Latest News

November 17, 2020

சீன வர்த்தக கூட்டில் அமெரிக்க நண்பர்கள் !
by Editor - 0

சீன வர்த்தக கூட்டில் அமெரிக்க நண்பர்கள் !

-இதயச்சந்திரன்
 
உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று உருவாகியுள்ளது.
சந்தைகளைப் பங்கிடலும், அதன் மூலம் வர்த்தகத்தை விரிவுபடுத்தலுமே இவ்வகையான ஒப்பந்தங்களின் நோக்கம்.
அதிலும் ஒரு பிராந்திய அளவில், நேற்றுவரை ஒன்றுக்கொன்று சந்தேகக்கண் கொண்டு பார்த்த, அணிமாறி நின்ற பல நாடுகள் ஒன்று சேர்ந்துள்ளன.
 
நாணயப்போர், வர்த்தகப்போர், தொழில்நுட்பப்போர் என்று விரிந்து சென்ற அமெரிக்க -சீன நவீன ஏகாதிபத்தியப்போர், இனி வேறு வடிவில் நகரப்போவதை இந்த கூட்டு வர்த்தக ஒப்பந்தம் புலப்படுத்துகிறது.
 
10 ஆசியான் நாடுகளுடன் , சீனா, ஜப்பான், தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசீலாந்து போன்ற கூட்டமைப்பிலில்லாத 5 நாடுகளும் இணைந்து, கடந்த நவம்பர் 15 ஆம் திகதியன்று, 'முழுமையான பிராந்திய பொருளாதார பங்காளிக் கட்டமைப்பு' (Regional Comprehensive Economic Partnership -RCEP ) ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
கடந்த 8 வருடங்களாக இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் இடையில் வந்த TPP வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட டொனால்ட் டிரம்ப் மறுத்ததால். 2017 இல் TPP  முழுமையாகக் கைவிடப்பட்டு , மீண்டும் ஆர்செப்பிட்கான (RCEP ) பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன.
 
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரத் சீர்குலைவினால், வேறுவழியின்றி இக்கூட்டு  ஒப்பந்தம் சாத்தியமானது என்கிற பார்வையுமுண்டு.
சீனாவைப் பொறுத்தவரை, அதன் உற்பத்தித்துறையில் ஓரளவு தேக்கநிலை காணப்பட்டாலும், உற்பத்தியாகும் பண்டங்களிற்கான வாங்குதிறன் கொண்ட சந்தைகள் தேவைப்படுகிறது.
 
ஏனைய 14 நாடுகளுக்கும் இதேவிதமான பிரச்சினை, அளவு வேறுபாட்டுக் காணப்படுகிறது.
 
கடந்த ஒரு மாத காலமாக அவுஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிகழ்ந்த இராஜதந்திர- பொருண்மியப்போர் தீவிரமடைந்திருந்தது. கொரோனா பரவல் குறித்து, சீனாவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்தது அவுஸ்திரேலியா அரசு.
இதனால் சினம் கொண்ட சீனா, அவுஸ்திரேலியா மீது பொருளாதாரத் தடையை விதித்தது.
சீன துறைமுகத்தை வந்தடைந்த அவுஸ்திரேலியா சரக்குக் கப்பலை தடுத்தது.
 
ஆனாலும் ஒரு மாதத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. இதுவரை  சீனாவுடன் எந்த வர்த்தக ஒப்பந்தத்திலும் ஈடுபடாத ஜப்பான் தேசம், அமெரிக்க நட்பு வளையத்திலிருந்து வெளியே வருகிறது.
இரண்டாம் உலக மகா யுத்த காலத்திலிருந்து ஜப்பானுடன் முறுகல் நிலையில் இருக்கும் தென் கொரியா, இந்த கூட்டு வர்த்தக தளத்தில் இணைவது வியப்பாகவிருக்கிறது.
 
ஏற்கனவே ஆசியான் கூட்டமைப்புடன் தனித்தனியே சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செய்த, சீன (ACFTA ), ஜப்பான் (AIFTA ), அவுஸ்திரேலியா - நியூஸிலந்து (AANZFTA ) மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு ஏன் இந்த விரிவான- பலமான சுங்கத்தீர்வை குறைந்த வர்த்தக உடன்பாடு தேவைப்படுகிறது?.
 
TPP (TRANS -PACIFIC ) ஒப்பந்தமானது அமெரிக்காவால் கைவிடப்பட்டதும், அந்நாட்டு  அதிபரின் சுதந்திர வர்த்தகத்திற்கெதிரான இறுக்கமான நிலைப்பாட்டினால், அதன் நட்புநாடுகளான ஜப்பான், அவுஸ்திரேலிய மற்றும் தென் கொரியாவின்  சர்வதேச வர்த்தக மூலோபாயத்தில்  மாற்றம் ஏற்படுகிறது. இவர்களுக்கு பலமான வர்த்தக கூட்டு தேவைப்படுகிறது.
 
இருப்பினும் சீனா எதிர்கொள்ளும் பிரச்சினை வேறு.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவற்று நீண்டு செல்கிறது. அங்கெலா மேர்கல் இணங்கி வந்தாலும் ஜெர்மனியின் அதிகாரபீடமும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பலம் வாய்ந்த நாடுகளும் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய பின்னடிக்கின்றன.
5G விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடியால், HUAWEI  நிறுவன ஒப்பந்தங்களை புறந்தள்ளுகிறது  பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும்.
 
