Latest News

May 01, 2017

திரு. அ.அமிர்தலிங்கத்தின் சாவிற்கு யார் காரணம்? மு. திருநாவுக்கரசு
by admin - 0

திரு. அ.அமிர்தலிங்கத்தின் சாவிற்கு யார் காரணம்?

மு. திருநாவுக்கரசு
 
1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழீழம் அமைப்பதற்கான ஆணையை தமிழர் விடுதலை கூட்டணி மக்களிடம் கோரிய அதேவேளை அவ்வாறு ஆணை கிடைக்குமிடத்து ‘தமிழீழ நிழல் அரசாங்கம்’ ஒன்றை தாம் அமைக்கப் போவதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் அதைப் பற்றி விபரமாக தேர்தல் மேடைகளில் பேசும் போது அயர்லாந்து விடுதலைப் போராளிகள் 1920ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதும் ஓர் “அயர்லாந்து நிழல் அரசாங்கத்தை” அமைத்தது போல தாமும் அப்படி ஒரு அரசாங்கத்தை அமைக்கப் போவதாக உறுதியளித்தனர்.

மேடைகளில் பேசும் போது தமிழில் “நிழல் அரசாங்கம்” என்று பிழையாக கூறியிருந்தாலும் ஆங்கிலத்தில் இவர்களால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் சரியான பதப்பிரயோகம் இருந்தது (தமிழில் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் கிடைக்கவில்லை.)  நிழல் அரசாங்கம் என்பது ஆங்கிலத்தில்  Shadow Government  எனப்படும். ஆனால் இவர்கள் Provisional Government  என்ற பொருளை மனதில் கொண்ட போதிலும் அதற்கு பிழையான தமிழ் மொழிபெயர்ப்பை மேடை பேச்சுக்களின் போது பிரயோகித்தனர். இதன் சரியான தமிழ்ப் பிரயோகம் “இடைக்கால அரசாங்கம்” என்பதாகும். ஆனால் இவர்களது ஆங்கில தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதுபற்றி விரிவான, தெளிவான பதப்பிரயோகங்கள் உண்டு. 

அந்த “TULF Manifesto”வில் விடுதலையை எப்படி அடைவது என்ற உப தலையங்கத்தின் கீழ் 18ஆம் பக்த்தில் உள்ள பந்தியில் தேர்தல் மூலம் ஆணை கிடைத்ததும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கொண்ட “தமிழீழ தேசியப் பேரவை” - “National Assembly of Tamil Eelam”  - உருவாக்கப்படும் என்றும் அது சுதந்திர தமிழீழ அரசுக்கான அரசியல் யாப்பை உருவாக்கும் என்றும் அந்த சுதந்திர தமிழீழ யாப்பானது அமைதியான வழிமுறைகள் மூலமோ அல்லது வேறு நேரடி நடவடிக்கைள் மூலமோ அல்லது போராட்டங்கள் மூலமோ நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் 1977ஆம் ஆண்டுத் தேர்தல் மேடைகளில் மேற்படி அயர்லாந்து பாணியிலான ஓர் இடைக்கால அரசாங்கத்தை (அவர்கள் கூறிய ஒரு தமிழீழ நிழல் அரசாங்கத்தை) அமைக்கப் போவதாக கூறினர். ஆனால் தேர்தலின் பின்பு அவ்வாறு தமிழீழ அரசை உருவாக்கத் தவறினர். மூன்று வருடங்கள் கழிந்தும் அவ்வாறு அவர்கள் கூறிய “தமிழீழ நிழல் அரசாங்கம்” அமைக்கப்படாத நிலையில் அமிர்தலிங்கத்திற்கும், தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கும் எதிராக இளைஞர்கள் திரும்பத் தொடங்கினர். 
 
1977ஆம் ஆண்டு தேர்தலின் போது, அதுதான் தமிழ் மண்ணில் நடக்கும் கடைசித் தேர்தல் என்றும் இனி தமிழீழத்திற்தான் அடுத்த தேர்தல் நடைபெறும் என்றும் அமிர்தலிங்கம் தலைமையிலான பலரும் தேர்தல் மேடைகளில் பேசிவந்தனர். எனவே அதன் பின்பு 1981ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் அமிர்தலிங்கம் ஈடுபடுவது பிழையானது என்பதே ஆயுதம் தாங்கிய அமைப்புக்களின் நிலைப்பாடாக அமைந்தது.

‘அமிர் அண்ணாச்சி! நிழல் அரசாங்கம் என்னாச்சு!’ என்று 1980ஆம் ஆண்டு வாக்கில் மதிற்சுவர்களில் எழுதப்பட்டன, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 
தந்தை செல்வாவின் மருமகனான பேராசிரியர் ஏ.ஜே.வில்சனை ஏற்பாட்டாளராகக் கொண்டு ஜனாதிபதி ஜெவர்த்தனாவுக்கும் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவருமான அமிர்தலிங்கத்திற்கும் இடையே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் 1979ஆம் ஆண்டில் இருந்து சுமாராக மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தன. 

இப்பேச்சுவார்த்தைகளின் விளைவாக “தமிழீழக் கோரிக்கைக்குப்” பதிலாக “மாவட்ட அபிவிருத்திச் சபைகள்” என்னும் தீர்வை நோக்கி அமிர்தலிங்கம் செயற்படலானார். இது இளைஞர்கள் மத்தியில் அமிர்தலிங்கத்திற்கு எதிரான சீற்றத்தை பெரிதும் அதிகரித்தது. 
இது விடயத்தில் புலிகள் தரப்பில் எழும் எதிர்ப்பை சமாளிப்பதற்காக திரு. வே.பிரபகாரனின் தந்தையார் திரு. வேலுப்பிள்ளையை யாழ் மாவட்ட சபை தலைவராக தேர்தலில் போட்டியிடச் செய்யப் போவதான செய்தியொன்று கூட்டணியினர் தரப்பில் இருந்து கசிந்தது.

அப்படி தன் தகப்பனார் யாழ் மாவட்ட சபை தேர்தலில் போட்டியிடுவாரானால் அவருக்கு “மண்டையில் போடும்” பொறுப்பு தன்னுடையதுதான் என்று பிரபாகரன் கூறினார் (மண்டையில் போடுவது என்பது குழுக்குறி அர்த்தத்தில் சுட்டுக் கொல்வது என்பதாகும்). இதைக் கண்டு இயக்க உறுப்பினர்கள் வியப்பும் பிரமிப்பும் அடைந்தனர். இச்செய்தி மக்கள் மத்தியிலும் பரவலாக உலாவியது. அத்துடன் அமிர்தலிங்கத்தின் செவிகளையும் இச்செய்தி எட்டியிருக்க முடியும். ஆனாலும் மாவட்ட சபைகள் சம்பந்தமாக அதற்கு இருக்கக்கூடிய எதிர்ப்பின் கடுமையை அமர்தலிங்கம் சரிவர கணிப்பிட்டிருக்கவில்லை எனத் தெரிகிறது.

இதன் விளைவாக இக்கால கட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் யாழ் பல்கலைக்கழகத்தை தளமாக்க கொண்டு வெளியான “உணர்வு” பத்திரிகை அமிர்தலிங்கத்தின் மேற்படி அரசியலுக்கு எதிரான கடும் நிலைப்பாட்டை எடுத்தது. தமிழ் மண் எங்கும் பரந்தளவில் அப்பத்திரிகை விநியோகிக்கப்பட்டு வந்தது. 
அக்காலத்தில் வெளியான ஈரோஸ் இயக்கத்தின் “தர்க்கீகம்” என்ற பத்திரிகை “தந்தைக்குப் பின் தளபதி தலைவராவாரா?” என்ற கேள்விக்குறியோடு அமிர்ந்தலிங்கத்தை விமர்சிக்கும் தலைப்புச் செய்தியை வெளியிட்டது. 

“புளொட்” இயக்கத்தால் வெளியிடப்பட்ட “புதிய பாதை” என்ற பத்திரிகையின் தலைப்புச் செய்தி ஒன்றில் “நாடுமன்றத்தில் 18 கழுதைகள்” என்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் குறித்து மிகக் கடுமையான கண்டனம் எழுதப்பட்டது. இதைக்கண்டு அமிர்தலிங்கம் பெரிதும் சீற்றம் அடைந்து பேசியதாக செய்திகள் உண்டு. 

இக்கால கட்டத்தில் யாழ் பல்கலை கழகத்திற்கு அமிர்தலிங்கம் வருகை தந்த போது மாணவர்கள் அவரை வலுக்கட்டாயமாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற்றியதுடன் அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்து பின்பு சமரச முயற்சியின் போது அத்துப்பாக்கி மீண்டும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது. 

