இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வைக்கும் காரணிகள் நியாயமானவையேயாகும். எனினும் ஒரு தரப்பினர் சர்வதேச விசாரணை
பொறிமுறை அவசியமென கருத்துக்களை முன்வைக்கின்ற போதிலும் இவர்களின் கோரிக்கையை
சாதகமாக பயன்படுத்தி நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சிக்கின்றன. எவரையும் தனிப்பட்ட முறையில் திருப்திப்படுத்த சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை கருத்தில் கொண்டு சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கருத்து தெரிவித்துள்ள நிலையிலேயே நீதி அமைச்சர் விஜயதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்பு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமான காரணிகளாகும். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட, அகதியாக்கப்பட்ட மக்கள் மீண்டும் தமது சொந்த பகுதியில் குடியமர்த்தப்படல் வேண்டும் , காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிவதுடன் ஏனைய யுத்த குற்றங்கள் தொடர்பில் சரியான வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என தமிழர் தரப்பு முன்வைக்கும் காரணிகளை நிராகரிக்க முடியாது. அவை ஏற்றுகொள்ளகூடிய விடயங்களாகும்.
யுத்தத்தின் பின்னர் தொடர்ச்சியாக இந்த காரணிகள் முன்வைக்கப்பட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் முன்னைய ஆட்சியில் நல்லிணக்கம் மற்றும் மீள் குடியேற்ற நகர்வுகள் கவனத்தில் கொள்ளப்படாத நிலைமையில் சர்வதேச அழுத்தம் பலமடைய ஆரம்பித்தது.
எனினும் நாம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் நல்லிணக்கத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை பலமாக முன்னெடுத்து வருகின்றோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
படைகளின் வசம் இருந்த பொதுமக்களின் காணிகள் பெரும்பாலும் விடுவிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் நல்லிணக்க செயற்பாடுகள் பலமான வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன ஐக்கியம், தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கும் நகர்வுகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.
எனினும் அரசாங்கம் நல்லிணக்கத்தை உருவாக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் மறுபுறம் புலம்பெயர் அழுத்தங்கள் மற்றும் நாட்டில் சர்வதேச தலையீடுகளை ஏற்படுத்தி அதன் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றும் வகையில் சில தரப்பினர் செயற்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் ஒரு தரப்பினர் சர்வதேச தலையீடுகள், கலப்பு விசாரணை பொறிமுறை என்பன தொடர்பில் கருத்துக்களை முன்வைத்த போதிலும் இவர்களின் கோரிக்கையை சாதகமாக பயன்படுத்தி நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த சர்வதேச தரப்பு அமைப்புகள் எதிர்பார்த்து உள்ளன. அந்த காரணிகளுக்கு ஒருபோதும் எம்மால் இடமளிக்க முடியாது.
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை உள்ளக விசாரணை பொறிமுறை மூலமே மேற்கொள்ளமுடியும். இந்த விடயத்தில் சர்வதேச தரப்பை தலையிட அனுமதிக்க முடியாது.
இலங்கையில் கடந்த காலத்தில் நீதி பொறிமுறை மோசமானதாக அமைந்திருந்த போதிலும் தற்போது சுயாதீன சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே உள்ளக விசாரணை பொறிமுறை மூலமாக உண்மைகளை கண்டறிய முடியும். எவரதும் தனிப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்டும் ஒருசிலரது தேவைக்காக சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என்றார்.
No comments
Post a Comment