கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கு லண்டனில் ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தத்திற்கான காரணம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
24 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்படுவதற்கு நான்வாது மாடியில் குறைபாடுகளுடன் செயற்பட்ட குளிர்சாதன பெட்டியே காரணம் என நம்பப்படுகின்றது.
நான்வாது மாடியில், 16வது வீட்டில் வசிக்கும் பிஹேய்லு கெபேடே (Behailu Kebede) என்ற டெக்ஸி சாரதியின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக அயல் வீட்டவர்களிடம் அறிவித்துள்ளார்.
அதற்கமைய, அவர் முதலாவதாக 14வது வீட்டில் வசிக்கும் மேரியேன் எடம் என்ற பெண்ணிடம் இதனை அறிவித்துள்ளார். அதன் போது நேரம் அதிகாலை 12.50 என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் தனது வீடு தீபற்றி கொண்டிருந்ததனை தான் அவதானித்ததாகவும், எனினும் தீ விபத்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் தீ விபத்து தொடர்பில் அறிவித்த 15 நிமிடங்களில் அது மிகவும் வேகமாக கட்டடம் முழுவதும் பரவ ஆரம்பித்துள்ளது. அதிகாலை 1.30 மணிவரையில் அந்த கட்டடம் தீயினால் மூடி கொண்டது.
எத்தியோப்பிய நாட்டவரான இந்த சாரதி தீயில் தனது உயிரை காப்பாற்றி கொண்டுள்ள நிலையில், சம்பவத்தினால் அவர் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக ஸ்கொட்லேன்ட் யாட் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
தீ அனர்த்தம் காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், காணாமல் போனவர்களுடன் சேர்த்து நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
No comments
Post a Comment