முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் 09ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக - பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் - தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.
அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் - ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து - முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.
அந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.
தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.
விடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.
விடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.
அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.
தமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.
இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.
விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன்
****************************** ****************************** ******************
விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.
வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் - 1997 ஆம் ஆண்டில் - தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.
புளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.
அதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.
சிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.
அப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.
ஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.
பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி
****************************** ******************
பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி.
தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.
தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.
நவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார்.
வன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார்.
ஆட்லறி பீரங்கிப் படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணன்
****************************** ****************************** **************************
விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.
"ஐஞ்சிஞ்சி" என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.
முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.
இரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.
மரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.
ஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.
2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் துர்க்கா.
****************************** ****************************** *************************
தமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.
ஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.
ஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.
ஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
தமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
ஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம்.
நினைவுப்பகிர்வு:- வேங்கைச்செல்வன்.
No comments
Post a Comment