Latest News

April 20, 2025

தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள் நினைவேந்தல்.
by Editor - 0

தமிழீழத் தாயக நிலப்பரப்பிற்குள் அமைதிப்படை எனும் பெயரில் அத்துமீறி நுழைந்து எம் மக்களுக்கெதிராக பெரும் அட்டூழியம் புரிந்த இந்திய வல்லாதிக்கப் படையின் கொடூரங்களுக்கெதிராக சாகும்வரையிலான உண்ணாநோன்பிருந்து அகிம்சை வழியிலான போர் தொடுத்து தமிழீழம் எனும் தனிப்பெரும் கனவுடன் தன்னை ஆகுதியாக்கிய தாய் 'தியாகதீபம்' அன்னை பூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள் இன்று லண்டனில் மிக உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. 




பிரித்தானியாவை தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் 'தமிழீழ சுயநிர்ணய அமைப்பு' ஆனது, இந்த நிகழ்வினை ஏனைய பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து 19/04/2025 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், பெரும் எண்ணிக்கையிலான ஈழ உணர்வாளர்களின் பங்கேற்புடன் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்ததோடு, கலை, பண்பாட்டு ரீதியான தேசிய உணர்வெழுச்சி நிகழ்ச்சிகளும் தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் செயற்பாட்டாளர்களால் மாலை 04:00 மணி வரையில் சிறப்பான முறையில் நிகழ்த்தப்பட்டிருந்தது.   





தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக ஈழத்தின் வீரத் தமிழ்ப் பெண்களின் பேரெழுச்சியானது வளர்ச்சியடைந்த உலக நாடுகளையே உற்றுநோக்கவைத்த பெருமையை தமதாக்கியிருக்கும் நிலையில், அகிம்சை வழியிலான அறப்போராட்டத்திற்கும் நாம் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அகிம்சையை உலகிற்குப் போதித்ததாகக் கூறிக்கொள்ளும் இந்திய வல்லாதிக்கத்திற்கே அகிம்சை என்றால் என்ன என்பதை செயற்பாட்டு ரீதியில் காட்டிய 'தியாக தீபம்' திலீபன் அவர்களின் வழியில் உணர்த்திய எம் உன்னதத் தாய் அன்னை பூபதி அவர்களை தாயகத்தில் எம் உறவுகள் நினைவேந்துகின்ற சம நேரத்தில், பிரித்தானியாவில் இந்த தேசிய உணர்வெழுச்சி நிகழ்வானது  வானிலை சீர்கேட்டுக்கு மத்தியிலும் 'தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால்' சிறப்பான முறையில் அனுஷ்ட்டிக்கப்பட்டுள்ளது. 



எமது தமிழீழத் தாயகமானது, சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களால் அரச நிர்வாக அலகாக வடக்கு மற்றும் கிழக்கு என இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டு எம் தாயக நிலப்பரப்பின் கிழக்கு மாகாணமானது ஒரு பக்கம் சிங்களப் பேரினவாதத்தின் பிடிக்குள் சிக்கி மெல்ல மெல்ல முழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பேரினவாதக் கைக்கூலிகளாகச் செயற்படும் கருணா மற்றும் பிள்ளையான் போன்ற எம் இனத் துரோகிகள் மறுபக்கம் பிரதேசவாதம் பேசிப் பேசி எம் மக்களிடையே குரோதங்களை வளர்த்து அதில் குளிர் காய்ந்துகொண்டிருந்தாலும், துரோகிகளின் மூளைச்சலவைப் பேச்சுக்களைப் புறந்தள்ளி, தமிழ்த் தேசியத் துரோகிகளின் எதிர்பார்ப்புகளில் கரிபூசிவிட்டு, 'தமிழீழம்' எனும் தனித்த தன்னாட்சித் தேசத்தின் எம் தமிழ் உறவுகள் இதுபோன்ற தேசிய உணர்வெழுச்சிச் செயற்பாடுகளில் ஒருமித்துக் கரம்கோர்த்து நிற்பதன் மூலமாக, "தமிழீழம்" எனும் பெருங்கனவை நிச்சயம் ஒன்றுபட்டு வென்றெடுப்போம் என்பதை உலகிற்கு உரக்கக் சொல்லியிருக்கின்றனர் என்பதனையும் 'தமிழீழ சுயநிர்ணய அமைப்பு' இந்த ஊடக அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்திக்கொள்கின்றது.
NEXT »

No comments