ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவசாகம் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் எதுவிதமான ஆரம்ப நடவடிக்கையினைக் கூட மேற்கொள்ளாத நிலையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தை உடனடியாக நிறுத்தி இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் என வலிறுயுத்தியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை மக்கள் மத்தியில் கையெழுத்துப் போராட்டமாகக் கொண்டு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
“ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. அங்கு இலங்கை அரசாங்கத்துக்கு 30.1 தீர்மானம் நிறைவேற்றுவதற்கு இரண்டு வருட கால அவசாகம் கடந்த ஆண்டு கூட்டத்தொடரின்போது வழங்கப்பட்டது. அக் கால அவகாசம் வழங்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளது. நாம் ஏற்கனவே இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என வலிறுயுத்தி வந்திருந்தோம். இலங்கை ஜனாதிபதியும் சரி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தாங்கள் 30.1 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றப்போவதில்ல என தெளிவாகக் கூறியநிலையிலேயே அவர்களுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.
இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறும் வகையில் கலப்பு நீதிமன்றம் ஒன்றினை நிறுவுவதனைக் கூட ஏற்றுக்கொள்ளாத நிலையில்தான் இரண்டு வருட கால அவசாகம் வழங்கப்பட்டது. இன்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் செயற்பட்டதுபோலவே பொறுப்பூக்கூறலில் எதுவித முன்னேற்றகரமான நடவடிக்கைகயும் இன்றியே இலங்கை அரசாங்கம் இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆக்கப்பட்ட போதும் அதனைது செயற்பாடின்மையால் மக்கள் அதனை நிராகரித்திருக்கின்ற நிலையில் ஒரு விதமான முன்னேற்றமும் இல்லை என்ற யதார்த்தநிலைதான் காணப்படுகின்றது.
இவ்வாறான ஒரு நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்துகின்றோம். இதில் பாதிக்கப்பட்ட மக்களது கருத்தும் மிகத் தெளிவாக உள்ளது என்பதனை குறிப்பிடவிரும்புகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களும் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனப் போராடுகின்ற மக்களும் கடந்த ஒருவருடமாக தெருக்களிலேயே இருக்கின்றனர்.
எனவேதான் நாங்கள் மேலதிக கால அவகாசத்தை இடைநிறுத்தி இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு மாற்றவேண்டும் என வலியுறுதுகின்றோம். பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்னிறுத்த வேண்டும் அல்லாவிடின் குறைந்த பட்சம் இலங்கைக்கென சர்வதேச விசாரணைத் தீர்ப்பாயம் ஒன்றாவது உருவாக்கப்படவேண்டும் என வலியுறுத்தவுள்ளோம்.
இதன்பொருட்டு மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கான கையெழுத்துப் போராட்டத்தினை விரையில் ஆரம்பிக்கவுள்ளோம். இப்போராட்டமானது தமிழ் மக்கள் பேரவை அதனை இணைத்தலைவரான முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. வீடு வீடாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று கையெழுத்துக்ககள் பெறப்படும் அம் மக்களுக்கு ஜதார்த்த நிலைபற்றி தெளிவுபடுத்தப்படும்” – என்றார்
No comments
Post a Comment