Latest News

January 30, 2011

உங்கள் அடுத்த கம்ப்யூட்டராகும் ""டேப்ளட் பிசி''
by admin - 0

கம்ப்யூட்டர் உலகம் தற்போது நான்கு முனைச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் எட்டு எடுத்து வைப்பது என்று புரியாமல் உள்ளது. இன்றைக்கு பலருக்கு, முதல் கம்ப்யூட்டர் எது என்றால் அது பெர்சனல் கம்ப்யூட்டராக இல்லை. ஸ்மார்ட் போனாகத்தான் உள்ளது. ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் நாம் எங்கு சென்றாலும் உடன் வருகின்றன. அதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. எவ்வளவுதான் திறனுடன் செயல்பட்டாலும், ஒரு ஸ்மார்ட் போன், பெர்சனல் கம்ப்யூட்டராக முழுமையாக இடம் பெறாது. எனவே தான் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும், ஸ்மார்ட் போனுக்கும் இடையே ஒரு சாதனம் இரண்டின் பயன்பாட்டினையும் முழுமையாகத் தரும் வகையில் தேவையாய் இருந்தது. அந்த இடத்தில் டேப்ளட் பிசி வந்து நம் தேவைகளை நிறைவு செய்து வருகிறது. இதனால், கம்ப்யூட்டர் பயன்பாடு தற்போது இரு வகை கணினிகளில் மேற்கொள்ளப்பட்டு, எதில் தொடர்வது என்ற கேள்விக் குறியுடன் தொடர்கிறது. ஆனால், அண்மையில் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து முடிந்த தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பட்டயக் கணிப்பொறிகளைக் (Tablet PC) காண்கையில், அதன் மாடல் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்கையில், இவை மொத்தமாக மக்களை சென்றடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது. எனவே நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அதன் சில அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
1. பழைய மாடலில் மாற்றம்: தற்போதைய டேப்ளட் பிசி இதன் முன்னோடிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. முதலில் ஒரு டேப்ளட் பிசி, லேப்டாப் கம்ப்யூட்டரில், சுழலும் திரை ஒன்றை இணைத்தது போல வடிவமைக்கப்பட்டது. ஆனால் மக்களிடம் இவை எடுபடவில்லை. பின்னர், ஸ்மார்ட் போன் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் சாதனம் உண்டாக்கிய சலசலப்பும், மக்களை புதிய கோணத்தில் பார்க்க வைத்தது. ஐ-பேட் இதுவரை டேப்ளட் பிசி குறித்து நிலவி வந்த அம்சங்களை மாற்றிப் போட வைத்தது. அந்நாளைய காம்போசிசன் நோட்டுப் போல தோற்றத்தில் பல டேப்ளட் பிசிக்கள் வடிவமைப்பு கொண்டுள்ளன. அனைத்தும் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
2. புதிய ஸ்லேட்கள்: பல டேப்ளட் பிசிக்கள் புதிய டிஜிட்டல் ஸ்லேட்டுகளாகத்தான் வடிவம் பெற்றுள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட். 9.5 அங்குல அகலத்தில், 7.5 அங்குல உயரத்தில், 0.5 அங்குல தடிமனில் இது வெளியான போது, இதுவே டேப்ளட் பிசிக்களின், வரையறுக்கப்பட்ட வடிவமாக அமைந்துவிட்டது. பின்னர் சாம்சங் கேலக்ஸி டேப் 7 அங்குல திரையுடன் அறிமுகமான போது, கைகளுக்குள் அடங்குவதற்கான சரியான அளவு அது என வரையறை செய்யப்பட்டது. தற்போது நாம் விரும்பும் அளவில் திரையுடன் கூடிய டேப்ளட் பிசிக்களை தேர்ந்தெடுக்கலாம். டேப்ளட் பிசிக்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நிச்சயம் இது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
3. ஆப்பரேட்டிங் சிஸ்டம்: பிரியமான அளவில் டேப்ளட் பிசிக்கள் தயார் ஆவது மட்டுமின்றி, இவற்றின் இயக்கத்திற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் ஐபோன், ஐபேட், ஐ பாட் டச் ஆகியவற்றில் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முன்னணியில் உள்ளது. அடுத்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இடம் பெறுகிறது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன், 12க்கும் மேற்பட்ட புதிய டேப்ளட் பிசிக்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் 1.6, 2.0, 2.1 மற்றும் 2.2 எனப் பல பதிப்புகளில் கிடைக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, டேப்ளட் பிசிக்கானதாகக் கொண்டு வந்துள்ளது. பிளாக்பெரியைத் தயாரிக்கும் ஆர்.ஐ.எம். நிறுவனம், QNX என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு வகையாகும். டேப்ளட் பிசி தயாரிப்பில், பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறிய நிறுவனங்களும், தங்கள் பங்கைப் பிடிக்க பலத்த போட்டியில் இறங்கி உள்ளன.
