Latest News

November 23, 2017

அதிமுக, கொடி, இரட்டை இலை எல்லாமே எடப்பாடி அணிக்கே - தேர்தல் ஆணையம் அதிரடி
by admin - 0

ஒருங்கிணைந்த அணிகளான ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு அதிமுகவின் கட்சி, கொடி, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. டி.டி.வி தினகரன் அணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.


பிப்ரவரி மாதம் அதிமுக பிளவுபட்டது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டன. ஏப்ரல் மாதம் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது இரு அணிகளும் சின்னத்திற்கு போட்டி போடவே தேர்தல் ஆணையம் முடக்கியது.


இதனையடுத்து இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்டின. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அணியும், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைந்தன. டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வந்தார்.

இரட்டை இலைக்கு மோதிய அணிகள்

அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை யாருக்கு என்பதில் ஒருங்கிணைந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளும், டிடிவி தினகரன் அணிகளும் முட்டி மோதின. கடந்த அக்டோபர் 6ஆம் தேதி முதல் இந்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது.

7 கட்டமாக நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இரு அணிகளும் எழுத்துப்பூர்வ இறுதி வாதங்களை கடந்த 13ஆம் தேதியன்று தாக்கல் செய்தன. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.

அரசியல் கட்சியினர் எதிர்பார்த்தது போல இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைந்த ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கே என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து கட்சி, கொடி ஆகியவற்றினை முதல்வர் தலைமையிலான அணியே பயன்படுத்தும். டிடிவி தினகரனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments