Latest News

February 16, 2018

கொள்கை ரீதியாக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்
by Editor - 0

“தேசியம் சார்ந்த கட்சிகள் ஒன்றிணைந்து எமது மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலின் முடிவுகளினடிப்படையில், பெரும்பாலான சபைகளில், ஒரு கட்சி தனித்து ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென சகல தரப்புக்களாலும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இது தொடர்பாக முதலமைச்சரிடம் கேட்டபோதே, முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொள்கை ரீதியாக நாங்கள் அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டுமென்பதை நான் ஏற்கனவே பல முறை வலியுறுத்தியிருக்கின்றேன். இப்பொழுது நடைமுறையில் அது முக்கியமானதாக பரிணமித்துள்ளது.

தேசியத்தோடு சம்மந்தப்பட்ட சகல தமிழ்க் கட்சிகளும், எழுத்து மூலமாகத் தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில் அல்லது கொள்கை ரீதியான ஆவணங்களில் கூறுவது ஒன்று தான். வித்தியாசங்கள் எதுவுமே இல்லை. ஆனால் தனிப்பட்ட ரீதியாக அல்லது கட்சி ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக போட்டியிடும் போதே வித்தியாசங்கள் வருகின்றன.

இந்நிலையில் உள்ளுராட்சி மன்றங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி என்னால் கூற முடியாது. வெறுமனே கட்சியை எப்படியாவது கொண்டு நடாத்த வேண்டும். யாரையாவது பிடித்து, யாருடைய காலிலாவது விழுந்து, நாங்கள் எங்களுடைய நிர்வாகத்தை நடாத்த வேண்டுமென்ற எண்ணத்தில் இருப்பவர்கள், கொள்கையைப் பற்றிக் கவனிக்க மாட்டார்கள். யாருடனும் சேருவார்கள். ஆனால் அது காலா காலத்தில் ஒரு பிரச்சனையை ஏற்படுத்துமென்பது திண்ணம்.

இப்பொழுது நல்லாட்சி அரசுக்கும் அது தான் நடந்திருக்கின்றது. அவர்களிலே கொள்கை ரீதியாக சில வித்தியாசங்கள் இருக்கின்றன. தனிப்பட்ட நபர்கள் சம்பந்தமாகவும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் இப்போது ஒரு பிரச்சனைக்கு வந்திருக்கின்றது.

இவ்வாறான நிலையில் என்னால் ஒன்றை மட்டும் தான் கூற முடியும். அதாவது கொள்கை ரீதியாக கட்சிகள் சேர முடியுமென்றால் அவர்கள் அந்தக் கொள்கைக்கு முதலிடம் கொடுத்து, தேசியம் சார்ந்த கட்சிகள் ஒண்றிணைந்து எமது மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்” என்றார்.
« PREV
NEXT »

No comments