4. நிறைய எதிர்பார்ப்புகள்: இத்தனை மாடல் டேப்ளட் பிசிக்களும் போட்டியில் இறங்கியுள்ள நிலையில், இவற்றில் மக்கள் எதிர்பார்க்கும் அம்சங்களும் அதிகரித்து வருகின்றன. எங்கும் எடுத்துச் செல்லுதல், நெட்வொர்க் இணைப்பு பெறுதல் ஆகிய ஸ்மார்ட்போன் வசதிகளுடன், லேப்டாப் ஒன்றின் செயல்பாடுகளையும் இணைத்துத் தருவதால், குறிப்பாக பெரிய திரை, அதிக திறனுடன் கூடிய ப்ராசசர் மற்றும் கேமரா மற்றும் துணை சாதனங்கள் கொண்டு இவை இருப்பதனால், பயன்படுத்துபவர்கள் இதில் இன்னும் பல வேலைகளை முடிக்கப் பயன்படுத்துமா என்று எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, இயங்கும் இடத்திற்கேற்ற வகையில் இணைய தகவல்களைத் தரும் பணிகளில், டேப்ளட் பிசிக்கள் தங்கள் ஜி.பி.எஸ். திறனுடன் செயல்படுவதால், இவற்றின் பயன்களின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. மேலும் முன் பகுதியிலும் தரப்படும் கேமரா, வீடியோ கான்பரன்சிங் வசதியை மிக எளிதாகத் தருகிறது. இவை சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுடனான தொடர்பை இன்னும் எளிதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகின்றன.
டேப்ளட் பிசிக்கள், தற்போது கையாளப்படும் மொபைல் கேமிங் வசதிகளை இன்னும் சிறப்பாக்கும். ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் மார்க்கட் தளங்களில் ஹை டெபனிஷன் முப்பரிமாண விளையாட்டுக்கள் இதற்கெனவே குவிந்து கிடக்கின்றன. பலர் ஒரே நேரத்தில் வேறு வேறான இடங்களிலிருந்தவாறே விளையாடுவது டேப்ளட் பிசிக்கள் மூலம் மிக எளிதாகும்.
குறைந்த கட்டணத்தில், எப்போதும் இணைய இணைப்பில் இருக்கும் வகையிலான கம்ப்யூட்டர்களை, டேப்ளட் பிசிக்கள் தரும். பெரும்பாலான டேப்ளட் பிசிக்கள், வை-பி மற்றும் 3ஜி தொடர்பினைத் தரும் வகையில் வடிவமைக்கப்படுவதால், நெட்வொர்க் இணைப்பு எளிதாகும்.
5. சில தடைகள்: டேப்ளட் பிசிக்கள் மக்களை முழுமையாக அடைவதில் சில தடைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. முதல் தடை வெவ்வேறான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும், அவற்றைத் தரும் மிகப் பெரிய நிறுவனங்களுமே. முதல் மூன்று நிறுவனங்களான, ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் இந்தப் பிரிவில் தங்களின் ஏகாதிபத்தியத்தினை நிறுவ முயற்சிக்கும்.இவர்களின் போட்டியில் வெற்றியைத் தீர்மானிப்பது, ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம் களைப் பொறுத்தே அமையும். இவற்றில் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் தங்களின் சிஸ்டங்களில் இயங்கும், அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு ஒப்புதல் கொடுப்பதுவும் பிரச்சினையைத் தரும் வகையில் இருக்கும்.
6. யார் வாங்க வேண்டும்?: நீங்கள் புதுமை எதனையும் சோதனை செய்து பார்க்க விரும்பாதவராக இருந்தால், இப்போதைக்கு டேப்ளட் பிசியிடம் செல்ல வேண்டாம். எந்த புதிய சாதனம் கிடைத்தாலும், அதன் பலனை உடனே பெற வேண்டும் என்ற வேட்கை உடையவராக இருந்தால், அப்ளிகேஷன் புரோகிராம்கள் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் உடையவராக இருந்தால், தாராளமாக, டேப்ளட் பிசி ஒன்றினை வாங்கிப் பயன்படுத்தலாம். மொபைல் இணைய உலா, அகலமான திரை, இருட்டிலும் நூல்களைப் படிக்கும் வசதி, வீடியோ ஓட்டம், மொபைல் இமெயில் ஆகியவை உங்களுக்கு பிரமிப்பினைத் தரும். பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனும் இயங்கும் வகையில் கிடைக்கின்றன. ஆப்பிள், சாம்சங். எச்.பி. போன்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்களுடன், டெல், ஏசர் நிறுவனங்களின் டேப்ளட்களும் தற்போது மார்க்கட்டில் இறங்குகின்றன. இதில் நெட்புக் கம்ப்யூட்டர் விற்பனையில், உலக அளவில் 36% பங்கினைக் கொண்டுள்ள ஏசர் நிறுவனம் , 4.8 மற்றும் 10 அங்குல திரைகளுடன் இவற்றை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதே வகையில் டெல் நிறுவனமும் இறங்கியுள்ளது. பெயர் பெற்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசியின் விலை ரூ.32,000 முதல் ரூ. 40,000 வரை செல்கிறது. அதிகம் பிரபலமாகாத சீனத்து டேப்ளட் பிசிக்கள், இணைய தளம் மூலமாகவும் சில ஏஜன்சிகள் மூலமாகவும் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ. 9,000 முதல் ரூ.24,000 வரை உள்ளன. பெங்களூரைச் சேர்ந்த நோஷன் இன்க் (Notion Inc) என்ற நிறுவனம், ஐ-பேடில் உள்ளதைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் கொண்ட டேப்ளட் பிசி ஒன்றை ரூ. 20,000 என்ற அளவில் தருவதாக அறிவித்துள்ளது. இதே போல ஆலிவ் பேட் என்ற 3ஜி வசதி கொண்ட 7 அங்குல திரை கொண்ட டேப்ளட் பிசி ரூ. 22,000க்குக் கிடைக்கிறது. இவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தால், நிச்சயம் இந்த சந்தையில் வெற்றி பெறும். முதல் வெற்றி பெற்றால், லாபமும் அடையும். மக்களும் பயன் பெறுவார்கள். பெரிய நிறுவனங்கள், இந்த டேப்ளட் பிசிக்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை அதிக அளவில் சந்தையைப் பிடிக்கும் போட்டியில் இனி பலமாக இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், டேப்ளட் பிசி ஒருவரின் இரண்டாவது கம்ப்யூட்டராகத்தான் மக்களால் முதலில் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. பெரும்பான்மை யானவர்களால் இயக்கப்படும் விண்டோஸ் இயக்கம் முழுமையாக, டேப்ளட் பிசியில் இயங்கும் நிலை வரும்போதுதான், டேப்ளட் பிசிக்கள் பெரிய அளவில் பெருகும்.

