஏற்கனவே வெளியேறி இருந்தனர். விரைவாக ஒரு முடிவு எடுக்கப்படவேண்டி இருந்தது. இந்தப் பெண்ணின் காலை குண்டுடன் சேர்த்து அகற்றி அதனை மருத்துவமனையில் இருந்து முடிந்தளவு தூர இடத்துக்கு கொண்டு செல்வதை தவிர வேறு வழி எமக்கு தெரியவில்லை. இதனைத்தான் நாம் செய்தோம். வெட்டப்பட்ட அவரது கால் வாகனம் ஒன்றில் தூர இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

2009 ஜனவரி மாதம் நான் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதான மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது தான் முதன் முதலாக கிளஸ்ரர் குண்டு பற்றி கேள்விப்பட்டிருந்ததுடன் அவை காரணமான காயங்களை கண்டேன். அப்போது சர்வதேச செஞ்சிலுவை அமைப்பு மற்றும் ஐ. நா பணியாளர்கள் மருத்துவமனையில் இருந்தனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர் பொதுமக்கள் மீது கிளஸ்ரர் குண்டுகள் போடப்பட்ட பல சம்பவங்கள் நடைபெற்றன. அப்போது நாம் இரவு பகல் என்று நித்திரை முழித்து பணியாற்றிக்கொண்டிருந்த காலம்.


கிளஸ்ரர் குண்டுகள் பற்றி மட்டுமன்றி ‘ வெள்ளை பொசுபரசு’ குண்டுகள் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருந்தோம். அத்தகைய ஒரு குண்டுதாக்குதல் பற்றி கேள்விப்பட்டு அந்த இடத்துக்கு நான் சென்று பார்த்தபோது அங்கு எரிந்த ‘தீ’ வழமைக்குமாறானதாக காணப்பட்டது. கரும்புகைக்கு பதிலாக வெள்ளை நிற புகை வெளிவந்தது. பின்னர் நான் மருத்துவமனைக்கு சென்றபோது நிலைமை மோசமாக இருந்தது. ஏராளமான மக்கள் காயமடைந்து அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இருந்த சொற்ப வசதிகளைக்கொண்டு அவர்களுக்கு சிகிற்சை அளிக்க மிகவும் சிரமப்பட்டோம். நிலைமை முன்னேற்றமடையும் என்று கருதியதால் மக்கள் மீது இவ்வாறன மோசமான தாக்குதல்கள் பற்றிய சான்றுகளை சேகரிக்கவேண்டும் என்று நாம் அப்போது சிந்திக்கவில்லை.


வன்னியில் மேற்கொள்ளப்பட்ட கிளஸ்ரர் குண்டு தாக்குதல் 
கடந்த 30 வருட கால யுத்தத்தில் தம் மீது எந்தமாதிரியான குண்டுகள் போடப்பட்டன என்ற விபரம் மக்களுக்கு தெரியும். இதனை அவர்களால் வேறுபடுத்தி அறியமுடியும். இந்த அடிப்படையில் தான் ‘கிளஸ்ரர்’ குண்டு தாக்குதல்கள் பற்றி மக்கள் பேச தொடங்கி இருந்தார்கள்.

வலைஞர்மடம் தற்காலிக மருத்துவமனைக்கு அருகே 22 ஏப்பிரல் 2009 இல் நடைபெற்ற கிளஸ்ரர் குண்டு தாக்குதலில் மருத்துவர் சிவமோகன் பலியானார்.

தற்போதுள்ள கேள்வி என்னவென்றால் இவ்வாறு இழைக்கப்பட்ட கொடூரங்கள், குற்றங்களுக்கு நீதியை வழங்குவதற்கும் இவை மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கும் நம்பகத்தன்மையான நடவடிக்கைகளை சர்வதேச சமூகமும் இலங்கை அரசாங்கமும் எடுக்குமா என்பதே ஆகும். அத்துடன், இன்றும் தொடரும் துயரங்களை முடிவுக்கு கொண்டுவர என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்? 


