தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கோரி வருகின்ற நிலையில் அதற்கு அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்காவிடினும் அல்லது மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் செவிமடுக்காவிடினும் மக்கள் விரக்தி அடைந்துவிடுவதுடன் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு முன்வந்துவிடுவார்கள். காரணம் கோரிக்கைகளின் மூலம் அல்லது வேண்டுகோள்களின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடியாத தமது தேவைகளை மக்கள் போராட்டங்களின் மூலம் நிறைவேற்றிக்கொள்வதற்கு முயற்சிப்பதை தவிர்க்க முடியாது. அந்தவகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறும் தமது தேவைகளை நிலைநாட்டுமாறும் தமக்கு நீதியைப் பெற்றுத்தருமாறும் வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
விசேடமாக வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் தற்போதுகூட பல்வேறு வகையான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் காணிகளை இழந்த மக்கள் தமது காணிகளை மீள வழங்குமாறு வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோன்று காணாமல் போனோரின் உறவுகளும் காணாமல் போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். அதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் காணாமல் போனோரின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் யுத்தகாலத்தில் பல்வேறு கஷ்டங்கள், பிரச்சினைகளுக்கு மத்தியில் படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகளும் தமக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டுமெனக்கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இன்று ஒரே போராட்ட மயமாக காட்சியளிக்கின்றன. அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமென இதுவரை காலமும் பொறுமையாக இருந்த மக்கள் தற்போது பொறுமையை இழந்த நிலையில் தொடர் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஆரம்பித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 24 ஆம் திகதிவரை நடைபெற்றது. இந்நிலையில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்தப் போராட்டங்கள் ஆரம்பமாகின. இந்நிலையில் ஜெனிவா கூட்டத் தொடர் முடிவடைந்ததும் போராட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவ்வாறில்லாது போராட்டங்கள் தீவிரமடைய ஆரம்பித்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தாம் தமக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் மிகவும் வலுவான முறையில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களும் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்கவேண்டுமென வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஏற்கனவே கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் அவர்களுடைய குறிப்பிட்டளவிலான காணிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து அந்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னரே கேப்பாப்புலவு பூர்வீக கிராமமக்களின் தொடர் போராட்டம் ஆரம்பமானது. இந்தப் போராட்டம் தற்போது ஆரம்பமாகி ஒருமாதம் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை அந்தப் போராட்டம் தொடர்பில் அரசாங்கம் சாதகமாக அணுகவில்லையென்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. குறிப்பாக கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களின் போராட்டத்தையோ அல்லது அந்த மக்களின் குமுறல்களையோ அரசாங்கம் உரிய முறையில் செவிமடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த மக்கள் சளைத்துவிட்டதாக தெரியவில்லை. மாறாக போராட்டத்தின் தீவிரத்தை தொடர்ந்து அதிகப்படுத்தியுள்ளனர்.
அந்தவகையில் தொடரும் அந்த மக்களின் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு விஜயம் செய்திருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது அந்த மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், அவர்களுக்கு தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் கூறியிருந்தார். விசேடமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிடுகையில்
கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில் நானும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் ஜனாதிபதியிடம் பேசினோம். அவர் உங்களின் காணிகளை விடுவிக்கலாம் என தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தெரியவில்லை. காரணம் கேப்பாப்புலவில் முல்லைத்தீவின் பிரதான பாதுகாப்பு படைத்தலைமையகமே அமைந்துள்ளது. அது வேறு ஒரு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தெரியாது. ஆனால் மிக விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் என்று கூறியிருந்தார்.
அத்துடன் நீங்கள் உங்கள் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள் விரைவில் நல்ல முடிவை பெற்று தருவதற்காக உரியவர்களுக்கு தொடர்ந்தும் அழுத்தத்தை நாங்கள் பிரயோகிப்போம் என்றும் கேப்பாப்புலவு போராட்ட மக்களிடம் சுமந்திரன் எம்.பி. கூறியிருந்தார். அந்தவகையில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்ற கேப்பாப்புலவு மக்கள் தமது போராட்டம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தவில்லையென கோரிவந்திருந்தனர். அந்த நிலையிலேயே நேற்று முன்தினம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இந்த மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை விசேட அம்சமாகும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தொடர்ச்சியாக தீவிரமான முறையில் தமது போராட்டத்தை நீடித்து வருகின்றனர். தமது காணிகள் கிடைக்கும் வரை எக்காரணம் கொண்டும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று இந்த மக்கள் அழுத்தம் திருத்தமாக கூறிவருகின்றனர்.
