பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியும் முழு ஆதரவை வழங்குவதாக,
முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ.இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
அட்டனில் இன்று (04.01.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, சம்பள உயர்வுக்கான உரிமைப்போராட்டம் மற்றும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் நடைபெறும் யாத்திரை ஆகியன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இவை குறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தி,
நாளை (05) மலையகம் தழுவிய ரீதியில் நடைபெறும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மலையக தொழிலாளர் முன்னணி ஏற்கனவே தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.
தொழிலாளர்கள் மத்தியில் பிளவு ஏற்படாமல் உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரண்டு காட்ட வேண்டும் என்பதற்காகவே நாம் இந்த முடிவை எடுத்தோம்.
ஆயிரம் ரூபா சம்பளம் மட்டுமல்ல கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்க வேண்டிய தொழில் உரிமைகள் மற்றும் சலுகைகளும் முழுமையாக கிடைக்கவேண்டும். அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் எமது அழுத்தம் தொடரும்.
சம்பள உரிமைக்கான போராட்டத்தை நடத்துவதற்கு மலையக தொழிலாளர் முன்னணி திட்டமிட்டிருந்த வேளையிலேயே, ஏனைய தரப்பும் அழைப்பு விடுத்துள்ளது.
அந்தவகையில் ஊழியர்களுக்காக இணைந்துபோராடி, தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்கு முழு ஆதரவையும் நாம் வழங்குவோம்.
அதேவேளை, வடக்கு, கிழக்கில் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்துக்கும் மலையக மக்கள் முன்னணி முழு ஆதரவை வழங்குகின்றது.
இது தொடர்பில் மாவை சேனாதிராஜாவுடன் கலந்துரையாடினோம். அவர்களும் எமது சம்பள உயர்வு போராட்டத்துக்கு ஆதரவை வழங்கியுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் இன்று காணிகள் அபகிரிக்கப்படுகின்றன. தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் ஆக்கிரமிப்புகள் நடைபெறுகின்றன.
இவை நிறுத்தப்படவேண்டும். அதற்காக தமிழ்க்கட்சிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றார்.
No comments
Post a Comment