வைத்திய கலாநிதி துரைராஜா வரதராஜாRead More

வேலணை சரவணை கந்தன் தோட்டம் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் புதைந்தது
by kavi siva - 0

யாழ்ப்பாணத்தில் தேர் சில்லு மண்ணுக்குள் புதைந்த காட்சிகள் இதோ (photos) யாழ்ப்பாணம் வேலணை சரவணை கந்தன் தோட்டம் கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த உட்சஷவத்தின் 9ம் திருவிழாவான தேர்திருவிழா நேற்று நடைபெற்ற போது தேர் சில்லு சேற்றுக்குள் புதைந்ததால் தேரில் இருந்து சாமி இறக்கப்பட்டு சகடையில் வீதியுலா வந்த காட்சிகள் இதோ..
Read More

மட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by kavi siva - 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணல் ரமணன், எண்பத்தாறில் போராட்டத்தில் இணைந்தவர். அவருடைய மூத்த சகோதரரும் போராளி. சகோதரியும் இளைய சகோதரரும் போராளிகளாக இருந்தவர்கள்.இன்னுமொரு சகோதரர் பாதை மாறிய ஒரு அமைப்பிலிருந்து விலகி, விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தபோது துரோகிகளால் கொல்லப்பட்டவர். “புலிகளின்” வீடு என்பதாலும் புலிகளை ஆதரிக்கும் வீடென்பதாலும் அவரின் தாயாரின் வீடு படையினரால் குண்டு வைத்துத் தரை மட்டமாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் லெப். கேணல் றீகனின் (முன்னாள் மட்டு மாவட்டத் தளபதி) அணியில் செயற்பட்ட ரமணன், இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் துணிகரமான தாக்குதல்களைச் செய்தவர். பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் மறைந்திருந்து இந்தியக் காலாட் படைமீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றியதால் பாராட்டும் பெற்றவர்.

அதன்பின் தம்பிலுவில் துரோகிகள் முகாம் தாக்குதலுக்கு அணித்தலைவராகச் சென்றிருந்தார். பூநகரி வரலாற்றுச் சமரிலும் பங்கேற்றார். மட்டு நகரில் நியூட்டன் அவர்களின் காலத்திலும் அதற்குப் பின்னரும் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கேணல் ரமணன் குறிப்பிடத்தக்க முறியடிப்புப் புலனாய்வு நடவடிக்கைகள் பலவற்றைச் செய்திருந்தார்.

மதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன் மட்டக்களப்பிலுள்ள சிறிலங்கா படைச் சிப்பாய்களின் சிம்மசொப்பனமாக விளங்கியவர். துரோகிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் திறமை காட்டிய அவர், கருணாவின் சதியை முறியடிப்பதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர்.

கருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டப்பட்ட பின்பும் தாயகத்திற்கு எதிராகச் செய்ய முனைந்த பல சதித் தாக்குதல்களைத் தடுத்த பெருமையும் ரமணனுக்கு உண்டு. சுனாமியின் போது குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நேரடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோதே சிறிலங்கா படைகள் ரமணனைப் பின் தொடர்ந்தமை குறித்தற்குரியது.

அதன்பின் மாவட்டத்தின் துணைத் தளபதியாக படைத்துறை மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்ட அவர், பன்சேனை திலீபன் மருத்துவ நிலையத்தை அமைப்பதற்கு இரவு பகலாக உழைத்தவர்.
தளங்களிலும் மக்களிடையேயும் ஒரு திறன்மிக்க போராளியாகவும், நாவன்மையுடைய பேச்சாளராகவும், விளையாட்டு வீரராகவும், கலைகளில் ஆர்வமுடன் பங்கேற்பவராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள ரமணன், அண்மைக் காலத்தில் தமது இந்திய ஆக்கிரமிப்புக்கால தலைமறைவுப் போராட்ட வாழ்க்கையை படியுங்கள் அறியுங்கள் என்பதை மட்டக்களப்புப் பதிப்பிற்காக எழுத ஆரம்பித்திருந்தார். அனுபவமும், தலைமைத்துவ ஆற்றலும் மண்ணின் இயல்பறிந்த செயற்பாடும் கொண்ட ஒரு தளபதி.

ஈழம் ரஞ்சன்


Read More