Read More

வளமான வாழ்விற்கு வருடம் ஒரு கன்று
by admin - 0

பால்பண்ணைத் தொழில் இன்று விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வருமானம் அளிக்கக்கூடிய சிறந்த தொழிலாக அமைந்திருக்கிறது. பண்ணையிலுள்ள மாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு மாடுகள் எப்போதும் கறவையிலிருக்குமாறு பராமரித்தால் பால் பண்ணைத் தொழில் அதிக லாபம் அடைய வாய்ப்புண்டு. இதுபோன்ற மேன்மையை அடைய பசுக்கள் 12 அல்லது 13 மாதங்களுக்கு ஒரு முறை கன்று ஈன வேண்டும். அவ்வாறு ஈன்றால் வருடம் ஒரு கன்று நமக்கு கிடைப்பதுடன் நம்முடைய வாழ்வும் வளமாக செழிக்க வாய்ப்புண்டு.
கன்று ஈன்ற பசுக்கள் பராமரிப்பு: பொதுவாக பசுக்கள் கன்று ஈன்றபின் 45 நாட்களுக்குள் முதல் சினைத் தருணத்தை வெளிக்காட்டும். அதன்பின் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைத் தருணத்தை வெளிப் படுத்தும். மாடுகள் கன்று ஈன்றபின் 60 முதல் 90 நாட்களில் கருத்தரிக்கச் செய்ய வேண்டும். கருவூட்டலுக்குரிய அறிகுறிகள் எதுவும் வெளித்தெரியாவிட்டால் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி முறையான சினை சம்பந்தப்பட்ட பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். கருவூட்டலுக்குப் பின் மூன்று மாதம் கழித்து கால்நடை மருத்துவரிடம் மறுபடியும் நம்முடைய பசுவினை காண்பித்து சினைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சினைமாடுகள் பராமரிப்பு: பசுக்களில் சினைக்காலம் சுமார் 285 நாட்கள் அதாவது 9 மாதம் 2 வாரம் 1 நாள். எருமைகளின் சினைக்காலம் சற்று அதிகம். அதாவது சுமார் 310 நாட்கள். சினைப்பருவத்தில் போதுமான அளவு கலப்புத் தீவனம், பசும்புல் மற்றும் தாது உப்பு முறையான அளவில் கொடுக்க வேண்டும். சினைப்பட்ட 7ம் மாதம் கழித்து முதல் கன்று வளர்ச்சிக்கென நாள் ஒன்றிற்கு 3.0 கிலோ கலப்பு தீவனம் கொடுக்கப்பட வேண்டும்.
சினைப்பட்ட 7ம் மாதம் முதல் பால் கறப்பதையும் படிப்படியாகக் குறைத்து மடியை வற்றச் செய்ய வேண்டும். கன்று ஈனுவதற்கு 3 நாட்கள் முன்னும், பின்னும் கலப்புத் தீவனத்தைக் குறைத்து, மலம் கட்டாதவாறு இளகிய தீவனமாகக் கொடுக்க வேண்டும். கன்று ஈன்று 8 மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி தானாக வெளியில் வந்துவிடும். கன்று ஈனுதல், நஞ்சுக்கொடி விழுதல் போன்றவற்றில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் உடன டியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாடவேண்டும். எவ்வளவு சீக்கிரம் மருத்துவரை அணுகி சிகிச்சை முறையை மேற்கொள் கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய பசுவினை இறப்பிலிருந்து காப்பாற்றலாம்.
பருவத்திற்கு வருதல்: பொதுவாக கலப்பினக் கிடேரிகள் 15 முதல் 18 மாத அளவில் பருவத்திற்கு வந்துவிடும். நாட்டு இனங்கள் 24 முதல் 30 மாத வயதில் பருவத்திற்கு வரும். பருவத்திற்கு வரும் கிடேரியின் எடை சுமார் 150 கிலோ இருக்க வேண்டும். மாடுகள் 21 நாட்களுக்கு ஒரு முறை பருவத்திற்கு வரும். சினைப்பருவ காலம் சுமார் 12 முதல் 18 மணி நேரம் வரை காணப்படும். காலையில் சினைப்பருவ அறிகுறிகள் தோன்றினால், அன்று மாலையிலும், மாலையில் அறிகுறிகள் தோன்றினால் மறுநாள் காலையிலும் கருவூட்டல் செய்ய வேண்டும்.
கருவூட்டல் செய்த பின் சினைத்தருண அறிகுறிகள் மறுபடியும் தோன்றுகின்றதா என்பதைக் கவனமாக கண்காணித்து வரவேண்டும். அடுத்த 21 நாட்களில் சினைத் தருண அறிகுறிகள் தோன்றினால், கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும். அல்லது மீண்டும் கருவூட்டல் செய்துகொள்ள வேண்டும். சினைத்தருண அறிகுறிகள் தோன்றவில்லை எனில் சுமார் 3 மாதம் கழித்து கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சினைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
Read More