அதாவது இறுதிப்போரில் இழப்புகளை சந்தித்து உறவுகளைத்தொலைத்து சொந்தநிலத்திலாவது வாழ்ந்து எமது மீதி வாழ்க்கையை கொண்டு நடத்தலாம் என வந்த எங்களுக்கு இன்னும் இன்னும் துன்பத்தை ஏன் இந்த அரசாங்கம் தருகின்றது என்று கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் ஜனாதிபதி அவர்களே எம்மை திருப்பிப் பாருங்கள், நாமும் இந்த நாட்டின் பிரஜைகள் தானே எமக்கு இந்த மண்ணில் வாழ உரிமையில்லையா? எம்மை எமது சொந்த நிலத்துக்கு திரும்ப அனுமதியுங்கள். எமக்கு எமது கேப்பாப்புலவு மண்ணை பெற்றுத்தாருங்கள் என ஜனாதிபதியிடம் கேட்பதாகவும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாம் அரசாங்கத்தின் சொத்தை கேட்கவில்லை, ஆண்டாண்டுகாலம் வாழ்ந்த சொந்த தாய்நிலத்தையே கோரி நிற்கின்றோம். அத்தோடு சொந்த தாயை பறித்து வைத்துக்கொண்டு இன்னொருவரை காட்டி இவர்தான் உங்கள் அம்மா எனக்கூறுவது போன்றதுதான் நாம் தற்போது குடியமர்த்தப்பட்டுள்ள கேப்பாப்புலவு மாதிரிக்கிராம வாழ்க்கையாகும். கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு எவ்வாறான வழிகளிலெல்லாம் ஆதரவு கிடைத்ததோ அவ்வாறே கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களான எமக்கும் அனைவரும் திரண்டுவந்து ஆதரவு அளிக்கவேண்டும். எமது நிலத்தை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் இந்த மக்கள் மிகவும் திட்டவட்டமான முறையில் தெரிவித்திருக்கின்றனர். அந்தவகையில் தமது காணிகளை மீட்டுக்கொள்வதற்காக வடக்கில் மக்கள் மிகவும் தீவிரமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அதாவது யுத்தம் முடிவடைந்து கடந்த ஏழரை வருடங்களாக மக்கள் பொறுமையுடன் காத்திருந்தனர். அதாவது அபகரிக்கப்பட்ட தமது காணிகள் விரைவாக மீள வழங்கப்படுமென்றும் காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக காத்திருந்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
எனவே மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீள் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் உறுதியாக இருப்பதாக கருதப்படுகிறது. அதாவது இந்த விடயத்தில் ஜனாதிபதி மிகவும் உணர்வுபூர்வமானவராக இருப்பதாக கருதப்படுகிறது. அடிக்கடி யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு காணிகளை இழந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் முகாம்களில் எதிர்கொண்டுள்ள அவல நிலைமைகளை நேரில் பார்வையிட்டிருந்தார். அத்துடன் இந்த மக்களின் காணிகள் விரைவாக விடுவிக்கப்படவேண்டுமென்றும் தமது காணிகளை இழந்துவிட்டு வருடக்கணக்காக மக்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்ததுடன் மக்களின் விடுவிக்கக்கூடிய காணிகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க விசேட செயலணியொன்றையும் நியமித்தார். ஆனால் அந்த செயலணி இதுவரை நடவடிக்கைகளை உரிய முறையில் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்ததுமே வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றவகையில் அரசாங்கமும் சில நடவடிக்கைகளை எடுத்திருந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த செயற்பாடுகள் அசமந்தப்போக்கை அடைந்தன. அதனால்தான் பொறுமையுடன் காணப்பட்ட மக்கள் தற்போது போராட்டங்களை ஆரம்பித்திருக்கின்றனர். இதேவேளை காணாமல் போனோரின் உறவினர்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காணாமல் போனோர் விவகாரத்திலும் பாதிக்கப்பட்ட மக்கள் பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்டனர். தமது காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் கண்டுபிடித்து தமக்கு கூறும் என எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. எனவே மக்கள் பொறுமையிழந்து தற்போது தமக்கு நீதி வழங்கக்கோரி தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் காணாமல் போனோரின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தது. அதற்கான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை அந்த காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை நிறுவுவதற்கும் இயங்க வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி நிறைவேற்றம் குறித்த சட்டத்தை மீண்டும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது.
காணாமல்போனோரின் உறவினர்கள் அவ்வப்போது தமக்கு நீதிவழங்கவேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்ற போதிலும் அரசாங்கம் அவை தொடர்பில் கருத்தில் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. எனவேதான் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர். எனவே இந்த போராட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் விரைந்து கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் காணாமல்போனோரின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதுடன் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் மீளவழங்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீடிக்கும் வகையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளது. அதனால் காணாமல்போனோர் விவகாரம் மற்றும் காணிப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்த விடயத்தில் அரசாங்கம் பொறுப்பை தட்டிக்கழித்து செயற்பட முடியாது. தற்போதைய நிலைமையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தீவிரமாக பரவியிருக்கும் பிரச்சினையாக காணாமல் போனோர் விவகாரம் காணிப்பிரச்சினை என்பன காணப்படுகின்றன. எனவே இதற்கு முதற்கட்டமாக அரசாங்கம் தீர்வுகாணவேண்டும். அதனூடாகவே நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும் அரசாங்கம் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். குறிப்பாக நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் செவிமடுக்கவேண்டியது அவசியமாகும். தொடர்ந்தும் இந்த விடயத்தில் செவிமடுக்காத தன்மையுடனும் அசமந்த போக்குடனும் செயற்படக்கூடாது. நீதிக்காக ஏங்கி போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு விடிவே கிடைக்காதா? என்பதே தற்போது நீதியை வலியுறுத்துவோர் மத்தியில் எழுந்துள்ள வினாவாகும்.
ரொபட் அன்டனி
No comments
Post a Comment