Latest News

June 07, 2024

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப் போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம்
by Editor - 0

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையில் நீண்ட காலமாக களமாடி 2009 க்கு பின்னர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த புலனாய்வுத்துறையின் மேலாளர்களில் ஒருவரான விநாயகம் அவர்கள் பிரான்ஸ் நாட்டின் சாவடைந்துள்ளார் . அவரின் இழப்பு குறித்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினர் துயர்பகிர்வு செய்தி ஒன்றினை வெளியிட்டு உள்ளனர். அந்த செய்திக்குறிப்பினை இங்கே அப்படியே பதிவிடுகின்றோம்தமக்கான தனியரசை அமைத்துக் கொள்வதற்காகத் தமிழினம் சுமந்து நின்ற விடுதலைப் போராட்டப் பாதையிலே, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில் பிறப்பெடுத்துக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மாபெரும் இயக்கத்தின் அச்சாணியாகத் திகழும் புலனாய்வுத்துறையின் இயங்குவிசைத் தளத்திலே இமாலய வெற்றிகளையும், சாதனைகளையும் நிகழ்த்தித் தனக்கென ஓர் அத்தியாயத்தை பதிவு செய்து தமிழீழத் தேசியத் தலைவரின் பாராட்டு- தல்களையும் பெற்று மிக நீண்டகாலமாக தமிழீழ நிலப்பரப்பிலும், தமிழீழ எல்லைக்கு அப்பாற்பட்ட எதிரிகளின் தளங்களிலும் சுழன்று வீசிய புலனாய்வுப்போர்முகம் மேலாளர் விநாயகம் (கதிர்காமசேகரம்பிள்ளை- விநாயகமூர்த்தி) அவர்கள் உடல்நலக்குறைவினால் 04.06.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று பிரான்சு நாட்டில் சாவை அணைத்துக் கொண்டார்.  

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதி உச்சமான தியாகங்களும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவங்கள் மிக்க பகுதியாகவும், விடுதலைப் போராட்ட ஆரம்ப காலங்கள் தொட்டே துலங்கிய தமிழீழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சி வரணியைப்பிறப்பிடமாகக் கொண்ட மேலாளர் விநாயகம் அவர்கள் 1983ஆம் ஆண்டு தனது பத்தொன்பதாவது வயது தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிக- ளின் மறைமுகப் போராளிகளுக்கான தகவல் பரிமாற்றம் மற்றும் வழங்கல் உதவியாளராகச் செயற்பட்டுத் தனது முழுமையான நம்பிக்கையினையும், உறுதியையும் நிலைநாட்டினார். பனை, தென்னைகள் நிறைந்த தோப்புகளிலும், நீரேரி கலந்த சதுப்பு நிலங்களிலும் இவர் பாதங்கள் இலட்சியப் பணி தொடர்ந்தன. பின்னர் 1984ஆம் ஆண்டு தன்னை முழுநேரப் போராளியாக மாற்றிக்கொண்டு, தனக்கான அடிப்படைப் பயிற்சியினை தென்மராட்சியிலே நிறைவு செய்து, தென்மராட்சியின் முதற் பொறுப்பாளராக மிகத் துடிப்போடும், மக்களின் நம்பிக்கையாகவும் இருந்த மேஜர் கேடில்ஸ் அவர்களின் பொறுப்பில் ஆர்வம் துடிப்பு. அறச்சீற்றம் விவேகம் விடுதலை இலட்சியம் ஆகிய சிறப்பம்சங்கள் கொண்ட போராளியாகத் தன்னை நிலைநிறுத்தித் தமிழின விடியலுக்காக அயராது உழைத்தார். 

 சிறிலங்கா இராணுவக் கொடூரங்கள்கண்டு கொதித்தெழுந்த விடுதலைப் பற்றுமிக்க பல போராளி களைக்கொண்ட யாழ் மாவட்டத்தின் அன்றைய பொறுப்பாளராக இருந்த கேணல் கிட்டு அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்யும் மேஜர் கேடில்ஸ் அவர்களின் தென்மராட்சி அணியில் மேலாளர் விநாயகமும் ஒருவராக செயற்பட்டார். 1987ஆம் ஆண்டு நாவற்குழி இராணுவமுகாம் மீதானதொரு பாரிய தாக்குதலுக்கான திட்டமிடல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தவேளையில் வெடிபொருள் நிரப்பப்பட்ட நீர்த்தாங்கி வாகனம் தவறுதலாக வெடித்த சம்பவத்தில் லெப்.கேணல்.பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட பதினொரு போராளிகள் வீரச்சாவைத் தழுவிய சம்பவத்தில் மேலாளர் விநாயகம் அவர்கள் விழுப்புண் அடைந்தார்.  

 

விடுதலைக்கான உழைப்பு என்பதில் கால நேரங்களையோ. கடினங்களையோ சுமையாகக் கொள்ளாது சுகமாக ஏற்று இதயச் சுத்தியோடு கடமைகளை முடிக்கும் பக்குவ நிலையால் மக்கள் மனங்களில் நிறைந்து அழியாப்புகழ் கொண்டவர்களே எங்கள் மாவீரர்கள். அத்தகைய வார்த்தைகளுக்குள்ளும், வரலாறுகளுக்குள்ளும் எப்போதும் நிலைத்து நிற்கும் பெரும் பேறு பெற்றவர் மேலாளர் விநாயகம் என்றால் அது மிகையாகாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஆளுகைப் பரப்பென்பது உள்ளக. வெளியகப் பரப்புக்களால் விரிந்து முகவர் கட்டமைப்புத் தொடக்கம் ஈட்டப்படும் பெரு வெற்றிவரை அது தமிழ்த்தேசிய நிழலரசின் ஆணிவேர்ப் பரப்பைத்தாங்கிநிற்கும் நுண்ணிய உயிர்நாடிப் பொறிமுறையாகும். அவதானித்தல், தகவல்களைச் சேகரித்தல், ஒப்புநோக்கல், செவ்வைபார்த்தல், திட்டமிடல். இலக்கைச் சென்றடைதல், எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வெற்றியைப் பெறல், மீண்டும் தளம் திரும்புதல், பகுப்பாய்தல், பொறுப்புக்கூறல்,இப்படியாக நீண்டு செல்லும் ஒவ்வொருகட்டத்திற்கும் தனித்தனியான கடும்பயிற்சியும், தந்திரங்களும், முயற்சியும் இருந்தே ஆகவேண்டும், 

 

இவற்றுக்கெல்லாம் தனது உடலில் எத்தனை உபாதைகள் இருந்தாலும் அவற்றைத் தாண்டி சாதனை நாயகனாக வலம் வந்தார் மேலாளர் விநாயகம் அவர்கள். பல்வேறு பொறுப்பாளர்களின் பொறுப்பின் கீழ் பல்வேறு தளங்களில் ஓயாது உழைத்த மேலாளர் விநாயகம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை வெறுமனே ஓர் அறிக்கையின் மூலமாக நிறுவிவிடமுடியாது. அது தமிழ் இலக்கண, இலக்கியக் கோவைகளால் நிரம்பிய எதிர்கால இளம்தலைமுறை படித்துணரவேண்டிய ஒரு சிறந்த நூலாக அமைய வேண்டும், அதனை உலகப் பரப்பெங்கிலும் வாழும் அவரது தோழமை உறவுகளால் காலக் கிரமத்தில் ஈடேற்றப்படுமென நம்புவோம். புலனாய்வுத்துறைப் போராளியாகவே அறியப்பட்ட மேலாளர் விநாயகம் அவர்கள் தமிழீழ விடுதலைக்காகப் பிரசவமாகிய அத்தனை துறைகளோடும், பிரிவுகளோடும் எத்தகைய நல்லுறவைப்பேணினார் என்பதும், தேசநலன் சார்ந்த தெளிவோடும் குறிப்பாக நேர்மையோடும், அறச்சீற்றத்தோடும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் அவர் எப்போதும் பின்னிற்பதில்லை. 