January 21, 2011

விண்டோஸ் சேப் மோட் ஏன் ? எதற்காக ?
by admin - 0

மிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத்தைத் தரும் சிஸ்டமாக அமைந்துவிடுகிறது. குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணைத்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும். உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென புதிய தோற்றத்தில் கம்ப்யூட்டர் திரை காட்சி அளிக்கும். நான்கு மூலைகளிலும் Safe Mode என்ற சொற்கள் காட்டப்படும். இது என்ன?
வழக்கமான முறையில் இயக்கத்தினைத் தொடங்க முடியாமல் விண்டோஸ் தத்தளிக்கையில், விண்டோஸ் தான் இயங்க ஒரு எளிய வழியைத் தேர்ந்தெடுக்கிறது. விண்டோஸ் இயக்கத் தொகுப்பில் அல்லது வேறு இடத்தில் எத்தகைய தவறு நேர்ந்துள்ளது எனக் கண்டறிய, விண்டோஸ் தானாக வழங்கும் ஒரு வழி இது. இந்த வழியைக் கண்டறிந்து சரி செய்த பின், இதனை மீண்டும் இயக்கினால், விண்டோஸ் வழக்கம்போல தனக்கு வேண்டிய வழியில் இயங்கத் தொடங்கும். விண்டோஸ் சேப் மோடில் இயங்குகையில், வழக்கமான இயக்கம் இல்லாமல், மாறுபாடான சில வழிகளைக் கையாள்கிறது. அவை என்னவெனப் பார்க்கலாம்.
1. சேப் மோடில் autoexec.bat அல்லது config.sys பைல் இயக்கப்பட மாட்டாது.
2.பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் போன்ற பல துணை சாதனங்களுக்கான டிரைவர்கள் இயக்கப்படாமல் இருக்கும். இந்த ட்ரைவர்கள் தான், அந்த துணை சாதனங்களுக்காக கம்ப்யூட்டருக்கு அவை குறித்து அறிவித்து, இயங்குவதற்குத் துணை புரிபவை.
3. வழக்கமான கிராபிக்ஸ் டிவைஸ் ட்ரைவருக்குப் பதிலாக, சேப் மோடில் ஸ்டாண்டர்ட் விஜிஏ கிராபிக்ஸ் மோட் பயன்படுத்தப்படும். இந்த வகை கிராபிக்ஸ், விண்டோஸுக்கு இணையாக இயங்குகின்ற அனைத்து வீடியோ கார்ட்களையும் சப்போர்ட் செய்திடும்.
4. config.sys script பைலின் ஒரு பகுதியாக லோட் செய்யப்படும் himem.sys என்னும் பைல், சேப் மோடில் testmem:on என்ற ஸ்விட்சுடன் இணைத்து தரப்படும். இந்த ஸ்விட்ச், கம்ப்யூட்டருக்கு, இயக்கத்தினைத் தொடரும் முன் அதன் மெமரியை சோதனையிடச் சொல்லி நினைவூட்டும்.
5. விண்டோஸின் மற்ற பைல்கள் எங்கு உள்ளன என்பதற்கான தகவல்களைக் கண்டறிய, சேப் மோட் msdos.sys என்ற பைலைச் சோதனையிடும். இந்த பைலைக் கண்டறிந்த பின்னரே, சேப் மோடில் விண்டோஸ் லோட் ஆகும். அப்போது win /d:m என்ற கட்டளையைப் பயன்படுத்தும். விண்டோஸ் பைல்களைக் கண்டறிய முடியவில்லை என்றால், command.com என்ற பைலை இயக்கும். இதன் மூலம் சி ட்ரைவில் கமாண்ட் ப்ராம்ப்ட் இயக்கப்படும்.
6. விண்டோஸ் வழக்கமாக system.ini என்ற பைலுக்குப் பதிலாக, system.cb என்ற தொகுப்பு (batch) பைல் ஒன்ற இயக்கும். இந்த பைல் அனைத்து விர்ச்சுவல் டிவைஸ் ட்ரைவர்கள் (Virtual Device Drivers – VxDs) என்று அழைக்கப் படும், சாதனங்களை இயக்குவதற்கான ட்ரைவர் பைல்களை லோட் செய்திடும். இதுவே கம்ப்யூட்டரின் முக்கிய பாகங்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிடும்.
செட்டிங்ஸ் லோட் செய்திடும். அப்போது பூட் மற்றும் சார்ந்த வரிகளை விலக்கிச் சென்று செயல்படும். மேலும் 7. சேப் மோடில் வழக்கமான system.ini பைலுடன் win.ini மற்றும் Registrywin.ini பைலில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த புரோகிராமையும் இயக்காது.
8. விண்டோஸ் டெஸ்க் டாப் 16 வண்ணங்களில் லோட் ஆகும். இதன் ரெசல்யூசன் பிக்ஸல்கள் 640 x 480 என்ற வகையில் இருக்கும். “Safe Mode” என்ற சொற்கள் ஒவ்வொரு மூலையிலும் காட்டப்படும். தன் முதல் முயற்சியில் இயங்க முடியவில்லை என்றால், விண்டோஸ் தானாக, சேப் மோடில் இயக்கத்தைத் தொடங்குகிறது. நாமும் சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கத்திற்கான ஸ்விட்சை இயக்கியவுடன், தொடர்ந்து பூட் மெனுவின் போது F5 அல்லது F8 என்ற கீயை அழுத்தி சேப் மோடுக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வரலாம்.
சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கினால், நாம் என்ன செய்ய வேண்டும். முதலில், கம்ப்யூட்டரை வழக்கமாக பூட் செய்திட இயலாமல், எது தடுத்தது என்று கண்டறிய வேண்டும். ஏதேனும் புதியதாக, ஒரு ஹார்ட்வேர் சாதனத்தினை இணைத்திருந்தால், கண்ட்ரோல் பேனல் சென்று அதனை நீக்கவும். அதற்கான ட்ரைவர் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை முழுமையாக நீக்கவும். நீக்கிவிட்டு மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். விண்டோஸ் வழக்கம்போல இயங்கத் தொடங்கினால், அந்த சாதனத்தின் ட்ரைவர் பைலுக்கும், விண்டோஸ் இயக்க பைலுக்கும் பிரச்னை உள்ளது என்று அறிய கிடைக்கும். இதே போல ஏதேனும் கேம்ஸ் இன்ஸ்டால் செய்திருந்தாலும், நீக்கிப் பார்க்கவும். கண்ட்ரோல் பேனலில் Add/Remove Programs மூலம் நீக்கலாம். பிரச்னை புதிதாக இணைக்கப்பட்ட சாதனம் அல்லது சாப்ட்வேர் மூலம் இல்லை என்றால், உங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி ஏதோ ஓர் இடத்தில் கெட்டுப் போயிருக்கலாம். ரீ பூட் செய்வதன் மூலம் ரெஜிஸ்ட்ரி தானே சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. ரெஜிஸ்ட்ரி பைலை அண்மைக் காலத்தில் பேக் அப் செய்து வைத்திருந்தால், அதனை, இந்த ரெஜிஸ்ட்ரி பைல் உள்ள இடத்தில் காப்பி செய்து இயக்கலாம். இல்லையேல் விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதனைத் தவிர வேறு வழியில்லை.
Read More

January 18, 2011

விக்கிபீடியா 10 ஆண்டுகள்
by admin - 0

சென்ற ஜனவரி 15ல் இணையத்தின் கட்டற்ற தகவல் கலைக் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவிற்கு 10 வயதாகிறது. உலகின் பல நாடுகளில், இந்தியா உட்பட, இது கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவு சார் தகவல்களை சேர்ப்பதிலும், பகிர்ந்து அளிப்பதிலும் இந்த தளம், மனித சரித்திரத்தில் புதிய புரட்சிகரமான வரலாறு படைத்து வருகிறது. இன்றைக்கு ஏறத்தாழ ஒரு கோடியே 70 லட்சம் கட்டுரைகளுடன் (யாரும் அவற்றைத் திருத்தலாம்) தமிழ் உட்பட, 270 மொழிகளில் இந்த கலைக் களஞ்சியம் சேவை செய்து வருகிறது. இதில் பதிந்துள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 30 லட்சம். கூகுள், மைக்ரோசாப்ட், யாஹூ, பேஸ்புக் ஆகிய தளங்களுக்குப் பின் அதிகம் பேர் பார்க்கும் தளமாக விக்கிபீடியா உள்ளது.
இதனை நடத்தி வரும் விக்கிமீடியா பவுண்டேஷன் அமைப்பிற்கு எந்த வருமானமும் இல்லை. 50 ஊழியர்களுடன், நன்கொடையைக் கொண்டே இது நடத்தப்பட்டு வருகிறது. விக்கிபீடியா தளங்களில் விளம்பரங்களைப் போடக் கூடாது என்பது அதன் கொள்கை. அண்மையில், பல வேண்டுகோள்கள் மூலம், ஒரு மாதத்தில் இந்நிறுவனத்திற்கு வந்த நன்கொடை ஒரு கோடியே 65 லட்சத்து 50 ஆயிரம் டாலராகும். ஏறத்தாழ 140 நாடுகளில் வாழும் மக்கள் நன்கொடை அளித்துள்ளனர். இந்தியாவிலும் பல பெரிய மற்றும் சிறிய நகரங்களில் விக்கிபீடியாவின் 10 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. தமிழிலும் விக்கிபீடியா தளம் உள்ளது. இதனைக் காண http://ta.wikipedia.org என்ற முகவரிக்குச் செல்லவும். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தான் விக்கிமீடியா பவுண்டேஷன் அலுவலகம் அமைக்கப்படுகிறது. இது இந்தியாவிற்குப் பெருமை தான். அநேகமாக ஹைதராபாத் நகரில் இது அமைந்திடும். இந்தியாவில் 10 மொழிகளில் இதன் தளம் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
Read More

மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
by admin - 0

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 மற்றும் 8 பயன்படுத்துபவர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதில் உள்ள சில பிழை வாயில்கள் மூலமாக, பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்களுக்குள், ஹேக்கர்கள் தங்களின் கெடுதல் புரோகிராம்களை அனுப்பி எளிதாக அந்த கம்ப்யூட்டர்களின் செயல்பாட்டினைக் கைப்பற்ற முடியும் எனக் கூறியுள்ளது. இவர்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்குப் பலவித ஆசை காட்டி, ஒரு குறிப்பிட்ட முகவரியில் உள்ள இணைய தளத்திற்கான தொடர்பில் கிளிக் செய்திடத் தூண்டுகின்றனர். அந்த தளம் திறக்கப்பட்டவுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள பிழைவழிகளைப் பயன்படுத்தி, மால்வேர் புரோகிராகள் அனுப்பப்படுவது இவர்களுக்கு எளிதாகிறது. பிரவுசர்கள் கம்ப்யூட்டர் தரும் மெமரியினைத் தங்கள் தேவைகளுக்கு ஏற்றபடி செயல்படுத்துகையில், இந்த ஹேக்கர்களின் புரோகிராம் அதற்கான குறியீடுகளை அனுப்புகிறது. பின்னர் அவற்றின் மூலம் கம்ப்யூட்டரைக் கைப்பற்றுகிறது. இதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்த மைக்ரோசாப்ட் முயன்று வருகிறது.
Read More

தென்னையில் ஊட்டச்சத்து
by admin - 0

தென்னையில் ஒரு குலையில் சுமார் 40 முதல் 50 வரை குரும்பைகள் தோன்றினாலும் குறைந்த அளவே தேங்காய்களாக மாறுகின்றன. மற்றவை உதிர்ந்துவிடுகின்றன. அதிகமாக குரும்பைகள் உதிர்வதற்கு வறட்சி, மோசமான தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்து குறைவு, ஹார்மோன்கள் எனப்படும் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் மண்ணின் களர் உவர் தன்மைகள் ஆகியவை முக்கிய காரணங்களாகும். இவைகளில் நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் பற்றாக்குறைகளை வேர்மூலம் டானிக் செலுத்துவதால் நிவர்த்தி


செய்துவிடலாம். பயன்கள்: முக்கியமான சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்கின்றன. இலைகளில் பச்சையம் அதிகரித்து ஒளிச்சேர்க்கை மேம்படுவதால் மரத்தின் வளர்ச்சி அதிகரிக்கிறது. உயிர்வேதியியல் பணிகளுக்குத் தேவைப்படும் மூலப்பொருட்களான ஊட்டச்சத்துக்கள் தடையின்றி கிடைப்பதால் மரத்தின் வீரியம் அதிகரிக்கின்றது. போரான் மற்றும் துத்தநாகம் போன்ற நுண்ணூட்டங்களும் ஆக்சின் போன்ற வளர்ச்சி ஊக்கியும், டானிக்கில் உள்ளதால் குரும்பைகள் உதிர்வதும் ஒல்லிக்காய்கள் உற்பத்தியாவதும் வெகுவாக குறைகின்றது. பூச்சி, நோய், வறட்சி மற்றும் தட்பவெப்ப நிலைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இயற்கையான எதிர்ப்புசக்தி மரத்தில் உருவாக்கப்படுகிறது.


வேர்மூலம் ஊட்டச்சத்து செலுத்தும் முறை: மரத்திலிருந்து இரண்டு முதல் மூன்று அடி தள்ளி சுமார் நான்கு அங்குல ஆழத்திற்குக் கீழ் உறிஞ்சும் வேர்கள் அமைந்திருக்கும். இந்தப்பகுதியில் பென்சில் கனமுள்ள மஞ்சள் நிற வேர் ஒன்றை தேர்வு செய்து வேரின் நுனியை மட்டும் கத்தி அல்லது பிளேடு உபயோகித்து சாய்வாகச் சீவி விடவும். பின்னர், டானிக் உள்ள பையின் அடிவரை வேரை நுழைத்து, வேரையும் பையின் மேல் பாகத்தையும் நூலால் கட்டிவிடவும். மண்ணில் ஈரத்தன்மை குறைவாக இருந்தால் ஒரு மணிநேரத்தில் டானிக்கை வேர் உறிஞ்சிவிடும். எனவே வெயில் நேரத்திலும் அல்லது பாசனத்திற்கு முன்பும் டானிக்கை கட்டிவிட்டால் வேர் விரைவாக உறிஞ்சிவிடும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.
ஒரு மரத்திற்கு 200 மில்லி டானிக் தேவை. இதை பாலிதீன் பையில் அடைத்து சீலிட்டு ரூ.5க்கு விற்கப்படுகிறது. நீண்டதூர விவசாயிகளின் நலன் கருதி, அடர்திரவம் தயாரித்து, 2, 5, 10 மற்றும் 20 லிட்டர் கேன்களில் விற்பனை செய்யப்படுகிறது. உதாரணமாக 10 லிட்டர் அடர் திரவத்துடன் 40 லிட்டர் குடிநீர் சேர்த்து 50 லிட்டர் டானிக் தயாரிக்கலாம். இதிலிருந்து 200 மில்லி வீதம் பாலிதீன் பையில் ஊற்றி ஒவ்வொரு மரத்திற்கும் கட்டிவிடலாம். ஆகவே, 10 லிட்டர் டானிக்கை 250 மரங்களுக்கு கொடுக்கலாம். அடர் திரவத்தின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.125. தேவையான பாலிதீன் பைகள் இலவசமாக தரப்படும். கேன் விலை கூடுதலாக வசூலிக்கப்படும். அடர் திரவத்தை நீண்ட தூரத்திற்கு எளிதாக எடுத்துச்சென்று பின் தேவைக்கேற்ப விவசாயிகளே தண்ணீர் சேர்த்து டானிக் தயார் செய்துகொள்ளலாம்.
Read More

January 10, 2011

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9
by admin - 0

இதுவரை தயாரித்து வழங்கிய இணைய பிரவுசர் தொகுப்பு பதிப்புகளில், அதிகப் பேராவலுடன் மைக்ரோசாப்ட் ஈடுபட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 என்றால் அது மிகையாகாது. பிரவுசர் சந்தையில் எப்படியும் தன் இடத்தை விட்டுவிடக் கூடாது என்ற முயற்சியில் அனைத்து பிரிவுகளிலும் உயர்ந்த இலக்குகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரவுசராக, இது உள்ளது. இதன் சோதனைத் தொகுப்பினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திய அனைவரும் இந்த கருத்தினைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அமைந்த இதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை இங்கு காணலாம். இந்த பிரவுசர் தொகுப்புடன், பிரவுசரை, பிரவுசராகத் தராமல் அதற்கும் மேலாக ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாக மைக்ரோசாப்ட் வடிவமைத் துள்ளது. இப்போது கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையோர், இணையத்திலேயே இயங்கு கின்றனர். அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தும் இணையத்திலேயே பெறப்பட்டு பயன்படுத்தப்படும் முழுமையான காலம் வெகு தூரத்தில் இல்லை. இந்நிலையில் இணையப் பக்கங்களை, ஒரு பிரவுசர் மட்டுமே தர முடியும் என்று எண்ணுவது பொருத்தமில்லை என்று மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. மேலும் ஒரு பிரவுசரில், தேவைப்படும் அப்ளிகேஷன் களையும் பதித்து வழங்க முடியும் என்ற நிலையும் இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய பிரவுசர் பதிப்பில், திறன் கூடிய ஹார்ட்வேர் மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் செயல்பாடு உதவியுடன், பிரவுசரின் இயங்கு திறன் வியக்கத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய இணையப் பக்கங்களின் வரையறைகள் அனைத்தும் இதில் மேற்கொள்ளப்படும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.
புதிய இன்டர்பேஸ்: இந்த பிரவுசரின் புதிய முகப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பிரவுசரின் முகம் மறைக்கப்பட்டு, பார்க்கப்படும் இணையப் பக்கம் முழுமையாகத் தெரிகிறது. டைட்டில் பாரில் லோகோ மற்றும் பெயர் இல்லை. தரப்படும் இணையப் பக்கத்தைச் சுற்றி ஒரு கட்டமாகத்தான் இது தரப்பட்டுள்ளது. தேவையில்லாத அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. லோகோ, டூல்பார், மெனு, பட்டன் என எதுவும் காட்டப்படவில்லை. வலது மேல் பக்கத்தில் சர்ச் பாக்ஸ் எதுவும் காட்ட்டப்படவில்லை.கமாண்ட் பார் மற்றும் பேவரிட் பார் மறைத்து வைக்கப் பட்டுள்ளன. கீழாக ஸ்டேட்டஸ் பார் இல்லை. ரெப்ரெஷ் மற்றும் ஸ்டாப் பட்டன்கள் வண்ணத்தில் இருப்பதற்குப் பதிலாக, கிரே கலரில் உள்ளன. வலது மேல் பக்கத்தில் மூன்று பட்டன்கள் கிரே கலரில் தரப்பட்டுள்ளன. இவற்றை இயக்குவதன் மூலம், ஹோம் பேஜ், பேவரிட்ஸ் மற்றும் டூல்ஸ் மெனுக்களைப் பெறலாம். இவற்றின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், இவை வண்ணம் பெறுகின்றன. திறக்கப்பட்டுள்ள இணையப் பக்கங்களுக்கான டேப்கள், மிகவும் சிறியதாகவும், அதே நேரத்தில் மிகவும் தெளிவாகவும் துல்லிதமாகவும் இருக்கின்றன. இவை அட்ரஸ் பாருக்கு வலது புறத்தில் அமைக்கப்படுகின்றன. முன்பு இருந்த அனைத்தும் மறைக்கப்பட்டு அல்லது சிறியதாக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், முந்தைய பிரவுசர்களில் இருந்த பட்டன்களில், இடது மேலாக கருநீல வண்ணத்தில் இருந்த பட்டன் தான் சற்று சிறிதாகக் காட்டப்படுகிறது. இன்னும் சில அம்சங்களைக் கூறுவது இங்கு நல்லது. இந்த பிரவுசரில் எச்சரிக்கை மற்றும் பிற டயலாக் பாக்ஸ்கள் கிடைப்பதே இல்லை. இவற்றிற்குப் பதிலாக, இந்த செய்திகள் எல்லாம், விண்டோவின் கீழாக உள்ள, நீள பாரில் காட்டப்படுகின்றன. இடோரா இமெயில் கிளையண்ட் பயன்படுத்துபவர்கள் இதே போல பெற்றிருப்பார்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இவை நம் வேலைக்குக் குறுக்கிடும் டயலாக் பாக்ஸ்களாகக் கிடைக்கும். இன்னொரு சிறப்பு அம்சம், தேவைப்படாத டேப்களை இழுத்து ஒரு ஓரத்தில் வைத்திடும் வசதி ஆகும். இதில் கூகுள் குரோம் பிரவுசரில் உள்ளது போல, அட்ரஸ் பார் மற்றும் சர்ச் பாக்ஸ் இணைக்கப்பட்டு தரப்படுகிறது. மைக்ரோசாப்ட், இதனை பிரைவேட் ஒன் பாக்ஸ் என அழைக்கிறது.
மிக மிக என்னைக் கவர்ந்த ஒரு சிறப்பம்சம், இதன் குறித்து எடுத்துவைத்துக் கொள்ளும் ஷார்ட் கட்களாகும் (Pinned Shortcuts). இதன் மூலம் உங்களுக்கு மிகவும் பிடித்த ஓர் இணைய தளத்தினை ஓர் அப்ளிகேஷன் புரோகிராம் போல வைத்து இயக்கலாம். இதற்கான டேப்பினை இழுத்து டாஸ்க் பாரில் போட்டு வைத்து, தேவைப்படும்போது புரோகிராம் இயக்குவது போல, கிளிக் செய்து இயக்கலாம். இது புரோகிராம் ஒன்றின் ஷார்ட் கட் போலவே அமைக்கப்படுகிறது. இதனை பேவரிட் ஐகான் என்ற பாணியில் “Favicon” என்று அழைக்கலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் தரப்பட்டிருந்த பல பாதுகாப்பு கூறுகள் இதில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அத்துடன் முக்கியமாக ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். இந்த பிரவுசர் மிக மிக வேகமாக இயங்குகிறது. இணையப் பக்கங்கள் படு வேகமாக எடுத்துத் தரப்படுகின்றன. இவற்றின் ஊடே செல்வதும் விரைவாக மேற்கொள்ளப்படுகிறது. இதனை வேறு பிரவுசருடன் ஒப்பிட்டெல்லாம் பார்க்க முடியவில்லை. அவ்வளவு வேகமாக உள்ளது. இரண்டு பிரவுசருக்கிடையேயான வேறுபாடெல்லாம், ஒரு விநாடியில் பத்தில் ஒரு பங்காகத்தான் உள்ளது. இந்த பிரவுசர், விண்டோஸ் 7 தொகுப்பில் நன்றாக இயங்குகிறது. விண்டோஸ் விஸ்டாவுடன் அதன் சர்வீஸ் பேக் 2 பதியப்பட்டிருந்தால், அதிலும் இதனைப் பயன்படுத்தலாம். ஆனால் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்தவே முடியாது. அதற்கு மைக்ரோசாப்ட் பல காரணங்களைச் சொல்லி உள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐப் பயன்படுத்துபவர்களிடம் பிரவுசர் குறித்த கருத்துக் களைக் கேட்டறிந்து, அவற்றின் அடிப்படையில் தான், பதிப்பு 9 உருவாக்கப்பட்டது. பல லட்சக்கணக்கான கருத்துரைகள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் மிகச் சிறப்பானவை என்று எண்ணிக் கொண்டிருக்கும் சில வசதிகளை, மொத்தத்தில் 1.5% பேர் தான் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது போன்ற பல தகவல்கள் இந்த கணிப்புக் கருத்துரைகள் மூலம் தெரியவருகிறது. எடுத்துக்காட்டாக, பேவரிட்ஸ் பட்டியலை, தற்போது இந்த பிரவுசர் பயன்படுத்தும் 18% பேர்தான் விரும்புகிறார்கள் என்ற தகவல் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நூற்றில் ஒருவர் கூட இந்த புக்மார்க் பட்டியலில் போல்டரை உருவாக்கியதில்லை என்ற செய்தியும் கிடைத்துள்ளது. (என்ன நீங்களும் உருவாக்கவில்லையா!) இதனால் பேவரிட்ஸ் பார் மற்றும் கமாண்ட் பார், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9ல் மறைக்கப்பட்டுள்ளன.
பதிப்பு 8ல் தரப்பட்டுள்ள டேப் குரூப் இதிலும் உள்ளது. ஏதேனும் ஒரு லிங்க்கில் கண்ட்ரோல்+கிளிக் செய்திடுகையிலும் அல்லது ரைட் கிளிக் செய்து புதிய டேப்பில் திறக்கையிலும், முதன்மைத் தளத்தின் டேப்பும், புதிய லிங்க்கின் டேப்பும் ஒரே வண்ணத்தில் அமைக்கப்படுகின்றன. இது இன்னும் சோதனைத் தொகுப்பு தான். மேலே கூறப்பட்ட அம்சங்கள் இன்னும் மேம்படுத்தப்பட்டு இறுதித் தொகுப்பில் கிடைக்கலாம். இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த விரும்புபவர்கள் செல்ல வேண்டிய முகவரி : : http://windows.microsoft. com/enUS/internetexplorer/download/ie9/worldwide . இதில் 29 மொழிகளுக்கான பதிப்புகள் கிடைக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு.

