Latest News

February 15, 2018

புதிய அரசு , புதிய பிரதமர் ஶ்ரீலங்காவில் மாற்றம் ?
by admin - 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், சிறுபான்மை அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள், நேற்று மேற்கொள்ளப்பட்டன. ஒன்றிணைந்த எதிரணியுடன் உதவியுடனேயே, இவ்வரசாங்கம் ஏற்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.இந்நிலையில், அமைச்சுப் பதவிகள் எவற்றையும் ஏற்றுக்கொள்ளாமல், சு.கவின் சிறுபான்மை அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு, ஒன்றிணைந்த எதிரணி, உத்தியோகபூர்வமற்ற ரீதியில் சம்மதித்துள்ளது என, முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இவ்விடயம் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஒன்றிணைந்த எதிரணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று முன்தினம் (13) இரவு இடம்பெற்றது. கொழும்பு 7,  மஹகமசேகர மாவத்தையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிரணியின் 52 உறுப்பினர்கள், ஐ.தே.க, அதன் தோழமைக் கட்சிகளின் 26 உறுப்பினர்களின் துணைகொண்டு, இவ்வரசாங்கம் அமைக்கப்படுமெனத் தெரிய வருகிறது.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக, 4 பேரின் பெயர்கள் ஏற்கெனவே முன்மொழியப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, திங்கட்கிழமை இரவு, ஜனாதிபதியைச் சந்தித்த சு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கோரியிருந்தது. பிரதமர் மாற்றப்படாவிட்டால், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாக, அவர்கள் குறிப்பிட்டிருந்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் பலர் இணைந்து, நேற்று முன்தினம் இரவு, ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர். அதன்போது, இரு கட்சிகளும் இணைந்து, இப்பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக, செயற்குழுவொன்றை உருவாக்குவது என முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், இவற்றுக்கு மத்தியில், புதிய அரசாங்கத்துக்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள், ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன என்று தெரிகிறது.

« PREV
NEXT »

No comments