இலங்கைக்கு விஜயம் செய்ய கிடைத்தமை மகிழ் ச்சி தரும் விடயமாகும். நான் தற்போது கொழும்பில் இருக்கின்றேன். இலங்கைக்கு வந்ததும் வெசாக் தின மாநாட்டை ஆரம்பித்து வைப்பதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை மாலை இலங்கை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திறங்கியவுடன் மேற்கண்டவாறு சமூக வலைத் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
நேற்று மாலை 6.05 மணியளவில் கட்டுநாயக்க சர் வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கைலாகு கொடுத்து வரவேற்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கட்டுநாயக்கவில் பி்ரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் வரவேற்பு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர்களாக மங்கள சமரவீர நிமால் சிறிபால டி. சில்வா மலிக் சமரவிக்ரம மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்துகொண்டனர். . அத்துடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் வெ ளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கட்டுநாயக்கவில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்திய பிரதமர் மோடி வருகைதந்த எயார் இந்தியா விமானம் 5.40 மணியளவில் தறையிறங்கியது. அதன் பின்னர் 6.5 மணியளவில் பாரத பிரதமர் மோடி விமானத்திலிருந்து இறங்கினார். விமானத்தில் இருந்து இறங்கிய இநதிய பிரதமரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருகரம் கூப்பி வரவேற்று அழைத்துச் சென்றார்.
தொடர்ந்து இரண்டு குழந்தைகள் இந்திய பிரதமருக்கு மலர்சென்று வழங்கி வரவேற்றனர். அதன் பின்னர் நிகழ்வில் பங்கேற்ற இலங்கையின் அமைச்சர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிமுகம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் அதிதிகள் புத்தகத்தில் தனது பதிவை இட்டார்.
அதனையடுத்து இந்திய பிரதமர் மோடியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒரே வாகனத்தில் கொழும்பை நோக்கி பயணித்தனர்.
கங்காராம விஜயம்
கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கங்காராம விஹாரைக்கு விஜயம் செய்த நிலையில் இந்திய பிரதமர் மோடி அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த வெசாக் வலயத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்களான சுவாமிநாதன் மங்கள சமரவீர சாகல ரத்நாயக்க விஜேதாச ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
வெசாக் வலயத்தை திறந்து வைத்த இந்திய பிரதமர் மோடி பிரதமர் ரணிலுடன் இணைந்து மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார். அத்துடன் அந்த நிகழ்வில் வரவேற்புரையும் இடம்பெற்றது. கங்காராம தேரர்கள் இந்திய பிரதமர் மோடியை ஆசிர்வதித்ததையும் அவதானிக்க முடிந்தது.
ஜனாதிபதி விருந்துபசாரம் சம்பந்தன் சி.வி. பங்கேற்பு
தொடர்ந்து கொழும்பில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்துபார நிகழ்வில் இந்திய பிரதமர் கலந்துகொண்டார். இந்த விருந்துபசார நிகழ்வில் அமைச்சர்கள் இராஜதந்திரிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சபாநாயகர் கருஜயசூரிய வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ஷ மலிக் சமரவிக்ரம ரவி கருணாநாயக்க நிமால் சிறிபால டி. சில்வா இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை நேற்று இலங்கை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர இன்று வௌ்ளிக்கிழமை கொழும்பிலும் கண்டியிலும் அட்டனிலும் பல்வேறு முக்கியத்துவமிக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேச்சுநடத்தவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வு
இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க புத்தசாசன மற்றும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் பௌத்த மத தலைவர்கள் பலரும் உரையாற்றவுள்ளனர். வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் உயர்மட்ட அரச அதிகாரிகளும் வெ ளிநாட்டு தூதுவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த ஐக்கிய நாடுகள் வெசாக்தின ஆரம்ப நிகழ்வில் 10 மணியிலிருந்து 10.20 வரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உரையாற்றவுள்ளனர். வரவேற்புரையை புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நிகழ்த்துவார். மேலும் இந்த நிகழ்வில் பௌத்த மத தலைவர்களும் படிரதான உரையாற்றவுள்ளனர்.
மலையக விஜயம்
கொழும்பு நிகழ்வை முடித்துக்கொண்டு காலை 11.00 மணியளவில் மலையகத்துக்கு செல்லவுள்ள இந்திய பிரதமர் மோடி டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையை திறந்துவைக்கவுள்ளார். அதன் பின்னர் அங்கு பொதுக் கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளதுடன் இந்திய பிரதமர் அந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். இந்த கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ள மலையக மக்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் தொடர்பில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து அங்கு அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சந்தித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மலையக தலைவர்களுடன் சந்திப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணியுடனான சந்திப்பின் போது, 2015ஆம் ஆண்டில் முதன் முறையாக பிரதமர் மோடி இலங்கை வந்தபோது, இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்தொடர்ச்சி பற்றி ஆராயப்படும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்புக்களை அடுத்து தலதா மாளிகைக்கு செல்லவுள்ள இந்திய பிரதமர் மோடி அங்கு இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து அங்கிருந்தவாறு கட்டுநாயக்க வரும் இந்திய பிரதமர் மோடி தமிழ்க் கூட்டமைப்பை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
சம்மந்தன் - மோடி சந்திப்பு
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் மோடி பேச்சுநடத்தவுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அதில் இந்தியாவின் வகிபாகம் அரசியல் தீர்வு தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.
தமிழ் மக்கள் எவ்வாறான அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றனர் என்றும் அது தொடர்பிலும் இந்தியாவிடமிருந்து எவ்வாறான பங்களிப்பு தேவை என்பது குறித்தும் இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய பிரதமர் மோடிக்கு விளக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இதேவேளை இலங்கைக்கு வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையுடன் எவ்விதான உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. வெசக் தினம் இதற்கு முன்னர் இரண்டு நாடுகளில் 13 தடவைகள் இடம்பெற்றுள்ளன. தாய்லாந்தில் 11 தடவைகளும் வியட்னாமில் 2 தடவைகளுமாக இடம்பெற்றுள்ளதுடன் மூன்றாவது நாடாக இலங்கை அமைந்துள்ளது. 1999 ஆம் ஆண்டில் அப்போதைய வெளிவிவகார அமைச்சரான லக்ஷமன் கதிர்காமர் பௌத்த மதத்தில் இலங்கைக்குள்ள சிறப்புகளை எடுத்துரைத்து ஐ.நா.வில் வலியுறுத்தியமைக்கு அமைவாக இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கையில் நடைப்பெறுகின்ற ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தில் கலந்துக்கொள்வதாக அமெரிக்கா சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட சுமார் 80 திற்கும் மேற்பட்ட நாடுகள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் டில்லியில் நடைபெற்ற பீம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார்.
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். அதன் பின்னர் தற்போது இலங்கைக்கு வருகின்றார். இடைப்பட்ட காலத்தில் இரண்டு நாடுகளினதும் அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் அவ்வப்போது உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டிருந்தனர்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்போதைய வர்த்தக கொடுக்கல் வாங்கல் பெறுமதியானது 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இரண்டு நாடுகளுக்கு இடையிலும் பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையை செய்துகொள்ளும் நோக்கில் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. விரைவில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கடந்த 2000 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. அந்தவகையில் இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயமானது வரலாற்று முக்கியத்துவமிக்கதாக காணப்படுகின்றது.
No comments
Post a Comment