Latest News

November 23, 2017

மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து நிலைத்துள்ள புனிதர்கள்!!! Maaveerar
by admin - 0

மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து நிலைத்துள்ள புனிதர்கள்!!!

மாவீரர் துயுலும் இல்லம்

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தம்மையே கொடையாக்கிய விடுதலை வீரர்களான மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து நீடித்துள்ளார்கள்.மாவீரர் துயிலும் இல்லங்களை சிதைத்தழித்துத் துவம்சம் செய்து தமிழர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்து என்னதான் இரும்புக் கரம்கொண்டு அடக்கி ஒடுக்கி அச்சுறுத்தினாலும் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட பேரினவாதத்தின் வன்கொடுமைகளைத் தாங்கிக்கொள்ளாது  தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி, கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை இம்மியளவும் விலகாது தம்மையே கொடையாக்கிய புனிதர்களான மாவீரர்களை தமிழ் மக்கள் எக்காலத்திலும் மறக்கமாட்டார்கள்.












தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த தமிழர் தாயகத்தைச் சிதைத்தழித்து தமிழர்களை அடிமைப்படுத்த பேரினவாத வன்கொடுமையாளர்கள் முற்பட்டு தமிழர்கள் மீது வன்கொடுமைகளை ஏவி விட்ட வேளை அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத தமிழ் மக்கள் தமது உரிமைக்காக தமது உயிர் வாழ்வுக்காக அமைதியாக அகிம்சை வழியில் போராடினார்கள். 

அமைதியாக அகிம்சை வழியில் போராடிய தமிழர்கள் மீது கோபம் கொண்ட சிங்களப் பேரினவாதம் காடையர்களை ஏவி ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தி தமிழர்களின் வாழ்வியலை மென்மேலும் சிதைத்து வன்கொடுமைகளைக் கட்டவுள்த்து விட்டார்கள்.










தமிழர் தாயகப் பகுதிகளில் சீரும் சிறப்புமாக அமைதியாக வாழ்ந்த தமிழர்கள் சிங்களப் பேரினவாதத்தின் இனவாத அடக்குமுறை அடாவடிகளால் உயிர்களை இழந்தும் உடல் பாகங்களை இழந்தும் இருப்பிடங்களை இழந்தும் சொத்துச் சுகங்களை இழந்தும் இன்னுமின்னும் இழக்கக் கூடாவற்றையெல்லாம் இழந்தும் அகதியாக ஏதிலிகளாக அந்தரித்து நின்ற வேளை அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் தமிழர்கள் தங்களைக் காத்துக்கொள்வதற்காக பேரினவாத வன்னொடுமைகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதற்காக தமிழர்கள் தமது தாயகத்தை வலியுறுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

அக்காலத்தில் பல்வேறு விடுதலை இயக்கங்கள் தோற்றம்பெற்றுப் போராடியிருந்தாலும் இடையில் தமது கொள்கையை மறந்து வேறு திசையில் பயணித்தமையால் அவை அனைத்தும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டன.

தமது கொள்கையில் இம்மியளவும் விலகாது இறுதிவரை தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி தமிழர்களின் பிரச்சினையை உலகத்துக்கே எடுத்துரைத்த, தமிழர்களைத் தலை நிமிர வைத்த தமிழர்களின் மாபெரும் விடுதலை இயக்கமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விளங்குகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையே தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான ஒரேயொரு அமைப்பாக நம்பினார்கள் என்பது மட்டுமல்ல இப்போதும் அதனையேதான் நம்புகின்றார்கள்.

இதன் காரணமாகத்தான் தமிழர்களின் விடிவுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தமது ஆசாபாசங்கள் அனைத்தையும் விட்டு தன்னினத்தின் விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை தமிழ் மக்கள் அன்று முதல் இன்றுவரை தமது விடுதலை வீரர்களாகவே நோக்கி நேசித்து அவர்களை நினைவுகூரும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர்-27 அன்றைய தினம் மாவீரர்களான புனிதர்களுக்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் சுடரேற்றி வணங்கி வருகின்றார்கள்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக இறுதிவரை போரிட்டு தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மானமாவீரர்களுக்குச் சுடரேற்றி வணக்கம் செலுத்தும் தமிழர்களின் பாரம்பரியம் இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் நிலைத்து நீடிக்கும் என்பதே உறுதி.

