உறுதியிழந்த ஓரினத்தின்
ஒப்பாரிகள் வானைப்
பிளந்திட்ட மாதம்!
இறுதிக் களத்திலும்
இறுமாப்புடன் நின்று
போராடிய புலி வீரர்கள்
மௌனித்த மாதம்!
இது வலி சுமந்த மாதம்!
அத்தனை வியூகங்களையும்
மொத்தமாய் வகுத்து
அத்தனை அணிகளையும்
ஒன்றாக நிறுத்தி
உயிர் கொண்ட மண்ணை
பகைவன் வசம் விட்டிடாது
விழ விழ எழுந்து போராடிய
விடுதலை வேங்கைகளை
மண் விதையாக பெற்ற
வலி சுமந்த மாதம்!
தரைவழிப் பாதை
கடல் வந்து சேர
வான் பரப்பில் வல்லாதிக்கம்
வல்லூறாய் வட்டமிட
வலியோடு நின்ற எம்மினம்
வலிமை இழந்து
பலிகளாய்ப் போன
பெரும் வலி சுமந்த மாதம்!
கட்டளைத் தளபதிகள்
விதையாகி விழ... விழ...
கட்டளையிட எவருமில்லா
தனியொரு போராளியும்
தமக்குத் தாமே தளபதியாகி
வீரத்துடன் உயிர் பிரியும் வரை போர்முனையில்
போராடி பேரிழப்பைக் கண்ட
வலி சுமந்த மாதம்!
கொத்துக் குண்டுகளால்
குத்துயிரும் கொலையுயிருமாய்
குருதி ஓட... ஓட...
எம்மினத்தின் உடல் துண்டங்கள்
முள்ளிவாய்க்கால் முற்றமெங்கும்
சிதறிப்போய்க் கிடந்த அவலத்தின்
வலி சுமந்த மாதம்!
அவலத்தின் உச்சத்தை
அரங்கேற்றிய பின்பும்
அடங்காத சிங்களவன்!
ஓரினம் அழிந்து போவதென்பதை
அறிந்த அண்டை நாடுகளும்
வல்லாதிக்க நாடுகளும்
சிங்களத்தோடு கைகோர்த்து
எம்மினத்தை சிதைத்த
வலி சுமந்த மாதம்!
தலை சிதறி முண்டமான தாயின்
உயிர் பிரிந்ததறியாத சிசு
தாயின் மார்பினில்
பால்குடித்த பரிதாபம்!,
கண்முன்னே குண்டுபட்டு
துடி துடித்து இறந்த
இரத்த உறவுகளைக் கடந்து
சென்றிட முடியாமல்
கதறுகின்ற உறவுகளின்
பரிதாபங்கள் கண்ட
வலி சுமந்த மாதம்!
உடலைத் துளைத்து சிதறடிக்கும்
கொடிய நாசகார குண்டுகளால்
பிழிந்து எறியப்பட்ட எம்மினத்தின்
குருதியால் நந்திக்கடல்
சிவந்துகிடக்க
குற்றுயிராய் கிடந்தவர்களை
வல்லூறுகள் இரையாக்க
பெரும் வலியோடு வலுவிழந்த
வலி சுமந்த மாதம்!
கஞ்சிக்குக் கையேந்தி
காத்திருந்த வேளையிலும்
கண்முன்னே வீழ்ந்த குண்டு
வெடித்த கணப்பொழுதில்
பல உடல்களை
கருக்கிப்போன மாயக்குண்டுகளும்,
நிலத்தின் பசுமையினை அழித்த
நச்சுக் குண்டுகளும்
போரியல் விதிகளை மீறி
எம்மினத்தில் ஏவப்பட்ட
வலி சுமந்த மாதம்!
அவயங்களை இழந்து
அவதியுற்று அழுகின்ற
அழுகைகள் வானையும்
மண்ணையும் பிளக்க
சரணடைந்தவர்
கைகளும், கண்களும்
கட்டப்பட்டு மண்ணரணுக்குள்
மண்டியிடவைத்து
சுடப்படும் தருணத்தில் எழுந்த
அவலக் குரல்கள் கதறி ஓய்ந்த
வலி சுமந்த மாதம்!
பிரிவின் பெரும்வலியோடு
பிடிபட்டுக்கொண்ட
பிரியமான உடன்பிறப்புகள்
சிங்கள காம வெறியர்களால்
கற்பழிக்கப்பட்டு கசக்கியெறிந்த
வலி சுமந்த மாதம்!
உலகே வேடிக்கை பார்க்க
உன்னத இனமொன்றின்
குரல் ஊமையாக்கப்பட்டு
ஐ.நா சபையின் பார்வைகள்
குறுகியே குருடாகி..
எம்மினத்தில் பார்வைகள் படாமல் போக,
இந்திய தேசமும் இரத்தாற்றை கண்டும்
இரக்கமின்றி வேடிக்கை பார்த்த
வலி சுமந்த மாதம்!
சிங்களமே! எமை தோற்கடிக்க
எத்தனை நாடுகள் வந்தன என்ற
உண்மைகள் புலர்ந்தன...
ஈழத்தை வெல்ல உன்னால் முடியாது
என்ற எம் வீரத்தின் தன்மை
உணர்ந்து கொண்ட
வலி சுமந்த மாதமிது!
- அபிராமி கவிதன்
No comments
Post a Comment