Latest News

September 23, 2021

திலீபனின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்த சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட மூவர் கைது
by Editor - 0


நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்த சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கொவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய நீதிமன்ற தடை உத்தரவின்றி இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு காவல்துறையின் உயர் மட்டத்திலிருந்து பணிக்கப்பட்டிருந்ததுடன் யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை பரிசோதகர் உள்ளிட்ட மூவர் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு அஞ்சலி செலுத்த முயன்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி காவல்துறையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உணவு ஒறுப்பிலிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக ஆரம்பமானது.

1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த தியாக தீபம் திலீபன், 11ஆவது நாளான, செப்ரெம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தார்.

அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த 34ஆவது ஆண்டு நினைவு வாரம் கடந்த 15ஆம் திகதி நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
« PREV
NEXT »

No comments