Read More

பயர்பாக்ஸில் புதிய டேப் செல்ல
by admin - 0

பயர்பாக்ஸ் பிரவுசர் வழியாக இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதில் உள்ள லிங்க்கில் கண்ட்ரோல் கீயினை அழுத்திக் கொண்டு கிளிக் செய்கிறோம். இதன் மூலம் புதிய டேப் ஒன்று திறக்கப்பட்டு அந்த லிங்க்கில் உள்ள தளம் திறக்கப்பட வேண்டும். ஆனால் அந்த டேப்பிற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்பட மாட்டீர்கள். நீங்கள் பழைய டேப் உள்ள தளத்திலேயே இருப்பீர்கள். புதிய லிங்க் அல்லது டேப் மூலமாக தளம் திறப்பதே, அந்த தளத்தை உடனே பார் க்க வேண்டும் என்பதுதான். ஆனால் ஏன் பழைய தளத்திலேயே பயர்பாக்ஸ் நம்மை வைத்துள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரின் இந்த வழக்கத்தினை, சிறிய செட்டிங்ஸ் மாற்றம் மூலம் மேற்கொள்ளலாம். Tools மெனு கிளிக் செய்து, அதில் Options தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Tabs என்பதைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விருப்பத்தேர்வில், இறுதியாக When I open a link in a new tab, switch to it immediately என்று ஒரு வரி கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் விருப்பத்தின் பேரில், புதிய டேப் ஒன்றைத் திறக்கையில், அதில் உள்ள தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
Read More

January 08, 2011

பேஸ்புக்கில் பாதுகாப்பு வழிகள்
by admin - 0

சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்.
பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர்.
இதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர்.
நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.
1. பேஸ்புக் பிளேசஸ் (Facebook Places): இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது.நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம். யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Customize settingsThings I share Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
2. தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த: உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் (Profile) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர்.
முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம். எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lock என்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லதுlock share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் (Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ள Customize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு அடிக்கடி என்னை உன் நண்பனாகச் சேர்த்துக் கொள் என்றெல்லாம் மெயில் செய்தி வரும். தெரியாதவர் என்றால், உடனே அதனை அலட்சியப் படுத்திவிடுங்கள். இது போன்ற வேண்டுகோளுக்கு யெஸ் சொல்லித்தான் பலர் மாட்டிக் கொள்கிறார்கள்.
3. அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா? பேஸ்புக் தளத்தில், மெட்ரோபோலிஸ் மற்றும் மாபியா வார்ஸ் போன்ற விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும். இது போன்ற செய்திகள் உங்களுக்குத் தொல்லை தருவதுடன், மற்றவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு செல்லும். மேலும், நீங்கள் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து விளையாடுவது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டுமா என்று யோசிக்கவும். இதில் நீங்கள் மட்டுமே இயங்க ஒரு செட்டிங்க்ஸ் அமைத்துவிடலாம். உங்கள் அக்கவுண்ட் செட்டிங்கில் Privacy Settings செல்லவும். இதன் கீழ் இடது பக்கத்தில் Applications and websites என்று ஒரு பிரிவு இருக்கும். இங்கு Edit Your Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.
4. அப்ளிகேஷன்களுக்குத் தடா: பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். என்பதன் கீழ்Applications you use Turn off all platform applications என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.
5. அணுகுவதற்குத் தடை: உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites. C[S Edit your settings. இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.
6.இறுதி நடவடிக்கை: பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும். திரும்பிப் பார்க்காமலேயே.
பேஸ்புக் தளத்தில் இருப்பது ஒரு நல்ல இனிமையான மற்றும் வேடிக்கையான அனுபவம் தான். ஆனால் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. அதற்கான வழிகளைத் தான் மேலே பார்த்தீர்கள். அவற்றை மேற்கொள்வது உங்கள் முடிவைப் பொறுத்தே உள்ளது.
Read More

