வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்திய தமிழ் தேசிய மே நாள் கிளிநொச்சியில்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தும் வகையில் வடமாகாணத்திற்கான தமிழ் தேசிய மே நாள் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உறவினர்களின் கண்முன்னே இராணுவத்தால் கூட்டிச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் பல்வேறு சந்தரப்பங்களில் இராணுவத்தாலும் இராணுவத் துணை ஒட்டுப்படைகளாலும் பிடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடுதலையை வலியுறுத்தி அவர்களது உரிமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இம்முறை கிளிநொச்சியில் வடமாகாணத்திற்கான தமிழ் தேசிய மே நாள் இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்றலில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் காணாமல் ஆக்கப்பட்டோரது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊர்திப் பவனிகளுடன் கூடிய தமிழ் தேசிய மே நாள் ஊர்வலம் ஏ-9 வீதி வழியாக கிளிநொச்சி நகர் டிப்போச் சந்தியைச் சென்றடைந்து அங்கு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மே தினக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள வடமாகாணத்திற்கான தமிழ் தேசிய மே நாள் நிகழ்வுகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தொழிலாளர்களது குடும்பங்கள் வாழ வழியற்ற நிலையில் ஆட்சியாளர்களால் ஆக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டு ஒழித்து வைத்துள்ள அந்தத் தொழிலாளர்களை உடனடியாக வெளிப்படுத்தி விடுதலை செய்ய வலியுறுத்துவதாக அமையவுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை எமது சொந்த உறவுகளாக நோக்கி அவர்களது குடும்பங்களின் வலிகளையும் வேதனையையும் புரிந்து அவர்களது விடுதலைக்காக உரக்கக் குரல் கொடுக்க அனைவரையும் கிளிநொச்சியில், தமிழ் தேசிய மே நாள் நிகழ்வுக்களில் ஒற்றுமையாய் ஓரணியில் ஒன்றிணையுமாறு தமிழ் தேசிய மே நாள் ஒழுங்கமைப்புக் குழு அழைப்பு விட்டுள்ளது.
No comments
Post a Comment