 

தமிழீழத் தேசியத் தலைவரிடம் பல பாராட்டுக்களைப் பெற்றதோடு தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரால் எப்போதுமே இவரைப் போராளிகளுக்கு எடுத்துக்காட்டாளனாகப் பயன்படுத்தியமையும் வரலாறு தன்னகத்தே தாங்கிக் கொண்டுள்ளது. எமது தனித்துவமான அரசியல் இலக்கினை அடைந்துகொள்வதற்கான போர் முறைகளின் ஒரு வடிவமே ஆயுதப் பொறிமுறை என்பதாகும். அவ் ஆயுதப் பொறிமுறை மூலமாக நிகழ்த்தப்படும் சமாதானம் நோக்கிய மாற்றங்கள் மறக்கப்பட முடியாதவை. அத்தகைய ஒரு மாற்றமாகவே 2001ஆம் ஆண்டு சிறிலங்கா கட்டுநாயக்கா விமான நிலையம் மீதான தாக்குதலாகும், எந்தவொரு பொது மக்களுக்கும் பாதிப்பை உண்டுபண்ணாத வகையில் திட்டமிடப்பட்ட இத்தாக்குதலானது உலகின் கவனங்களை ஈர்த்துக்கொண்டதோடு சிறிலங்கா அரசை சமாதானப் பேச்சுநோக்கி முன்னகரவும் வைத்துள்ளது. இத்தாக்குதலின் பிரதான பொறுப்பாளர்களில் ஒருவராக மேலாளர் விநாயகம் அவர்கள் இருந்தார் என்பதும் வரலாறே. 

 

முள்ளிவாய்க்கால் பெருவெளியாக விரிந்த நெருப்பாற்று நீச்சலில் நின்றபடியே, தலைமையின் கட்டளைக்கு அமைய ஒரு குறிப்பிட்ட அணியோடு வரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தும் சிறப்பு நடவடிக் கையின் நிமித்தம் வாழ்வா? சாவா? எனும் சவால்மிகு தருணத்தை உறுதியோடும், ஓர்மத்தோடும் ஏற்று எதிரியின் குகைக்குள் சென்று கடமையாற்றியமை ஒரு மாபெரும் மயிர்க்கூச்செறியும் வரலாறு. இந்த வரலாற்றுப் பக்கங்களில் அவரோடு களமாடிய சகதோழர்கள் இன்னும் உயிரோடுதான் உள்ளார்கள். ஆனால் அந்தக் காத்திரமான வரலாற்றுப் பக்கங்களைக் கிழித்தெறியவும், இல்லாதொழிக்கவும் அவதூறுகளைப் பரப்பவும் பல நேரடி, மறைமுகத் துரோக முகங்கள் முற்படினும், நிகழ்காலம் பலரை காலமறிந்து அறத்தின்வழியாக கரங்களைக் கட்டிவைத்திருப்பதானது இப்போது துன்பியலாக இருப்பினும் காலம் ஒரு நேர்கோட்டில் அவற்றைத் தெளிவோடு பதிவாக்கி, இந்த மாவீரன் நேசித்த அதே மக்களின் கரங்களில் ஒப்படைக்கும் என்பது திண்ணம். 

பத்தொன்பது வயதில் ஆரம்பித்த விடுதலைப் பணிகளூடாக அறியப்பட்ட இந்த வரலாற்று நாயகன் தனது அறுபதாவது வயதில் விழிமூடிய இந்நாளில் உலகப் பரப்பெங்கிலும் வாழ்ந்துவரும் உறவுகளாகவும், தாயக மக்கள் சார்பாகவும் வீர வணக்கம் செலுத்துவோமாக. 

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 

 

புலனாய்வுத்துறை,  

தமிழீழ விடுதலைப் புலிகள்,  

தமிழீழம் 
NEXT »

No comments