January 03, 2011

புத்தாண்டு கம்ப்யூட்டர் சபதங்கள்
by admin - 0

புதிய ஆண்டு 2011 பிறந்து தவழத் தொடங்கிவிட்டது. தங்கள் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட், அல்லது இரண்டையும் பயன்படுத்துபவர்களுக்கு, சில புத்தாண்டு சபதங்களை எடுக்கச் சொல்வோமா! வழக்கமாக நாம் சில சபதங்களை எடுப்போம். இன்று முதல் உடற்பயிற்சி, புகைப்பதை நிறுத்து, எடையை எப்படியாவது குறை, குறைவாகச் செலவழி, அதிகமாகச் சேமி என ஒவ்வொரு ஆண்டும் எதனையாவது உறுதியாகச் சொல்வோம். இந்த சபதங்களின் பின்னணியில் இருப்பது தனி மனித ஒழுக்கம் பேணுவதே.
இங்கு நாம் மற்றவர்களுக்கு இன்னல் இன்றி, அனைவரும் சந்தோஷமாக இருக்க, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டில் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
கீழ்க்கண்ட சபதங்களை எடுத்துச் செயல்படுத்து வதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்து வதிலும் இன்டர்நெட்டை அணுகிப் பயன்படுத்து வதிலும் சிக்கல்கள் குறையலாம்; குறைவான தவறுகளை செய்யலாம்; மால்வேர் தாக்குதல் களிலிருந்து தப்பிக்கலாம். இவற்றைப் பார்ப்போமா!
1.அனைத்து டயலாக் மற்றும் எச்சரிக்கை செய்திகளையும் படிப்பேன். எடுத்துக் காட்டாக, இப்படிச் செய்தால், இந்த பைல் ஒரேயடியாக நீக்கப்பட்டுவிடும் என்று ஓர் எச்சரிக்கை செய்தி வருகையில், இந்த கட்டம் என்ன சொல்லப்போகிறது என்று உதாசீனப்படுத்தினால், பைல் அவ்வளவுதான்.
2. நான் என்னுடைய பைல்களை அடிக்கடி சேவ் செய்வேன். பல புரோகிராம்களில் தானாக சேவ் செய்திடும் வசதி இருந்தாலும், அவை குறிப்பிட்ட காலக் கெடுவில் தான் அந்த வசதியை இயக்கும். எனவே அடிக்கடி சேவ் செய்வது, உங்கள் உழைப்பைக் காப்பாற்றும். அதே போல பைலை எடிட் செய்கையில், தனித்தனியே சேவ் செய்திடுவேன். ஏனென்றால், அப்போதுதான் எடிட் செய்த மாற்றங்கள் இல்லாத பழைய நிலையில் உள்ள பைல் வேண்டும் எனில், அந்த பைல் நமக்குக் கிடைக்கும்.
3. என்னுடைய பைல்களின் பேக் அப் காப்பியை ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் எடுக்காமல் அடிக்கடி எடுப்பேன். ஏனென்றால் நாம் பதிவு செய்திடும் சிடிக்கள் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. ஹார்ட் ட்ரைவ்/பிளாஷ் ட்ரைவ் படிக்க இயலா நிலைக்குத் தள்ளப்படலாம்.
4. மற்றவரிடம், கம்ப்யூட்டர் பிரச்னைக்கு உதவி கேட்கையில், என்னுடைய பிரச்னையைத் தெளிவாகக் கூறுவேன். இது மிக முக்கியம். எந்த ஒரு சிறிய பிரச்னையாக இருந்தாலும், இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு எண், பிரவுசர் மற்றும் என்ன செய்திடுகையில் கம்ப்யூட்டர் முடங்கிப் போனது, புதிதாக இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் ஆகிய தகவல்களைக் கூறிப் பின்னர் பிரச்னையைக் கூற வேண்டும்.
5. பேஸ்புக் அல்லது பிற சமுதாயத் தளங்களில் போட்டோக்களை போஸ்ட் செய்கையில் பல முறை யோசிப்பேன். அப்படியே போட்டோக்களை தளங்களுக்கு அனுப்பி என் பக்கத்தில் அமைத்தாலும், அவற்றை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை வரையறை செய்திடுவேன். இதனை எல்லாரும் அவசியம் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், 20 வயதில் ஒருவர் தன் போட்டோவினை ஒரு சமுதாய தளத்தில் பேஸ்ட் செய்தார். ஆனால் அதனால், அவரின் 32 ஆவது வயதில் பெரிய பிரச்னை ஏற்பட்டது.
6. என்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை இன்றைய நாள் வரை மேம்படுத்தி வைத்துப் பயன்படுத்துவேன். அப்போதுதான், அண்மைக் காலத்திய வைரஸ்கள் மற்றும் மால்வேர்களை அணுக விடாமல் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களைக் காத்திட முடியும்.
7. இணையத்தில் பார்ப்பதை எல்லாம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிட்டு, பின்னர் கம்ப்யூட்டர் வேகமாக வேலை செய்யவில்லையே என்று குற்றம் சொல்ல மாட்டேன். தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்வது, கம்ப்யூட்டர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிரவுசர்களின் செயல்பாட்டு வேகத்தை மட்டுப்படுத்தும்.
8. இமெயில் கடிதங்களில் வரும் செய்திகள் அனைத்தையும் நம்ப மாட்டேன். பல லட்சம் டாலர் உள்ளது. உங்கள் வங்கி கணக்குக் கொடுத்தால், 10% உங்களுக்கு. உங்களுக்கு இமெயில் லாட்டரி கிடைத்துள்ளது. வங்கி தன் அக்கவுண்ட்கள் அனைத்தையும் மீண்டும் சரி செய்து அமைக்கிறது. உங்கள் கணக்கு விபரத்தைக் கொடுத்து சரி செய்து கொள்ளுங்கள் --- என்பன போன்ற செய்திகளை முழுமையாகப் படிக்காமல், ட்ரேஷ் பெட்டியில் கூடத் தங்கவிடாமல் அழிப்பேன்.
9.செக்யூரிட்டி கேள்விகளை அலட்சியப்படுத்தாமல், பாஸ்வேர்ட்களைப் போல அவற்றைப் பாதுகாப்பேன். ஏனென்றால், அவையும் மிக முக்கியமானவையே. ஹேக்கர்கள் இது போன்ற தகவல்களை வைத்து,உங்கள் தகவல்களைத் திருட முடியும்.
10. மற்ற இன்டர்நெட் பிரவுசர்களையும் பயன்படுத்துவேன். ஒரு பிரவுசரை மட்டுமே பயன்படுத்த மாட்டேன். அப்போதுதான், ஒரு பிரவுசர் பழுதானாலும், அடுத்த பிரவுசர் மூலம் இன்டர்நெட் உலா வர முடியும்.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன புத்தாண்டு சபதங்களுடன் ஒப்பிடுகையில், நம் கம்ப்யூட்டருக்கான சபதங்கள், பின்பற்ற மிகவும் எளிமையானவையே. பின்பற்றக் கூடியவையே. எனவே நம் கம்ப்யூட்டர் பணியில் தொய்வும், முறிவும் ஏற்படாமல் இருக்க இந்த சபதங்களை எடுத்துக் கொள்ளுமாறு தரப்பட்டுள்ளது.

Read More