Latest News

January 16, 2020

கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்
by Editor - 0

விடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்.
‘கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு’ இது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தளபதி கிட்டுவைப் பற்றி கூறியதாகும்.
உலகின் சரித்திரம் காலத்திற்கு காலம் உருவாகும் சாதனையாளர்களின் சரித்திரமாகவே அமைகின்றது. அவ்வாறே ஒரு நாட்டின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் இனத்தின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் போராட்டத்தின் வரலாறாக இருந்தாலென்ன, அதில் சாதனையாளர்கள் சரித்திரத்தில் இடம்பெருபவர்களாக இருக்கின்றார்கள்.
இந்தவகையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில், தமிழீழத்தின் வரலாற்றில் ஏன் தமிழினத்தின் வரலாற்றிலேயே இடம்பெறக்கூடிய அளவிற்கு சாதனைகள் பல புரிந்தவர் கேணல் கிட்டு.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவர் முத்திரை பதிக்காத துறையே இல்லையென்பது மட்டுமல்ல போராட்டம் ஈட்டியுள்ள, ஈட்டிவரும் வெற்றிகள், சாதனைகள் என்ப்பவர்ரை ஆரம்பித்து வைத்தவர் கேணல் கிட்டு என்றே கூறமுடியும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தால் சீறிலங்கா இராணுவத்தினர் வீதி வீதியாகத் திரிந்த காலத்தில் அவர்கள் மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் பங்கேற்ற கேணல் கிட்டு, 1985ல் யாழ். மாவட்டத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் வடமாகாணத்திலேயே பெரிய பொலிஸ் நிலையமாகிய யாழ். பொலிஸ் நிலையம் மீது தாக்கியழித்து, அங்கிருந்து நூற்றுக்கணக்கான ஆயுதங்களையும், ரவைகளையும் கைப்பற்றி போராட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்ப்படுத்தியவர்.
அதன் பின் தளபதி கேணல் கிட்டு யாழ். குடாநாட்டிலிருந்த படைமுகாம்களில் நிலைகொண்டிருந்த படையினரை முற்றுகையிட்டுத் தாக்கி, சிங்களப் படைகளை முற்றாக முகாம்களுக்குள் முடக்கி யாழ்ப்பாணக் குடாநாட்டை விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர்.

இம்முற்றுகையை உடைக்க பலமுனைகளில் பலமுறை முயன்ற சிறீலங்கா இராணுவத்திற்கு தகுந்த பதிலடி கொடுத்து இம் முயற்சிகளை முறியடித்தவர் தளபதி கிட்டு.

இவ்வாறான முற்றுகையால் ஆத்திரமடைந்த சிங்கள அரசாங்கம் யாழ். குடாநாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்து மக்களை அடிபணிய வைக்க முயன்றபோது, அதற்கு எதிரான போராட்டத்தை தளபதி கிட்டு ஆரம்பித்தார். கிராமிய உற்பத்திக் குழுக்களை ஆரம்பித்து சொந்தக் காலில் தமிழ் மக்கள் நிற்கமுடியும் என நிருபித்தவர் தளபதி கிட்டு.

அவ்வேளையில் சிங்கள இராணுவத்திடமிருந்து மட்டுமல்ல இனத்துரோகிகளிடமிருந்து, சமூக விரோதிகளிடமிருந்தும் தமிழீழ தேசத்தைப் பாதுகாக்க கேணல் கிட்டு மேற்கொண்ட நடவடிக்கைகள் அவர்களின் செயற்பாடுகளை முறியடித்தன.

யாழ். குடாநாட்டில் சிறீலங்காப் பொலிஸாரினது நடவடிக்கைகளை முழுமையாக முடக்கிய தளபதி கிட்டு, அங்கு இடம்பெற்ற சட்டவிரோதச் செயல்கள், சமூக ஒழுக்கமீறல்கள், சிறு பிணக்குகள் என்பவற்றை கடுப்பாட்டுக்குள் கொண்டுவர கிராமிய நீதிமன்றங்களை அமைத்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைபடுத்தும் வகையில் மேற்கொண்ட பிரச்சாரத்தை முறியடிக்கவும் மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை வளர்க்கவும், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, நாடகம் போன்ற கலைவடிவங்களை ஊக்குவித்ததுடன் களமுனைகளை ஆவணப்படுத்தி கலமுனைக்காட்சிகளை ‘நிதர்சனம்’ மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர் கேணல் கிட்டு. அத்துடன் அவர் சிறந்த எழுத்தாற்றல் மிக்கவருமாவார். பல கள நிகழ்வுகளை எழுத்தில் அவர் கொண்டுவந்திருக்கிறார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை சிங்கள மக்களுக்கும், உலக மக்களுக்கும் புரியவைக்க கிடைத்த ஒவ்வொரு சர்ந்தப்பத்தையும் கேணல் கிட்டு பயன்படுத்தினார்.

யாழ். குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வேளை அங்கு வருகைதந்த அரசியல் தலைவர்கள், பெளத்த பிக்குகள் அனைவரோடும் உரையாடியும் 1986ம் ஆண்டு கார்த்திகை 10ம் நாள் விடுதலைப் புலிகளிடம் பிடிபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினரை விடுவிக்க எடுத்த நடவடிக்கையின்போது தனது அரசியல் ஆற்றலை கேணல் கிட்டு வெளிப்படுத்தினார்.

