Latest News

May 24, 2017

ஆதாரம் இங்கே… பாலகுமார் எங்கே? – பாமரன்
by admin - 0

ஆதாரம் இங்கே… பாலகுமார் எங்கே? – பாமரன்

 
உச்சகட்ட இன அழிப்புப்போர் நடந்து முடிந்து இன்றோடு எட்டு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நீதியின் கண்கள் திறக்குமா? என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் எண்ணற்ற ஈழ மக்கள்.
.
அதிலும் ஈழவிடுதலைப் போராட்டத்தில்
முன்னர் ஈழப்புரட்சி அமைப்பின் தலைவராகவும் (ஈரோஸ்)….
பிற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளது
முக்கிய தலைவர்களில் ஒருவராகவும்
மாபெரும் பங்காற்றிய க.வே.பாலகுமார் கதி என்னவாயிற்று?
.
அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா
என்கிற கேள்விகளுக்கான பதில்
இன்னும் கிடைத்தபாடில்லை.
.
எளிமை என்றால் அதற்கு இன்னொரு பெயர் உண்டு.
அதுதான் க.வே.பாலகுமார்.
.ஆர்ப்பரிக்காத அரசியல்…..
 

.
எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத பெருந்தன்மை….
.
இந்தியப் பிரதமரையே முதல் நாள் சந்தித்துவிட்டு வந்தாலும்
மறுநாள் ஒரு ஓட்டை சைக்கிளில்
கோடம்பாக்கத்துத் தெருக்களில் சுற்றிவரும் எளிமை…..
.
இதுதான் தோழர் பாலா.
.
எனக்கும் அவருக்குமான பாசப்பிணைப்பு ஏற்பட்டு ஏறக்குறைய முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது
என்பதெல்லாம் பிற்பாடு ஆறுதலாகக் கதைக்க
வேண்டிய சமாச்சாரங்கள்.
.
ஆனால்….
மிகச் சரியாக எட்டு வருடங்கள் முன்பு தனது மகன் சூரியதீபனுடன் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அவர் விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாயின.
.
அவர் எங்கு கொண்டுசெல்லப்பட்டார்?
எந்த முகாமில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்கிற தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
.
சிங்கள அரசின் புனர்வாழ்வு அமைச்சரோ
அவர் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டார்
என்று அடித்துச் சத்தியம் செய்தார்.
.
ஆனால் ஒரு புகைப்பட ஆதாரத்தினை வெளியிட்டு
பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் பிரிட்டிஷ்
பத்திரிகையாளர் பிரான்சிஸ் ஹாரிசன்.
.
அந்தப் படம்தான் பாலகுமார் தனது மகனுடன்
ராணுவம் சுற்றியிருக்க கையில் கட்டுடன்
முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படம்.
.
அவரோடு யோகி, கவிஞர் புதுவை ரத்தினதுரை ஆகியோர்
சரணடைந்திருந்தாலும் ஆதாரம் சிக்கியிருப்பது
இவர் ஒருவருடையதுதான்.
பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் படத்தோடு
எண்ணற்ற கேள்விகள் எழுப்பினாலும்
வாய் திறக்காமல் மெளனம் சாதிக்கிறது இலங்கை அரசு.
.
 
அதைவிட அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த
பஷீர் சேக்தாவூத் தனது அரசியல் ஆசான் பாலகுமாரையும்
அவரது மகனையும் கண்டுபிடித்து தருமாறும்
இதில் தனிப்பட்ட கவனத்தை செலுத்துப்படியும்
இலங்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும்
மிக அண்மையில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
.
நம்முன் உள்ள ஏக்கமெல்லாம்
மண்ணை மீட்க தம்மைத் தொலைத்துக் கொண்ட
பாலகுமாரும் சரணடைந்த மற்ற போராளிகளும்
எப்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள்?
என்பதுதான்.
.
உலகத்தின் மனசாட்சி தன் மெளனத்தைக் கலைக்குமா?



« PREV
NEXT »

No comments