மேலும் அமிர்தலிங்கத்தின் கொடும்பாவி ஒன்றை இதன் பின்னான நாட்களில் மாணவர்கள் பல்கலைகழக மைதானத்தில் தீயிட்டுக் கொளுத்தினர். இப்படி அமிர்தலிங்கத்திற்கு எதிராக 1980-81-82ஆம் ஆண்டு காலகட்டங்களில் பெரும் எதிர்பலைகள் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்தன என்பது ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவாகும்.

இக்கால கட்டத்தில் எல்.டி.டி.ஈ, டெலோ, ஈரோஸ், புளொட் என நான்கு ஆயுதப் போராட்ட அமைப்புக்களும் அமிர்தலிங்கத்தை பெரிதும் எதிர்த்த போதிலும் அத்தகைய எதிர்ப்புகளையும் மீறி மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அமைக்கும் தீர்வை அமிர்தலிங்கம் ஏற்றுக்கொண்டு அதற்கான தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி போட்டியிட்டது. அப்போது நான்கு ஆயுதம் தாங்கிய அமைப்புக்களும்; மேற்படி தேர்தலை முற்றாக புறக்கணித்த நிலையில் எல்.டி.டி.ஈ.யும், புளொட்டும் இதற்கு எதிராக ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. 

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக போட்டியிட்ட டாக்டர் ஆ. தியாகராஜா யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி முன்றலில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது புளொட் இயக்கத்தினரால் 1981, மே 24ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். 

இராணுத்தினர் மீது விடுதலைப் புலிகள் வீதித் தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கினர். குறிப்பாக உரும்பிராயிலுள்ள விநாயகர் கோவிலுக்கு அருகாமையில் இராணுவ வாகனம் ஒன்று புலிகளால் 1981ஆம் ஆண்டு மே மாத இறுதி வாரத்தில் தாக்கப்பட்ட நிலையில் இராணுவ வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டதாயினும் சிப்பாய்கள் தரப்பில் உயிரிழப்புக்களோ, காயங்களோ ஏற்படவில்லை. 

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னான இரவில் நல்லூர் திருநெல்வேலி காளியம்மன் கோயிலுக்கு அருகாமையிலிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தலுக்கான செயலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

1981ஆம் ஆண்டு மே 31, யூன் 1ஆம் தேதி இரவு யாழ்ப்பாண பொது நூலகம் பொலீஸ், இராணுவ அனுசரணையுடன் சிவில் உடைத்தரித்த பொலீசாராலும், சிங்கள காடையர்களாலும் எரித்து சாம்பலாக்கப்பட்டது. ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐதேக அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி திஸநாயக்காவே இந்த நூலக எரிப்பிற்கு தலைமைதாங்கினார் என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் தரப்பிலிருந்து வேதனையுடன் வெளியானது. 

யாழ்ப்பாண நகரப்பகுதி முழுவதும் இராணுவத்தின் அட்டுழியத்திற்கு உள்ளானது. இதில் பொதுமக்கள் பலர் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் நகரத்தின் மையப்பகுதியில் மோட்டார் வானங்களை பழுதுபார்க்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்களும் தீயிட்டு நாசமாக்கப்பட்டன. அவ்வாறு எரிந்து கொண்டிருந்த தீச்சுவாலைக்குள் பல பொதுமக்கள் இராணுவத்தால் தூக்கி வீசப்பட்டு எரிந்து மாண்டனர். இவர்கள் உயிருடன் வீசப்பட்டு எரிந்து மாண்டார்களா அல்லது சுடப்பட்டபின் எரியும் வாகனங்களுக்குள் வீசப்பட்டார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

இத்தோடு மாவட்ட அபிவிருத்திச் சபை தீர்வானது பொய்யானது என்பது உணரப்பட்டது. மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல்களில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் அது முற்றிலும் செயலற்ற ஒன்றாய் காணப்பட்டது. “மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு தெருக்கூட்டும் அதிகாரங்கள்கூட இல்லை” என்று  மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. நடராஜா வெளிப்படையாகக் கூறும் நிலை ஏற்பட்டது.

இதன் பின்பு இளைஞர் அமைப்புக்களின் கரங்கள் ஓங்கின. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மக்கள் மத்தியில் பெரிதும் செல்வாக்கு அற்றுப் போகும் நிலை உருவானது.
வாக்குறுதியளித்தபடி “தமிழீழ நிழல் அரசாங்கம்” அமைக்க அமிர்தலிங்கம்  தவறியமையாலும், ஜே.ஆர்.ஜெவர்த்தன அரசாங்கத்தோடு சகவாசம் கொள்ளத் தொடங்கியமையாலும், தந்தை செல்வாவின் மருமகனான பேராசிரியர் ஏ.ஜே.வில்சனை ஏற்பாட்டாளராகக் கொண்டு ஜே.ஆர். உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதினாலும்,  மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்ற பெயரில் ஜே.ஆர். முன்வைத்த மாயமானை அமிர்தலிங்கம் ஏற்றுச் செயற்படத் தொடங்கியமையாலும் இளைஞர்களினதும் மற்றும் தமிழரசுக் கட்சியின் ஒரு பகுதியினரதும் தீவிர எதிர்ப்புக்கு அவர் ஆளானார்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவரின் தகவலின் படி அமிர்ந்தலிங்கம் - விடுதலைப் புலிகள் தொடர்பான விபரம் பின்வருமாறு தரப்படுகிறது. வசதி கருதி அவரின் பெயரை இனி முருகவேள் என அழைப்போம்.

மேற்படி பின்னணியில் 1981ஆம் ஆண்டு மே மாத மாவட்ட சபைத் தேர்தலுக்கு முன்னான மாதத்தில் திரு. அ. அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொல்வதென விடுதலைப் புலிகள் தீர்மானித்தனர். அப்போது இதனை தெரிந்து கொண்ட முருகவேள் இத்தீர்மானத்தை கைவிடுமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே. பிரபாகரனையும் அவரது சகாவான மாத்தையா என பிற்காலத்தில் அழைக்கப்பட்ட திரு.கோ.மகேந்திரராஜாவையும் வற்புறுத்தினார். (அக்கால கட்டத்தில் சிறீ, அரசு என்ற வேறு புனைப் பெயர்களிலேயே மாத்தையா அழைக்கப்பட்டார்.) 

தமிழீழ விடுதலைக்கு அமிர்தலிங்கம் தடையாக இருப்பதாகவும், “தமிழீழ நிழல் அரசாங்கத்தை” அமைக்கத் தவறி அதற்கு மாறாக மாவட்ட அபிவிருத்திச் சபை  தீர்வை அவர் எட்ட முயல்வதன் மூலம் தமிழீழ போராட்டத்திற்கு அவர் தூரோகம் செய்து விட்டார் என்றும் எனவே அவரை கொல்வதன் மூலமே தமிழீழப் போராட்டத்திற்கான தடைக்கல்லை நீக்க முடியும் என்றும் பிரபாகரன் தனது நிலைப்பாட்டை  பலமாக முன்வைத்த நிலையில் அமிர்தலிங்கத்தை சுடக்கூடாது என்ற கருத்தை  பிரபாகரனை நோக்கி வற்புறுத்திய  முருகவேள் மேலும் பின்வருமாறு தெரிவித்தார். 

அதாவது அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொல்வதன் மூலம் போராட்டமும், போராளிகளும் மக்களிடம் இருந்து அந்நியப்பட நேரும். அமிர்தலிங்கத்தை அப்பலப்படுத்துவதா அல்லது அவரை சுடுவதன் மூலம் போராட்டத்தை அந்நியப்படுத்துவதா என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்று முருகவேள் கூறினார். 

இவ்வாறு கூறியபோது முதலில் மாத்தையா அதற்கு தலையசைக்க, அதனைத் தொடர்ந்து பிரபாகரன் தனது முடிவை மாற்றி சுடுவதை கைவிடுவதாக முருகவேளிடம் உறுதியளித்தார். இதன் பின்பு அமிர்தலிங்கத்தை அம்பலப்படுத்துவது என்ற கொள்கைக்கு இணங்க பெருமளவு வெளியீடுகளையும், கருத்தரங்குகளை, கூட்டங்களையும் புலிகள் ஏற்பாடு செய்தார்கள் என்று முருகவேள் கூறி முடித்தார். 

இதன் பின்பு 8 ஆண்டுகள் உருண்டோடின. 1989ஆம் ஆண்டு பெப்ரவரி பொதுத் தேர்தலில் அமிர்தலிங்கம் தோல்வியடைந்திருந்தார்.  மக்கள் மத்தியில் செல்வாக்கு அற்றவரான அமிர்தலிங்கம் அவ்வாறு தேர்தலில் தோல்வியடைந்த பின்பும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார் என்பது அவரது வீழ்ச்சியை விளக்கப் போதுமான உதாரணமாகும். ஆனால் 1989ஆம் ஆண்டு ஜுலை மாதம் அமர்தலிங்கம் இலங்கையின் தலைநகர் கொழும்பில் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

முன்பு அமிர்தலிங்கம் கொல்லப்படக் கூடாது என்று வாதிட்டு அதனை தடுத்தவரான முருகவேள் இவ்வாறு அமிர்தலிங்கம் கொல்லப்பட்ட சிறிது காலத்தின் பின் அவரை கொன்றதற்குப் பொறுப்பான மாத்தையாவை சந்தித்த போது தனக்கு முன்பு அளித்திருந்த வாக்குறுதியை மீறி ஏன் கொன்றீர்கள் என்று கேள்வி எழுப்பிய போது அதற்கு மாத்தையா பின்வருமாறு அவருக்கு பதில் கூறினார் என்று முருகவேள் தெரிவித்தார்.

அதாவது பேராசிரியர் ஏ.ஜே.வில்சனால் எழுதப்பட்ட The Break-up of Sri Lanka : The Sinhalese-Tamil Conflict  என்ற நூலில் அமிர்தலிங்கத்திற்கும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இடையே நடந்த இரகசிய உடன்பாடு பற்றி எழுதப்பட்டிருந்த விபரத்தை படிக்குமாறு மாத்தையா முருகவேளிடம் கொடுத்தார்.   
அப்பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது.

“ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன போட்டியிடுவதற்காக அவர் தாண்ட வேண்டியிருந்த பிரதான தடைக்கல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அத் தேர்தலில் போட்டியிடாதவாறு செய்வதிலேயே அடங்கியிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஒரு வேட்பாளரை நிறுத்துமிடத்து, அது ஜெவர்த்தனவிற்கு இருக்கக்கூடிய வெற்றிவாய்ப்பை குழிதோண்டிப் புதைத்திட வல்லதாய் அமைந்திடும். 

ஜனாதிபதி ஜெயவர்த்தனவையும், பிரதமர் பிரேமதாஸாவையும் சந்திப்பதற்காக ஒரு நாள் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அழைக்கப்பட்டார். இத்தேர்தலை ஜனாதிபதி ஜெயவர்த்தன எதிர்கொள்வதா இல்லையா என்பது பிரதானமாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அளிக்கக்கூடிய ஆதரவிலேயே தங்கியுள்ளது என்று அவர்கள் இருவரும் அமிர்தலிங்கத்திடம் கூறினர். 

ஜனாதிபதி ஜெயவர்த்தன வெற்றிபெறுமிடத்து மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மேம்பட்ட வகையில் செயற்பட முடியும் என்பதற்கான சமிக்ஞை இவ் உரையாடலின் போது காட்டப்பட்டது. புதிய அரசியல் யாப்பினை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அங்கீகரிக்காததால் இத் தேர்தலில் அது போட்டியிடுவதா அல்லது ஏதாவது வகையில் பங்களிப்பதா என்ற கேள்விக்கே இடமில்லை என்பதே அமிர்தலிங்கத்தின் நிலைப்பாடாக அமைந்தது. தனது கட்சி ஆதரவளிக்கும் என்று அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் நடுநிலை வகிக்கும் என்றார். தனக்கான வாக்குத் தேடுவதற்கேற்ற ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அடிப்படையாக அமிர்தலிங்கத்தின் மேற்படி நிலைபாடு அமைந்திருப்பதை ஜனாதிபதி கண்டுகொண்டார். வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஒரு தலையாய அரசியல் சக்தியென்பதில் சிறிதும் சந்தேகமில்லை.”

இதற்கான ஆங்கில வடிவம் அப்படியே இங்கு தரப்படுகிறது.

[“The sticking point was the T.U.L.F., who had to be persuaded not to contest the presidential election. President Jayewardene’s electoral prospects would be seriously undermined if the T.U.L.F. were to present a candidate. One day Appapillai Amirthalingam was summoned to a meeting with President Jayewardene and Prime Minister Premadasa, who both told him that the support of the T.U.L.F. was crucial for the President to decide whether or not to face a contest. It was hinted that the District Development Councils could take off if President Jayewardene were elected. Amirthalingam’s position was that since the T.U.L.F. had not recognized the validity of the new Constitution, it was out of the question for it to contest or take any part in the election. He could not commit his party’s support; it would remain neutral. The President found this position acceptable as a basis for him to face the electors… There was no doubt that the T.U.L.F. was the dominant political force in the North and those section of the Eastern Province where the Ceylon Tamils constituted a majority. ]

(PP 167-168)



மேற்படி அரசாங்க தரப்பிற்கும் அமிர்தலிங்கத்திற்கும் இடையேயான இருதரப்பு சந்திப்பும்உரையாடலும் ஏ.ஜே.வில்சன் முன்னிலையில் நிகழ்ந்தன.ஜே.ஆர். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவேண்டுமென்றால் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்தக்கூடாது என்பதே ஜே.ஆர்.ஜெவர்த்தனவினதும், பிரேமதாசாவினதும் கோரிக்கையாக அமைந்தது. அதற்கு நெளிவு சுழிவான காரணங்களைக் கூறி தேர்தலில் பங்குபெற்றாதிருக்க அமிர்தலிங்கம் ஒப்புக் கொண்டார். இது தமிழ் மக்களை ஏமாற்றும் முகமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு கள்ளத்தனமான, துரோகத்தனமான இரகசிய ஒப்பந்தம் என்றும் அதனடிப்படையில் ஜே.ஆரின் வெற்றிக்கு உதவிய அமிர்தலிங்கத்தை மன்னிக்க முடியாது என்றும் அவரின் துரோகத்திற்குப் பரிசாக அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும் மாத்தையா விளக்கியதாக முருகவேள் தெரிவித்தார்.


ஏ.ஜே.வில்சனால் எழுதப்பட்ட மேற்படி பகுதியைக் குறிப்பிட்டு அதன் அடிப்படையில் அமிர்தலிங்கத்திற்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் பிரபாகரனிடம் அனுப்பி வைத்ததாகவும் அதற்கான இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை பிரபாகரன் தன்னிடம் ஒப்படைத்ததாகவும் அதன் அடிப்படையில் அமிர்தலிங்கத்திற்கு தான் மரணதண்டனையை நிறைவேற்றியதாகவும் மாத்தையா முருகவேளிடம் தெரிவித்திருந்தார். 

அப்படியாயின் யோகேஸ்வரனும், சிவசிதம்பரமும் ஏன் சுடப்பட்டனர் என்ற கேள்வியை அப்போது மாத்தையாவிடம் முருகவேள் கேட்டார். அதற்கு மாத்தையாவின் பதில் பின்வருமாறு அமைந்தது. “அவர்கள் இருவரையும் சுடும் முடிவு இருக்கவில்லை. அது களநிலையில் எடுக்கப்பட்ட முடிவு. களநிலையில் அம்முடிவை எடுத்தவர்களுக்குத்தான் அதற்கான காரணம் தெரியும். அவர்கள் யாரும் உயிருடன் இல்லை. கொல்வது என்ற தீர்மானத்தின் கீழ் சுடப்பட்டிருந்தால் சிவசிதம்பரம் உயிர் தப்பியிருக்க முடியாது.”  என்று முருகவேளிடம் அவர் மேலும் விளக்கினார்.

இவ்வாறு கூறிய முருகவேள் தான் மாத்தையாவை சந்தித்துவிட்டு வெளியே வந்ததும் தனது நண்பர்களிடம் பின்வருமாறு கூறியதாக தெரிவித்தார். அதாவது அமிர்தலிங்கத்தின் உயிரை தன்னால் 8 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாக்க முடிந்ததாகவும் ஆனால் ஜே.ஆர்.ஜெவர்த்தனவுடனான தனது அனுபவங்களைப் பற்றிப் பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் எழுத முற்பட்ட இடத்தில் மேற்கண்டவாறு எழுதிய பகுதியை தக்க ஆதாரமாகக் கொண்டு அமிர்தலிங்கத்தின் உயிருக்கு உலை வைக்கப்பட்டுவிட்டது என்றும் கூறினார். 

தமிழ் மக்களால் அமிர்தலிங்கம் நிராகரிக்கப்பட்ட நிலையில், அரசியற் பலமற்றவராய் இருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். அமிர்தலிங்கத்தை கொல்வது என்று 1981ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கைவிட்டு அக்காலத்தில் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் பணியை புலிகள் செய்தமை ஒரு சரியான அரசியல் நடவடிக்கையாகும். அதே பாணியையே புலிகள் இதிலும் 1989ஆம் ஆண்டு பின்பற்றியிருந்திருக்க வேண்டும் என்பதே சரியானது. 

அதேவேளை அமிர்தலிங்கம் தம்மால் கொல்லப்பட்டமை தவறு என்றும் அந்த தவறுக்கு மாத்தையாவே பொறுப்பு என்றும் பின்னாளில் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
அமிர்தலிங்கத்துடன் கூடவே சுடப்பட்டு காயப்பட்ட நிலையில் உயிர்தப்பியிருந்த திரு.எம்.சிவசிதம்பரம் 2002ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5ஆம் தேதி இயற்கை மரணம் அடைந்த போது அவரது வெற்றுடல் கிளிநொச்சியில் இருந்த புலிகளின் “தூயவன் அரச அறிவியல் கல்லூரி” மண்டபத்தில் இறுதி மரியாதைக்காக 2002ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7ஆம் தேதி வைக்கப்பட்டது. 

அன்று மாலை 3 மணிக்கு விடுதலைப் புலிகளின் படைப்பிரிவு இருமருங்கிலும் அணிவகுத்து நிற்க அரசியல் பொறுப்பாளர் திரு. சுப.தமிழ்ச்செல்வன் அவரது வெற்றுடல் முன் ஈகைச்சுடர் ஏற்றி இறுதி மரியாதை செலுத்தினார். இவை தொடர்பான தகல்களை மறுநாள் வெளியான உதயன் மற்றும் ஈழநாதம் பத்திரிகைகள் விரிவாக பிரசுரித்திருந்தன.  

மேற்படி ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் தலைவர் திரு.குமார் பொன்னம்பலம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டிருந்தார் என்பதும் அதுவே சரியான அரசியல் வழிமுறை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  
ஜே.ஆர். அரசியலில் வெற்றி பெற்றாரோ இல்லையோ தனது எதிரிகளை தோற்கடிப்பதில் அவர் எப்போதும் வெற்றி பெற்றுள்ளார். 

அமிர்தலிங்கத்தை பலிபீடத்திற்கு அழைத்துச் செல்வதில் ஜே.ஆர். வெற்றிபெற்றார். “தமிழீழ நிழல் அரசாங்கம்” அமைப்பதை கைவிட்டு ஜே.ஆரின் பின்னால் சென்றன் மூலம் அமிர்தலிங்கம் தனக்கான ஓர் அரசியல் தற்கொலைப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டார். தனது ஏற்பாட்டாளருக்கான அனுபவத்தை பதிய முற்பட்ட இடத்து  ஜே.ஆருக்கும் - அமிர்தலிங்கத்திற்கும் இடையிலான  இரகசிய உடன்பாட்டை எழுதியதன் மூலம் அமிர்தலிங்கத்தின் சாவுக்கான மரண ஓலை தயாரானது. 

எப்படியோ அமிர்தலிங்கத்தை பேச்சுக்கு அழைத்து அவர் வாயிலாக தான் பெறவேண்டிய பாரீய நலனைப் பெற்றுக் கொண்டு அவரை வெறுங்கையுடன் அனுப்பியது மட்டுமன்றி கழுமரம் வரை அழைத்துச் செல்வதில் ஜே.ஆர். வெற்றி பெற்றார். ஜே.ஆர். தனது எதிரிகளை தோற்கடிக்கும் அரசியலில் கழுமரம் ஏற்றுவதிலோ அல்லது அதளபாதாளத்திற்கு தள்ளுவதிலோ வெற்றி பெற்ற மனிதன் என்பதில் சந்தேகமில்லை. 
ஜே.ஆரின் பாசறையில் வளர்ந்த ஐதேகவினரிடம் மட்டுமன்றி இத்தகைய அரசியல் வித்தை சிங்களத் தலைவர்களுக்கு பொதுவாக கைவந்த கலையாக காணப்படுகிறது. 
 
குறிப்பு:

விரைவில் வெளிவரவுள்ள ஆசிரியரின்
21ஆம் நூற்றாண்டில் 
பூகோளவாதம், சர்வதேசவாதம், புதிய தேசியவாதம்
என்ற நூலிலிருந்து...

« PREV
NEXT »

No comments