Latest News

January 18, 2011

தென்னையில் ஊட்டச்சத்து
by admin - 0

தென்னையில் ஒரு குலையில் சுமார் 40 முதல் 50 வரை குரும்பைகள் தோன்றினாலும் குறைந்த அளவே தேங்காய்களாக மாறுகின்றன. மற்றவை உதிர்ந்துவிடுகின்றன. அதிகமாக குரும்பைகள் உதிர்வதற்கு வறட்சி, மோசமான தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்து குறைவு, ஹார்மோன்கள் எனப்படும் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் மண்ணின் களர் உவர் தன்மைகள் ஆகியவை முக்கிய காரணங்களாகும். இவைகளில் நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் பற்றாக்குறைகளை வேர்மூலம் டானிக் செலுத்துவதால் நிவர்த்தி


செய்துவிடலாம். பயன்கள்: முக்கியமான சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்கின்றன. இலைகளில் பச்சையம் அதிகரித்து ஒளிச்சேர்க்கை மேம்படுவதால் மரத்தின் வளர்ச்சி அதிகரிக்கிறது. உயிர்வேதியியல் பணிகளுக்குத் தேவைப்படும் மூலப்பொருட்களான ஊட்டச்சத்துக்கள் தடையின்றி கிடைப்பதால் மரத்தின் வீரியம் அதிகரிக்கின்றது. போரான் மற்றும் துத்தநாகம் போன்ற நுண்ணூட்டங்களும் ஆக்சின் போன்ற வளர்ச்சி ஊக்கியும், டானிக்கில் உள்ளதால் குரும்பைகள் உதிர்வதும் ஒல்லிக்காய்கள் உற்பத்தியாவதும் வெகுவாக குறைகின்றது. பூச்சி, நோய், வறட்சி மற்றும் தட்பவெப்ப நிலைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இயற்கையான எதிர்ப்புசக்தி மரத்தில் உருவாக்கப்படுகிறது.


வேர்மூலம் ஊட்டச்சத்து செலுத்தும் முறை: மரத்திலிருந்து இரண்டு முதல் மூன்று அடி தள்ளி சுமார் நான்கு அங்குல ஆழத்திற்குக் கீழ் உறிஞ்சும் வேர்கள் அமைந்திருக்கும். இந்தப்பகுதியில் பென்சில் கனமுள்ள மஞ்சள் நிற வேர் ஒன்றை தேர்வு செய்து வேரின் நுனியை மட்டும் கத்தி அல்லது பிளேடு உபயோகித்து சாய்வாகச் சீவி விடவும். பின்னர், டானிக் உள்ள பையின் அடிவரை வேரை நுழைத்து, வேரையும் பையின் மேல் பாகத்தையும் நூலால் கட்டிவிடவும். மண்ணில் ஈரத்தன்மை குறைவாக இருந்தால் ஒரு மணிநேரத்தில் டானிக்கை வேர் உறிஞ்சிவிடும். எனவே வெயில் நேரத்திலும் அல்லது பாசனத்திற்கு முன்பும் டானிக்கை கட்டிவிட்டால் வேர் விரைவாக உறிஞ்சிவிடும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.
ஒரு மரத்திற்கு 200 மில்லி டானிக் தேவை. இதை பாலிதீன் பையில் அடைத்து சீலிட்டு ரூ.5க்கு விற்கப்படுகிறது. நீண்டதூர விவசாயிகளின் நலன் கருதி, அடர்திரவம் தயாரித்து, 2, 5, 10 மற்றும் 20 லிட்டர் கேன்களில் விற்பனை செய்யப்படுகிறது. உதாரணமாக 10 லிட்டர் அடர் திரவத்துடன் 40 லிட்டர் குடிநீர் சேர்த்து 50 லிட்டர் டானிக் தயாரிக்கலாம். இதிலிருந்து 200 மில்லி வீதம் பாலிதீன் பையில் ஊற்றி ஒவ்வொரு மரத்திற்கும் கட்டிவிடலாம். ஆகவே, 10 லிட்டர் டானிக்கை 250 மரங்களுக்கு கொடுக்கலாம். அடர் திரவத்தின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.125. தேவையான பாலிதீன் பைகள் இலவசமாக தரப்படும். கேன் விலை கூடுதலாக வசூலிக்கப்படும். அடர் திரவத்தை நீண்ட தூரத்திற்கு எளிதாக எடுத்துச்சென்று பின் தேவைக்கேற்ப விவசாயிகளே தண்ணீர் சேர்த்து டானிக் தயார் செய்துகொள்ளலாம்.
« PREV
NEXT »

No comments