ஆயுதப் போராட்டத்தைச் சிறப்பாக நடத்திக்கொண்டிருந்த அதேவேளை மக்களை அணிதிரட்டி, போராட்டங்களை நடத்துவதிலும் கேணல் கேட்டு சிறந்தவராகவே விளங்கினார். 1986 கார்த்திகை தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டில் இந்திய அரசுக்கு எதிராகச் சாகுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தபோது தமிழீழ மக்களை அணிதிரட்டி மிகப்பெரிய கண்டன ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் நடத்திக் காட்டியவர் கேணல் கிட்டு.

கேணல் கிட்டு 1987ல் தேசவிரோதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி இடதுகாலை இழந்தபோது மக்கள் அடைந்த துன்பத்துக்கு அளவேயில்லை. சிங்கள இராணுவத்தை தெருவழியே திரியவிடாது முகாம்களுக்குள் முடக்கி வைத்திருந்த தளபதி கிட்டு மீது மக்கள் அளவிடமுடியாத அன்பு வைத்திருந்தார்கள். இந்தச் சம்பவத்தின் பின் 1987 வைகாசி (மே) தினத்தன்று விடுதலைப் புலிகள் நல்லூரில் நடத்திய மேதின நிகழ்வின்போது கிட்டண்ணா உரையாற்ற வருகிறார் என அறிவிக்கப்பட்டபோது மக்கள் கொண்ட மகிழ்ட்சிக்கு அளவேயில்லை. அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் கிட்டண்ணா வந்த வாகனம் கடலில் ஒரு படகுபோல மிதந்து வந்தமையே மகளின் மகிழ்ச்சிக்குச் சான்றாக அமைந்தது.

பின்னர் 1989ல் விடுதலைப் புலிகளின் வெளிநாடுப் பிரிவிற்குப் பொறுப்பாளராக பதவியேற்று வெளிநாடுகளில் அவர் புரிந்த பணிகள் அளப்பெரியவை. அவர் வெளிநாட்டுப் பிரிவுப் பொருபாளராகிய பின் அங்கு போராட்டத்திற்கு ஆதரவான செயற்பாடுகள் துரிதமடையத் தொடங்கின. இன்று தமிழீழப் போராட்டத்தில் வெளிநாடுகளில் வாழும் தமிழீழ மக்களும், தமிழ் மக்களும் பிற நாட்டுமக்களும் காட்டும் ஈடுபாட்டுக்கும், பங்களிப்புக்கும் கிட்டண்ணா ஆரம்பித்து வாய்ந்த செயற்பாடுகளே காரணம் எனலாம்.

இவ்வாறு சகல துறைகளிலும் சாதனை படைத்த தளபதி கேணல் கிட்டுவின் வீரச்சாவும் முற்றிலும் வேறுபாடான சரித்திர நிகழ்வாகவே அமைந்துவிட்டது.

மேற்குலக நாடுகள் சிலவற்றின் முன்முனைப்புடன் தமிழீழ மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் குறித்த ஆலோசனைகளுடன் சர்வதேச கடல் வழ்யூடக தமிழீழம் நோக்கி வந்துகொண்டிருந்த தளபதி கிட்டுவையும் ஏனைய போராளிகளையும் இந்தியாவின் நாடகாறிக் கப்பல்கள் 1993 தை 13ம் திகதி சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து வழிமறித்தன. பின்னர் இந்தியக் கரைநோக்கிக் கபளைச் செலுத்தும்படி நிர்ப்பந்தித்தன.

கேணல் கிட்டு தமிழீழம் நோக்கி வங்கக்கடல் வழியாகப் பயணம் செய்கிறார் என்ற செய்தியும், மேற்குலக சமாதான முயற்சியின் தூதுவனாக அவர் பயணம் செய்கிறார் என்றும் இந்திய அரசுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் அக் கப்பலை வழிமறிக்கும்படி அன்றைய இந்திய அரசு கட்டளையிட்டது.

தை 15ம் திகதி இந்தச் செய்தி உலகமெங்கும் பரவிவிட்டது. கிட்டுவை உயிருடன் பிடிக்கவேண்டும் அலல்து அவரை அழிக்கவேண்டும், மேற்குலகின் சமாதான முயற்சியைக் குழப்ப வேண்டும் என அன்றைய இந்திய அரசாங்கம் முடிவெடுத்தது.

சர்வதேசக் கடற்பரப்பிலிருந்து இரண்டு நாள் கடற்பயணத்தின் பின் கேணல் கிட்டுவும் தோழர்களும் பிரயாணம் செய்த கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு நேரே இந்தியக் கடல் எல்லைவரை கொண்டுவந்து, சரணடையும் படியும் மறுத்தால் கப்பல் முழ்கடிகக்ப்படும் எனவும் இந்தியக் கடற்படை எச்சரித்தது. சரணடைந்தால் தம்மீது பொய் வழக்குகள் சுமத்தப்பட்டு தமது இயக்கம் மீதும், போராட்டம் மீதும் களங்கம் சுமத்த அன்றைய இந்திய அரசு முயற்சிக்கும் என்பதை உணர்ந்துகொண்ட கேணல் கிட்டு கப்பல் சிப்பந்திகள் அனைவரையும் கப்பலை விட்டு இறக்கியபின் கப்பலை வெடிக்கவைத்துத் தகர்த்து தன் தோழர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் ஒரு சாதனை வீரராகியவர் தளபதி கேணல் கிட்டு, போராட்டத்தின் ஒவ்வொரு துறையிலும் அவர் நாட்டிய விதைகளே இன்று விருட்சமாக வளர்ந்து போராட்டச் சோலையை நிறைத்து நிழல் தருகின்றன. அவர் போராட்ட வரலாற்றில் ஓர் அத்தியாயம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
« PREV
NEXT »

No comments