இலங்கை நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதன் நினைவு நாள் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.கடந்த 2009ம் ஆண்டு ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்து முள்ளிவாய்க்காலில் புதைத்தது இலங்கை அரசு. அதன் 8ம் ஆண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த போரில் ஶ்ரீலங்கா அரசு வெறித்தனத்தோடு தமிழர்களை கொன்று குவித்ததால் 90 ஆயிரம் பெண்கள் கணவர்களை இழந்தனர். குழந்தைகள், சிறுவர்கள் என அனைவரும் நடுத் தெருவில் திக்கு தெரியாமல் நின்றனர்.
உயிரோடு எஞ்சியவர்களையும் ராணுவ முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தது ராஜபக்சே அரசு. இந்தப் பச்சைப் படுகொலைகளால் ஈழத் தமிழர்கள் சிந்தும் கண்ணீர் 8 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தீர்ந்தபாடில்லை.
இலங்கை ராணுவத்தின் கொடிய ஆட்டத்தின் உச்சகட்டமான மே 18ம் தேதியை முள்ளிவாய்க்கால் தினமாக உலகத் தமிழர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மெழுகுவர்த்தி ஒளியில் இறந்து போன தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதிதாக கட்சித் தொடங்கப் போவதற்கான முஸ்திப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்திடம் முள்ளிவாய்க்கால் தினம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ரஜினி பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
ரஜினியின் செயல் ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு கூட பதில் சொல்ல முடியாதவர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார் என்று தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரஜினியின் இந்த செயலுக்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் ஈழத்தமிழரின் முதலீட்டில் ரஜினி திரைப்படம் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment