வடக்கில், ஆவாக்குழு இராணுவ புலனாய்வு பிரிவினால் உருவாக்கப்பட்ட ஒன்றாகுமென ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியொருவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் விடுதலைப்புலிகளது ஆதரவாளர்களை முடக்க இராணுவத்தை பயன்படுத்துவது விமர்சனங்களிற்குள்ளானது.
இதனால் இராணுவ புலனாய்வு பிரிவின் ஒரு அங்கமாக சிறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் பயிற்றுவிக்கப்பட்டதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தினில் பணியாற்றி ஓய்வுபெற்ற குறித்த அதிகாரி ஆவா குழுவிற்கு கைத்துப்பாக்கி மூலமான சூட்டுப்பயிற்சி மற்றும் கைக்குண்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
சிங்கள ஊடகவியலாளர் ஒருவரிடம் கருத்து பகிர்ந்துள்ள அவர் ஆவா குழு மூலம் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முற்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவனொருவனை அவனது வீட்டினில் வைத்து வெட்டிப்படுகொலை செய்தமை,மற்றும் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல்கள்,நெல்லியடியினில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது புலிக்கொடியினை பறக்கவிட்டு குழப்பியமை உள்ளிட்ட பல உதாரணங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
ஆனாலும் ஒரு சந்தர்ப்பத்தினில் தமது கட்டுப்பாட்டை மீறிச்செயற்பட முற்பட்டதையடுத்து கோப்பாய் காவல்துறையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.அவ்வாறு கைது செய்யப்பட்டவேளை அவர்கள் வசமிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தம்மால் வழங்கப்பட்ட கைக்குண்டுகளும் அப்போது அகப்பட்டுக்கொண்டதாகவும் தெரிவித்த அவ்வதிகாரி இதனை ஊடகவியலாளர்கள் மோப்பம் பிடித்ததையடுத்தே உண்மை வெளியினில் வந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும் அக்கைக்குண்டுகள் மீளப்பெறப்பட்டதுடன் அவை நீதிமன்றினில் சான்றுபொருளாக கையளிக்கப்படவில்லையெனவும் தெரிவித்ததுள்ளார்.
எனினும் தற்போது ஆவா குழுவை கையாளுபவர்கள் தொடர்பினில் தான் அறிந்திருக்கவில்லையெனவும் ஏதேனுமொரு அதிகாரியின் கீழா அல்லது தன்னிச்சையாகவா குழு இயங்குகின்றதென்பது தெரியாதுள்ளதாக குறித்த அதிகாரி சிங்கள ஊடகவியலாளாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆவா குழுவென்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணி வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் ஜனநாயக போராளிகள் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. செல்களை தோள்களில் சுமந்துச்சென்று தாக்குதல்களை நடாத்தி, ஜனநாயக பாதைக்கு திரும்பியுள்ள முன்னாள் போராளிகள், கத்திகளுடனும் பிளேட்டுகளுடனும் அலையவேண்டிய தேவையில்லை என்றும் அக்கட்சியின் ஊடக செயலாளர் துளசி தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment