Latest News

April 06, 2017

மதுபான தொழிற்சாலைகள் அவசியமானவையா ?
by admin - 0

"மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு மது மற்றும் புகைத்தலுக்காக 41 கோடியே 36 இலட்சத்து 99 ஆயிரத்து 680 ரூபா செலவிடப்படுவதாக புள்ளிவிபர தகவல்கள் குறிப்பிடுகின்றன. எனவே, சிறுபான்மை இன மக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது பல்வேறு சந்தேகங்களுக்கு காரணமாகியுள்ளது"

மூன்று தசாப்த கால போர் முடிவடைந்து தற்போது பொருளாதாரம் அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் இலங்கை தற்போது பல்வேறு நாடுகளுடன் இணைந்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இவை காலத்தின் கட்டாயமாகும். ஏனென்றால் உள் நாட்டு போர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உயிர்களை மாத்திரம் சிதைக்க வில்லை. பல தசாப்தங்கள் பின்னோக்கி இலங்கையை கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் ஏனைய வலய நாடுகளுடன் எதிர் நீச்சல் போடுவதற்கு இலங்கை கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. இதற்கு ஏற்றாற்போல உலக நாடுகளின் முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவை அனைவராலும் எதிர்பார்ப்புடன் நோக்குகின்ற விடயங்களாகும்.

ஒரு ஆட்சியின் உயர்வும் மதிப்பும் எவ்வாறு கணிக்கப்படுகின்றது என்பதற்கு நாம் அனைவரும் பள்ளியில் கற்ற விடயம் ஒன்றை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர விரும்புகின்றேன். அதாவது ''வரம்பு உயர நெல் உயரும் -நெல் உயர்ந்தால் குடி உயரும் -குடி உயர்ந்தால் கோன் உயரும்'' என்பதாகும். சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் மக்கள் உயர்வை அடையும் போது தான் அரசாங்கம் தலைநிமிர்ந்து ஆட்சி செய்ய முடியும்.

இந்த சொற்களில் புதைந்து கிடக்கும் ஆழமான கருத்துக்களுக்கு அன்று பெரிதாக விளக்கம் அறிய விரும்ப இல்லை. ஆனால் இன்றைய சூழலில் சமூக பொறுப்புடையவர்கள் என்ற வகையில் சிந்திக்கும் போது அன்று சிறுவயதில் கற்றுக்கொண்ட விடயங்கள் இன்று எந்தளவிற்கு பிரதிபலிக்கின்றது என்பதை நினைக்கும் போது மெய்சிலிர்க்கின்றது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்ட வரிச்சலுகையினை பின்னணியாக கொண்டே இந்த மதுபான தொழிற்சாலை திட்டம் ஆரம்பமாகின்றது. குறிப்பாக சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண முதலீடுகள் குறித்து அரசாங்கம் குறிப்பிடுகையில் 450 கோடி ரூபாவிற்கு அதிகமான முதலீடு மற்றும் பிரதேச மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முகமாக 250 பேருக்கு அதிகமான தொழில்வாய்ப்புகள் என நிபந்தனை விதித்துள்ளது.

இலங்கையை பொறுத்த வரையில் இவ்வாறான நிர்ணயங்கள் மற்றும் நிபந்தனைகள் முக்கியமா னதாகும். ஆனால்

அரசாங்கம் நல்லெண்ணத்துடன் வழங்கப்படுகின்ற வரிச்சலுகையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு முரணான வகையில் சில திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கையில் அனுமதிபெற்ற 24 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன. கல்குடாவில் அமைக்கப்படுகின்ற மதுபான தொழிற்சாலையும் மேற்குறிப்பிட்ட தொழிற்சாலைகளில் ஒன்றுடன் தொடர்புபட்டுள்ளது. கல்குடா, கும்புறுமூலை பகுதியில் 19 ஏக்கர் தனியார் காணியில் உருவாக்கப்பட்டு வருகின்றது.

ஆரம்பத்திலேயே பலரின் எதிர்ப்புகளுக்கு பாத்திரமான இந்த மதுபான தொழிற்சாலையை தடைசெய்வது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் நேரடியாக நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியிருந்தார்.

மேலும் தீர்மானம் கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மற்றுமொரு தீர்மானம் எடுக்கப்பட்டது. இதில் தெளிவாகவே அப்பிரதேசத்தில் இருந்து மதுபான தொழிற்சாலையை அகற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்கப்பட்டிருந்தது. இவ்விரு தீர்மானங்களின் அடிப்படையில் மதுபான தொழிற்சாலையை நிர்மாணிக்கும் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானம் எழுத்து மூலமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் தடைசெய்ய நடவடிக்கை மேற்கொண்டால் நீதிமன்றத்தினூடாக எதிர் நடவடிக்கை எடுப்பதாக குறித்த நிறுவனம் பதில் கடிதம் அனுப்பிய நிலையில் , நிலைமை கடுமையான மக்கள் போராட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியது.

ஏறாவூருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதை ஒழிப்பு செயலணிக்குத் தலைமை தாங்கி நிகழ்வில் கலந்துகொண்டார். உறுதிமொழிக்கும் செயற்றிட்டங்களுக்கும் இடையில் காணப்படுகின்ற முரண்பட்ட நிலைப்பாடு மக்கள் மத்தியில் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு மது மற்றும் புகைத்தலுக்காக 41 கோடியே 36 இலட்சத்து 99ஆயிரத்து 680 ரூபா செலவி டப்படுவதாக புள்ளிவிபர தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில் கல்குடா மதுபான தொழிற்சாலை ஊடாக கிழக்கு மாகாண உள்ளிட்ட நாட்டு மக்களை மேலும் சீரழிவை நோக்கி கொண்டு செல்வதா நோக்கம் என்ற கேள்வியே தற்போது எழுகின்றது.

மட்டக்களப்பு, - கல்குடா, - கும்புறுமூலை பிரதேசங்களில் அமைக்கப்பட்டு வரும் மதுபான தொழிற்சாலை பல சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ளது. மக்கள் எதிர்ப்புகள் மேலோங்கியுள்ள நிலையில் கோறளைப்பற்று பிரதேச சபை குறித்த மதுபான தொழிற்சாலைக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பினர் அவற்றை கருத்தில் கொள்ளாது தொழிற்சாலையை அமைக்கும் பணிகளை முன்னெடுக்கின்றனர்.

மாகாண சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட அப்பிரதேச மக்கள் மதுபான தொழிற்சாலை இங்கு வேண்டாம் என்று கூறியும் அதனை பொருட்படுத்தாது தன்னிச்சையாக செயற்படுவதற்கு வலுவான பின்புலம் இருக்கின்றமை வெளிப்படுகின்றது.

போரில் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எத்தனையோ பயன்தரக் கூடிய தொழிற்சாலைகள் திறக்கப்படாது சிதைவுகளுடன் மூடிக்கிடக்கின்ற நிலையில் மதுபான தொழிற்சாலையை திறக்க வேண்டியதன் அவசியம் என்ன? மாகாண சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த கல்குடா மதுபான தொழிற்சாலை அமைக்கப்படுகின்றது.

வலுவான அரசியல் பின்புலத்தின் காரணமாகவே அனைவரினதும் எதிர்ப்பை மீறி மதுபான தொழிற்சாலையை முன்னெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறுவதற்கு சிறுபான்மை இன மக்களின் ஆதரவே காரணம் அவர்களின் வாழ்வியல் பாதிக்கப்படும் வகையில் திட்டங்களை முன்னெடுப்பது அநாகரீகமான செயலாகும்.

நாட்டின் சனத்தொகையின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் போது மட்டக்களப்பில் தான் அதி கூடிய மதுபானசாலைகள் காணப்படுகின்றன. மதுபான பயன்பாட்டால் இன்றும் மிகவும் மோசமான பாதிப்புகளை வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பில் 20 மதுபானசாலைகள் இருக்க வேண்டிய இடத்தில் 60 இற்கும் மேற்பட்ட மதுபானசாலைகள் காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிறுபான்மை இன மக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது பல்வேறு சந்தேகங்களுக்கு காரணமாகியுள்ளது. மதுவை ஒழிப்பதே அரசாங்கத்தின் தேசிய கொள்கையாகும். இதற்காக ஜனாதிபதி விசேட செயலணியும் உருவாக்கியுள்ளார். எனவே வழங்கிய உறுதி மொழிகளை மீறி மதுபான தொழிற்சாலை அமைப்பதனை எவ்விதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது.

மனித வளத்தை பாதுகாக்காது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. இந்நிலையில் தொழில்வாய்ப்பு தருவதாக கூறி அமைக்கப்படும் மதுபான தொழிற்சாலையினால் எத்தனை பேர் பாதிக்கப்படப் போகின்றனர். அந்த தொழிற்சாலையின் உற்பத்தியினால் எத்தனை உயிர்கள் காவுகொள்ளப்படப் போகின்றன என்பதைக் கூற விரும்பாமை கவலையளிக்கின்றது.

குறித்த மதுபான தொழிற்சாலை அமைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டமானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பகுதியாகும். இந்த மக்களின் கலாசாரம் மற்றும் பண்பாடுகள் உள்ளிட்ட வாழ்வியலுடன் எவ்விதத்திலும் மதுப்பானம் ஒத்துப்போகாது. மேலும் போரின் பின்னர் பல்வேறு வகையில் பொருளாதார ரீதியிலும் உள ரீதியிலும் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு வாழ்கின்ற நிலையில் அவர்களுக்கு சிறந்த வாழ்வாதார சூழலை ஏற்படுத்தி கொடுப்பதற்கு பதிலாக மேலும் பாதாளத்தில் தள்ளிவிடும் வகையிலேயே தற்போதைய நடவடிக்கைகள் காணப்படுகின்றன.

ஆகவே ஜனாதிபதி, கல்குடா மதுபானசாலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். அபிவிருத்தித் திட்டங்களும் தொழில்வாய்ப்புகளும் இன்றியமையாதவையாக இருந்தாலும் அந்த திட்டங்கள் மக்களின் பேரழிவுகளுக்கு காரணமாக அமைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருத்தல் வேண்டும். இதனையே கல்குடா மதுபான தொழிற்சாலை தொடர்பில் எழுந்துள்ள பல துறைகளை சார்ந்த எதிர்ப்புகள் வெளிப்படுத்துகின்றன. 

லியோ நிரோஷ தர்ஷன்
« PREV
NEXT »

No comments