Latest News

May 24, 2017

ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்க மறுக்கும் வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகம்!
by admin - 0

நியமனம் பெற்று 3மாதங்கள் கடந்தும் ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்க மறுக்கும் வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகம்!
 
ஆசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்க மறுக்கும் வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகம் அவர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்கான அனுமதியை வடமாகாணக் கல்வி அமைச்சு தமக்கு எழுத்து மூலம் அறிவிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி வருவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாணசபையால் தரம-3-1(ஆ) இல் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கான சம்பளத்தையே வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகம் வழங்க மறுத்து வருகின்றது.
இவ் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதத்தை வடக்குமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் கையொப்பமிட்டு கடந்த 13.03.2017 அன்றைய தினம் வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா தலைமையில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் வைத்து வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அக்கடிதத்திற்கமைவாக வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகத்தில் தாம் கடமையைப் பொறுப்பேற்று கடிதங்களை அடுத்த நாளே சமர்ப்பித்திருந்தார்கள். இவ் ஆசிரியர்கள் முறைப்படி கடமையைப் பொறுப்பேற்ற போதிலும் இவர்களில் எவருக்குமே மூன்று சம்பள மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இவர்களுக்கான சம்பளப் பணத்தை மேற்படி வலயக் கல்வி அலுவலகம் வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்தில் இவர்களுடன் நியமனம் பெற்று ஏனைய வலயக் கல்வி அலுவலகங்களின் கீழ் கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்ட ஏனைய ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்கள் சம்பளம் வழங்கப்பட்ட நிலையிலும் வவுனிய வடக்கு வலயக் கல்வி அலுவலகம்தான் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு புதிதாக தரம்-3-1(ஆ) இல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான சம்பளப் பணத்தை வழங்குவதற்கான அனுமதிக் கடிதத்தை வடமாகாணக் கல்வி அமைச்சு தமக்கு உரிய முறைப்படி அனுப்பவில்லை அதனால் தாம் அவர்களுக்கான சம்பளத்தை வழங்கமாட்டோம் என்று கூறி வருவதாகப் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் இவ்விடயத்தை தமக்கு யாராவது எழுத்து மூலம் தந்தால் இது தொடர்பில் கதைத்துப் பார்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்
« PREV
NEXT »

No comments