தமிழர்கள் தமது தாயகத்தில் தாமும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் துரோகத்தனங்களாலும் தமிழர்களின் நிலைத்திருப்பு மீது பொறாமை கொண்ட சில நாடுகளின் பெரும் பலத்துடன் பேரினவாதிகளால் ஈழப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்த தமிழர்கள் முள்ளிவாய்க்காலில்  கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டு தமிழர்களின் தாயகக் கனவுடனான தமிழீழ விடுதலைப் போராட்டம் பாரிய பின்னடைவைச் சந்தித்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ் தாயகப் பகுதிகள் இராணுவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலை வீரர்களான மாவீரர்களை நினைவுகூருவதற்காக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் இராணுவத்தினரால் சிதைத்தழிக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டன. 

முள்ளிவாய்க்காலில் இழக்கக்கூடாதது எல்லாத்தையும் இழந்து சிறை;பிடிக்கப்பட்டு எஞ்சிய தமிழர்கள் மனங்களில் தமது விடுதலைக்காகப் போராடிய புனிதர்களான மாவீரர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்கள் சிதைத்தழிக்கப்பட்டுள்ளதைக் காணும் போதெல்லாம் அவர்களது இதயங்கள் அழுது புலம்பின கண்களில் கண்ணீர் முட்டி வழிந்தன. 

இவளவு அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், எப்போது எமது விடுதலை வீரர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களுக்குப் போவோம் என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு நவம்பர்- 27ஐயும் எதிர்பார்த்து எதிர்பார்து தமிழர்கள் ஏங்கித் தவித்தார்கள்.

தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்த மஹிந்த ராஜபக்ச அடக்குமுறை அடாவடி ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களின் மேல் இராணுவ முகாம் அமைத்திருந்த இராணும் சில மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து விலகிச் சென்றது. 

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்தும் இராணுவ முகாம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நவம்பர்-27 மாவீரர் நாளுக்காகக் காத்திருந்த மாவீரர்களது உறவுகள் கடந்த 2008 ஆம் ஆண்டின் பின்னர் 7 வருடங்கள் கழித்து கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்-27 மாவீரர் நாள் அன்றைய தினம் தற்துணிவாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர்களது கல்லறைச் சிதறல்கள் உள்ள இடங்களில் சுடரேற்றி மாவீரர்களுக்குச் வணக்கம் செலுத்தியிருந்தார்கள்.

அவ்வேளையில் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம், வன்னிவளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர் கல்லறைச் சிதறல்கள் உள்ள இடங்களில் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் போன்ற பல மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்டு தற்போதும் மாவீரர்களை விதை;த கல்லறைகளின் மேல் பாரிய இராணுவ முகாம்கள் அமைத்து இராணுவத்தினர் தங்கியுள்ளார்கள். இது தமிழ் மக்கள் மனங்களில் ஆறா வடுவாக இருந்து வருகின்றது.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் எதிர்வரும் நவம்பர்-27 மாவீரர் நாள் நிகழ்வுகளுக்காக தயார்ப்படுத்தப்பட்டு புத்தெழுச்சி பெற்று வருகின்றது. 

எதிர் வரும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளைக் கடைப்பிடிப்பதற்காக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஒழுங்கமைப்பின் கீழ் மாவீரர்களது உறவுகள் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலராலும் சிரமதானம் மூலம் துப்புரவுப் பணி மூலம் சீரமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதனது விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 40 இலட்சம் ரூபாவில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சுற்று மதில் அமைக்கப்பட்டு வருகின்றது. மற்றும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினரது ஏற்பாட்டில் 15 இலட்சம் ரூபா செலவில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் பின்சுற்றுவட்ட வீதி திருத்தியமைக்கப்பட்டு மாவீரர் துயிலும் இல்லம் புத்தெழுச்சி பெற்று வருகின்றது.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் மதில்கள் கல்லறைகள் அனைத்தையும் கடந்த கால யுத்தத்தின் போது இராணுவத்தினர் அழித்துத் துவம்சம் செய்திருந்தனர்.

தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடி தம் இன்னுயில்களை ஈகம் செய்த மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் என்றென்றும் தமிழ் மக்களின் விடுதலை வீரர்களாகவும் புனிதர்களாகவும் போற்றப்படுவார்கள். தமிழ் இனம் உள்ளவரை மாவீரர் புகழ் நிலைத்திருக்கும்.

தமிழின விடுதலைக்காய் தன்னுயிர் ஈந்த மானமாவீரர் கண்ட கனவு ஒருநாள் நிஜமாகும் என்ற தாகத்துடன் தமிழினம் காத்திருக்கின்றது.


-காவியன்-

« PREV
NEXT »

No comments