Latest News

April 09, 2025

தமிழக அரசியலில் புதிய கட்டமைப்பு – பாஜக இரண்டு வழித் திட்டத்தில் பயணம்?
by Editor - 0

தமிழக அரசியலில் புதிய கட்டமைப்பு – பாஜக இரண்டு வழித் திட்டத்தில் பயணம்?

தமிழக அரசியல் சூழலில் பெரும் மாற்றத்துக்கான சூழ்நிலை உருவாகி வருகிறது. ஒரு பக்கம் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உயிர் பெறும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இன்னொரு பக்கம், பாஜக – நாம் தமிழர் கூட்டணியை உருவாக்கும் பணி தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்தில், அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது முக்கிய பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் இம்முறையில் சாதகமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. எப்போதும் கடுமையாக நடந்து கொள்ளும் அமித் ஷா, இம்முறை இயல்பாக இருப்பது கவனிக்கத்தக்கது.

பேச்சுவார்த்தை முழுக்க முழுக்க அரசியல் குறித்து தான். இதில், எடப்பாடி பேசியதை தம்பிதுரை ஆங்கிலத்தில் அமித் ஷாவுக்கு விளக்கியதாக தகவல்கள் வெளியாகின. முக்கியமாக, "திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுக பிளவுகள் இல்லாமல் இருக்க வேண்டும். ஓபிஎஸ், சசிகலா, தினகரனை மீண்டும் இணைப்பதில் என்ன தடையாக இருக்கிறது?" என அமித் ஷா கேட்டுள்ளார்.

இதே வேளையில், பாஜக – நாம் தமிழர் கூட்டணி உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. சீமானை முதல்வர் வேட்பாளராக முன்வைத்து, 80 சீட்டுகள் நாம் தமிழருக்கு, 80 பாஜகவிற்கு, மீதமுள்ள 74 சீட்டுகள் மற்ற கட்சிகளுக்கு என்ற வகையில் ஒரு திட்டம் டெல்லியில் விவாதிக்கப்படுகிறது.

தற்போது தமிழக பாஜகவில் இரண்டு லாபிகள் (அல்லது அணி) உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒன்று, அதிமுகவுடன் தொடரவேண்டும் என நினைக்கும் அணியினர்.

மற்றொன்று, அதிமுகவை புறக்கணித்து நாம் தமிழருடன் புதிய கூட்டணி உருவாக்க விரும்பும் அணியினர்.

இருபுறத்திலும் களமிறங்கிய நிலையில், 2026 தேர்தல் நேரமாவது எந்த கூட்டணி வெற்றி பெறும்? எந்த அணியின் திட்டம் நிறைவேறும்? என்பதுதான் பார்க்க வேண்டிய கேள்வி.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்ததாகவும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் ஒரு மணி நேரம் பேசியதாகவும் செய்திகள் பரவின. ஆனால் சீமான் இதை மறுத்துவிட்டார். இதுவும் பாஜக – நாம் தமிழர் கூட்டணி குறித்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
« PREV
NEXT »

No comments