இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சுமார் 6.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவிவில் ஏற்பட்டுள்ளது.
சுமத்திரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை அவதான மையம் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இடர் முகாமைத்துவத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி, சுமத்திரா தீவில் அருகில் 6.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுவொரு எச்சரிக்கை மாத்திரமே. சுனாமி ஏற்படும் என அறிவிக்கப்படவில்லை. இலங்கையின் கரையோரப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றோம். எனவே மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.
தொடர்ந்தும் வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்து நிலமையினை அவதானித்துவருகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய செய்தி
இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும், சற்றுமுன் அந்த எச்சரிக்கையை மீளப்பெற்றுக் கொண்டுள்ளது
No comments
Post a Comment