சர்வதேச நிறுவனங்களினதும் சர்வதேச நாடுகளினதும் நெருக்குதல்கள் மூலமாகவே தமிழ் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச மன்னிப்புச் சபை யின் குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்கள். குறித்த சந்திப்பு தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அதனை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும் கால நீடிப்பு வழங்கப்பட்டு விட்டது.
நாங்கள் அரசாங்கத்திடம் எமது பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துக்கூறியும் அதற்காக நிவாரணங்கள் கிடைக்கவில்லை.
ஆகவே எமது மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் நெருக்குதல்களை வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
சர்வதேச மன்னிப்புச் சபை குழுவினர் எமது பகுதிக்கு வந்து தற்போது நடைபெற்று வரும் மக்களின் போராட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டு வந்துள்ளார்கள்.
குறிப்பாக காணிகள் விடுவிப்புக்காகப் போராடி வரும் மக்களையும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டங்களை யும் பார்வையிட்டது மட்டுமன்றி பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது நிலமைகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது அனைத்து விடயங்களையும் சேகரித்து வைத்துள்ளார்கள். அதேபோல் காணி விடுவிப்புக்காக போராடி வரும் மக்கள் தற்போதைய குடியிருப்புகளையும் பார்வையிட்டு அவர்களின் விபரங்களையும் அவர்கள் பெற்றுள்ளார்கள்.
இவர்கள் சர்வதேச ரீதியாக செயல்படுபவர்கள் என்பதால் எமது மக்களின் பிரச்சினையை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளோம்.
இதில் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும் குறிப்பாக சர்வதேச நிறுவனங்கள், நாடுகள் அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களையும் சாதகமான அழுத்தங்களையும் பிரயோகிப்பதன் மூலம் தான் எமது மக்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மைகள் பலன்கள் கிடைக்கும். இதனை நீங்கள் செய்ய வேண்டும் இதன் மூலம் தான் எமது மக்களுக்கு உரிமைகள் கிடைக்கும். தீர்வுகள் கிடைக்கும். ஆகவே இதற்கு நெருக்குதல்களை வழங்க வேண்டும் என்றார்.
இதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொது செயலாளர் சாயின் செட்டி தெரிவிக்கையில்,
நாங்கள் மக்களின் போராட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டோம் இவை தொடர்பில் இலங்கை அரசிடம் தெரிவிப்போம்.
மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பது தொடர்பில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் .கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை அமுல் படுத்துவது தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்புக்களையும் அழுத்தங்களை பிரயோகிக்கும் அதேவேளை ஐ.நாவிலும் இது தொடர்பில் எடுத்துக்கூறுவோம் எனத் தெரிவித்தார்.
No comments
Post a Comment