'ஆசியாவில் சீனாவின் விரிவாக்கம் அபாயகரமானது ' என்கிற தந்திரோபாயக் கோசத்தோடு தொடங்கப்பட்ட   'குவாட்' (QUAD), அமெரிக்காவின் படைத்துறை வர்த்தகத்திற்கே சேவை செய்தது. அதுவும், சீனாவின் இருப்பிற்கு அச்சுறுத்தலான விடயமாகப் பார்க்கப்பட்டது.
 
அதேவேளை RCEP இன்  ஆரம்பகால உரையாடல் உறுப்பினரான இந்தியா, இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் ஏன் இணைந்து கொள்ளவில்லை என்கிற கேள்வி, மேற்குலக மற்றும் இந்திய ஊடகங்களில் பலமாக எழுப்பப்படுகிறது.
 
சீனாவின் விலைமலிவான பொருட்கள் இந்தியச் சந்தையில் குவிந்தால் , உள்ளூர் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதே இந்தியத்தரப்பு வாதம். RCEP இன் 15 நாடுகளிலிருந்து, 2004 இல் ஏற்பட்ட ஏற்றுமதி-இறக்குமதி பற்றாக்குறை ( Trade Deficit ) 7 பில்லியன் அமெரிக்க டொலராகவும் , 2018 இல் அப்பற்றாக்குறை 105 பில்லியனாக உயர்ந்துள்ளதாக இந்தியத் தூதுவர் ஒருவர் கவலையுடன் கூறுகின்றார்.
 
விவசாயத்துறை பெரிதும் பாதிக்கப்படும் என்கிற கவலை வேறு இந்தியாவிற்கு இருக்கிறது.
8 வழிசாலையில், மலைகளும், விவசாய நிலங்களும்  சூறையாடப்படுகிறது.
கார்பொரேட் கம்பெனிகளின் இலாபத்திற்காக, மீத்தேன்-ஏதேன் எரிவாயு திட்டத்தினூடாக பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் தமிழகத்தில் பாழ்பட்டுப்போவது குறித்து கவலைப்படாத இந்திய நடுவண் அரசு, தேசிய நலன் குறித்து அக்கறைப்படுவது வேடிக்கையாயிருக்கிறது.
 
இந்திய தனது மனதை மாற்றிக் கொண்டால் எப்போதும்  இக்கூட்டில் இணைந்து கொள்ளலாம் என்கிற அழைப்பும் நிலுவையில் உள்ளது.
ஜோ பைடன் அதிபராக பதவியேற்கும்வரை காத்திருக்குமா? இல்லையேல் அதானி, அம்பானி, அகர்வால்களின் பச்சை சமிக்ஜை வரும்வரை பார்த்திருக்குமா? என்பது தெரியவில்லை.
 
வர்த்தகம், சந்தை என்பதைத் தவிர,  வேறெந்த நீண்ட மூலோபாயத்திட்டங்களை இந்த ஒப்பந்தமூடாக  சீனா சாதிக்க முனைகிறது என்பதை பார்க்க வேண்டும்.
அதன் வங்கிச்  சேவைகளின் பெரும்பாலான பகுதிகளில்  எண்மிய நாணயம் (Digital Currency ) பயன்பாட்டில் வந்துள்ளது. இது எண்மியப் பொருளாதாரத்தை நோக்கிய முதல்கட்ட நகர்வாகும்.
 
குறிப்பாக RCEP இன்  15 நாடுகளுக்கிடையிலான வர்த்தகமும், அதற்குரித்தான பணப்பரிவர்தனையும் (Financial Clearance ) அந்தந்த நாடுகளின் எண்மிய நாணயத்தினூடாக நடைபெறக்கூடிய சாத்தியமுண்டு.
உலக வர்த்தக பொது நாணயமான அமெரிக்க டொலரினை பிரதியீடு செய்யும் வகையில் நிதியியல் கட்டமைப்பு மாறலாம்.
சீனாவின் நோக்கமும் அதுதான்.
இதுவரை அமெரிக்க டாலரில் வர்த்தகத்தை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட Currency Swap என்கிற நாணயப் பிரதியீடு முறைமை, எண்மிய யுகத்தில் நுழையும் வர்த்தகத்தில் வேறு வடிவம் பெறும் .
 
இந்த வர்த்தக கூட்டில் 18 மாதங்களின் பின்னர் எவரும் சேரலாம். அதற்கு முன்பாக ஆசியானிலுள்ள 6 நாடுகளும், ஏனைய 5 இல் 3 நாடுகள்  இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் (ratify )அளிக்க வேண்டும் .
 
அப்போது ரஸ்யாவும் இணையலாம். சாங்கை ஓத்துழைப்பு கூட்டுத்தாபன (SCO ) நாடுகளும் சேரலாம்.
 
பாதுகாப்பு குறித்த சீனாவின் கடும்போக்கானது,  சிலவேளைகளில் ஜப்பான், தென் கொரியாவுடன் பிரச்சினைகளை உருவாக்கலாம். அதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் உண்டு.
- நன்றி தினக்குரல்
 
இந்தோ-பசுபிக் என்பது மறுபடியும் ஆசிய- பசுபிக்காக மாறும் போல் தெரிகிறது.
« PREV
NEXT »

No comments