Latest News

January 18, 2011

விக்கிபீடியா 10 ஆண்டுகள்
by admin - 0

சென்ற ஜனவரி 15ல் இணையத்தின் கட்டற்ற தகவல் கலைக் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவிற்கு 10 வயதாகிறது. உலகின் பல நாடுகளில், இந்தியா உட்பட, இது கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவு சார் தகவல்களை சேர்ப்பதிலும், பகிர்ந்து அளிப்பதிலும் இந்த தளம், மனித சரித்திரத்தில் புதிய புரட்சிகரமான வரலாறு படைத்து வருகிறது. இன்றைக்கு ஏறத்தாழ ஒரு கோடியே 70 லட்சம் கட்டுரைகளுடன் (யாரும் அவற்றைத் திருத்தலாம்) தமிழ் உட்பட, 270 மொழிகளில் இந்த கலைக் களஞ்சியம் சேவை செய்து வருகிறது. இதில் பதிந்துள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 30 லட்சம். கூகுள், மைக்ரோசாப்ட், யாஹூ, பேஸ்புக் ஆகிய தளங்களுக்குப் பின் அதிகம் பேர் பார்க்கும் தளமாக விக்கிபீடியா உள்ளது.
இதனை நடத்தி வரும் விக்கிமீடியா பவுண்டேஷன் அமைப்பிற்கு எந்த வருமானமும் இல்லை. 50 ஊழியர்களுடன், நன்கொடையைக் கொண்டே இது நடத்தப்பட்டு வருகிறது. விக்கிபீடியா தளங்களில் விளம்பரங்களைப் போடக் கூடாது என்பது அதன் கொள்கை. அண்மையில், பல வேண்டுகோள்கள் மூலம், ஒரு மாதத்தில் இந்நிறுவனத்திற்கு வந்த நன்கொடை ஒரு கோடியே 65 லட்சத்து 50 ஆயிரம் டாலராகும். ஏறத்தாழ 140 நாடுகளில் வாழும் மக்கள் நன்கொடை அளித்துள்ளனர். இந்தியாவிலும் பல பெரிய மற்றும் சிறிய நகரங்களில் விக்கிபீடியாவின் 10 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. தமிழிலும் விக்கிபீடியா தளம் உள்ளது. இதனைக் காண http://ta.wikipedia.org என்ற முகவரிக்குச் செல்லவும். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தான் விக்கிமீடியா பவுண்டேஷன் அலுவலகம் அமைக்கப்படுகிறது. இது இந்தியாவிற்குப் பெருமை தான். அநேகமாக ஹைதராபாத் நகரில் இது அமைந்திடும். இந்தியாவில் 10 மொழிகளில் இதன் தளம் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
« PREV
NEXT »

No comments