Latest News

February 05, 2021

பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவை பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர்
by Editor - 0

பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவை பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர்



பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் 161 இன்படி தமிழக அமைச்சரவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் மீது ஆளுநர் எந்தவித முடிவையும் எடுக்காமல் இருந்தார். இதனிடையே பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு முதலில் வாதிட்டது. பின்னர், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது, தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கி, விசாரணையை ஒத்திவைத்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் ஆணையட்டு 12 நாட்களாகியும் தமிழக அரசின் பரிந்துரை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். மேலும் இந்த விடுதலை தொடர்பான முடிவை எடுக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை சட்டத்திற்கு உள்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என இன்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார்.


« PREV
NEXT »

No comments