Latest News

March 13, 2022

பேரணிக்கு அணிதிரளுமாறு மக்களிடம் அறைகூவல் விடுக்கின்றோம்: செல்வராசா கஜேந்திரன்
by Editor - 0

வவுனியா பேரணிக்கு அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


அவரது நேற்றைய ஊடக அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்,

''புதிய அரசியல் யாப்பினை நாட்டிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளைச் சிங்கள பௌத்த பேரினவாத அரசு முன்னெடுத்து வருகின்றது. இலங்கைக்கான நான்காவது அரசியல் யாப்பும் மிக இறுக்கமான சிங்கள பௌத்த ஆதிக்கத்தைக் கொண்ட ஒற்றையாட்சி அரசியல் யாப்பாகவே அமையவுள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தரப்பின் கடமையானது ஒற்றையாட்சியை முற்றாக நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வை வலியுறுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.

அந்த வகையில், வடக்கு கிழக்கிலுள்ள பொதுசன அமைப்புக்களையும், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் அரசியல் தரப்புக்களையும் இணைத்து - ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான 13ஆம் திருத்தத்தையும் முற்றாக நிராகரித்து இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரித்த 'சமஷ்டி' அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்குரிய நீதியை வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வலியுறுத்தியும், அரசியல் கைதிகளினுடைய விடுதலையை வேண்டியும், சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் பிரகடனம் இடம்பெறவுள்ளது.

இப்பிரகடனம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) பி.ப 2.00 மணியளவில் வவுனியா கச்சேரிக்கு அருகாமையிலுள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுத்தூபியிலிருந்து பேரணியாகச் சென்று தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தில் (தாண்டிக்குளம் புகையிரத நிலையம் முன்பாக) இடம்பெறவுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள மேற்படி போராட்டத்திற்கு வலுசேர்க்க, அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழ் மக்களை அணிதிரண்டு வருமாறு அழைக்கின்றோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments