காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தீர்வின்றி தொடர்கின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் எந்தவித சாதகமான பதில்களும் அற்றநிலையில் தொடர்ந்து செல்கின்றது.
இந்த நிலையில் தொடர்ந்து போராடிவரும் காணாமல் ஆக்கப்படடோரின் உறவினர்களை முல்லைத்தீவுக்கு நேற்று விஜயம் செய்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா நேரில் பார்வையிட்டதுடன் காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகளின் கருத்துக்களையும் கேடடறிந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் தமது பிள்ளைகளை பற்றிய நல்ல முடிவை பெற்றுத்தாருங்கள் என கதறிய உறவுகள் உங்களிடம்தான் நாம் உரிமையுடன் இதனை கேட்கலாம் எனவும் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து போராடிவரும் மக்கள் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை உரையாற்றுகையில் போர் காலத்திலும் அதற்க்கு பின்னரான காலத்திலும் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பற்றியும் இராணுவத்திடம் பெற்றோரால் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளின் நிலைமைகள் பற்றியும் இந்த அரசாங்கம் ஒரு முடிவு சொல்ல வேண்டும். இந்த தாய்மாரின் கண்ணீருக்கு ஒரு ஆறுதல் வழங்கவேண்டும்.இந்த சம்பவங்கள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடைபெற்றிருந்தாலும் இந்த அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொண்டு இதற்கு ஒரு நல்ல முடிவை சொல்லவேண்டும்.
இதற்காக நாம் தற்போதுள்ள அரசாங்கத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் எங்களால் முடிந்த அளவுக்கு அவர்களை வற்புறுத்தி ஒருபதில் கிடைக்கக்கூடியதாகவும் இந்த தாய்மாரின் கண்ணீருக்கு ஆறுதல் தரக்கூடிய நடவடிக்கையையும் நாம் நிச்சயமாக எடுப்போம் எனவும் தெரிவித்தார்.
No comments
Post a Comment