நாட்டில் ஜனநாயக ஆட்சியை நிறுவும் போராட்டத்தில், ஜனவரி 2015 இல் இந்த நாட்டின் சர்வாதிகாரப் போக்கற்ற ஓர் ஆட்சியை நிறுவ இணைந்து கொண்ட தமிழ் மக்கள், இன்று இராணுவ- பௌத்த அரசியல் இந்த நாட்டில் அதே ஆட்சியால் ஊக்குவிக்கப்படுவதுடன் மேலும் வளர்க்கப்படுகின்றது என்பதைக் கண்டு ஏமாற்றமடைந்துள்ளனர். அதுவும், நல்லாட்சிக் கு குரல் கொடுத்து எங்களது மக்களின் பேராதரவைப் பெற்றவர்கள் அந்தக் கொடுமையில் ஈடுபட்டிருப்பது இன்னும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள் ளதாவது;
இந்த துரதிஷ்டவசமான போக்கு, தமிழ் மக்களுக்கு தங்கள் நாட்டில் இருக்க வேண்டிய அரசியல் ஜனநாயக உரிமைகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நிலைமை மேலும் தொடராமல் நிறுத்தப்படாவிட்டால் இன்னும் ஏமாற்றமும் பாரதூரமான மோதல் நிலையும் ஏற்படும். கடந்த அரசின் காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி ஆயதப்படைகளின் வசம் இருந்ததாக அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தால் அங்கீகாரமின்றி சுவீகரிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்களுக்கு திருப்பிக் கொடுப்போம் என்ற உறுதிமொழியை புதிய ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை. இதுவரை அத்தகைய காணிகளில் சிறு விகிதமே விடுவிக்கப்பட்டுள்ளது. மக்களின் போராட்டம் வேண்டுகோள்களை உதாசீனம் செய்து கோப்பாபிலவு மக்களின் 482 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தமிழ் மக்களின் புர்வீகக் காணிகளில் இன்னும் இராணுவம் நிலைகொண்டிருப்பது இன்னும் ஒரு வேதனை தரும் செய்தி.
ஆயதப்படைகளால் மட்டுமல்லாது தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம்கூட அரசின் அங்கமாக எங்கள் மக்களின் உரிமைகளை நசுக்க முற்படுவது தூரதிஷ்டவசமாகும். கிழக்கின் கன்னியாவில் இருக்கும் சுடுநீர்க் கிணறுகள் ஆரம்பகாலத்திலிருந்து எங்கள் இந்து ஆலயம் இருந்த ஒரு புராதன புனித தலமாகும். ஆலயத்துக்கு வரும் அடியார்கள் இக்கிணறுகளில் குளித்துவிட்டு ஆலயத்தைத் தரிசிப்பது பல ஆண்டுகளாக இருந்து வந்த எமது சமய மரபாகும். ஆனால் இப்போது அந்த வளாகம் பௌத்த வழிபாட்டுத்தலமாகக் கோலமிடப்பட்டுள்ளது. மேலும் சுடுநீர்க் கிணறுகளைப் பார்க்க வருபவர்கள் பௌத்த ஆலயத்துக்கு கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள் என முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன.
கன்னியா வாழ் மக்களின் சுழலும் அரசாங்கத் திட்டங்களால் மாற்றப்பட்டு வருகின்றது. சுடுநீர் கிணறுகளை நோக்கி நடக்கும்போது சிங்களக் கடைகளும் சிங்கள குறியீட்டு பலகைகளும் பௌத்த கொடியும்தான் வருவோரை வரவேற்கின்றன. மேலும் இந்த இடத்தை ஒரு பௌத்த புமியாக எடுத்துக் காட்டும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள அறிவிப்புக்களையும் காணலாம். சிவன் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வழிபடமுடியாத நிலை ஏற்பட்டு அந்த ஆலயம் அழிவுறும் நிலையில் உள்ளது.
திருகோணமலை நகரைச் சேர்ந்த மடத்தடி முத்துமாரியம்மன் ஆலய பரிபாலனத்திலேயே ஆலயமும் சுடுநீர்க் கிணறுகளும் இருந்தன. பின்பு அவை உள்ளூராட்சி அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன. பௌத்த அமைப்புக்களை அரச அமைப்புகள் ஆயுதப்படை மூலம் விஸ்தரிக்கின்ற நடவடிக்கைகளுக்கு இது ஓர் உதாரணம். மேலும் இந்த நாட்டின் பஞ்ச ஈஸ்வர தலங்களில் ஒன்றான பழம்பெரும் புராதனக்கால இந்து ஆலயமான முனீஸ்வரத்தில் திருக்கோபுரம் கட்டவும் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் முட்டுக்கட்டை போட்டுவருவது இன்னும் ஒரு வேதனைத்தரும் உதாரணமாகும். இந்தப் போக்கு உடன் நிறுத்தப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் மக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னும் திருப்பிக் கொடுப்பதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாது தொடரும் அதே நிலையில் எத்தனையோ தமிழ் அரசியற் கைதிகள் சிறையில் விசாரணையின்றி வாடுகின்றனர். தங்களின் மகன்களையும் கணவர்மார்களையும் ஆயிரக்கணக்கான தாய்மாரும மனைவிமாரும் தேடிக் கொண்டிருக்கின்றனர். கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டங்கள் இன்னும் தீர்வின்றித் தொடர்கின்றன. இவை எல்லாவற்றையும் கண்டும்காணாத போக்கு தொடர்வதும் மனவேதனைக்குறியது.
புத்தபிரானின் போதனைகளைக் கூட மறந்து அவர் உருவாக்கிய மதத்தின் பேரால் அரசியல் நடத்திக்கொண்டு வெசாக் பண்டிகையை சர்வதேச ரீதியில் நடத்தி தங்கள் தவறுகளை மூடிமறைக்கும் முயற்சிகளுக்கு சர்வதேசம் அங்கீகாரம் வழங்கக்கூடாது.
இந்த சூழ்நிலையில்தான் புதுவருடம் பிறக்கின்றது. இணக்கப்பாடும் மீள்புனருத்தாரணமும் பற்றிக் கதைக்கப்பட்டாலும் போதிய - திருப்திகரமான எந்த நடவடிக்கையும், அவ்வழியில் அரசாங்கத்தாலும் அரச நிறுவனங்களாலும் எடுக்கப்படவில்லை.
தேசியஒருமைப்பாடு பற்றி, இணக்கப்பாடு் பற்றியெல்லாம் கதைப்பதற்கு முன் எங்கள் மக்கள் தங்கள் சுதந்திரத்தையே முதலில் நாடிநிற்கின்றனர். இது அரசாங்கத்திற்குப் புரியாத விடயம் அல்ல. ஆனால் அடுத்து அடுத்து இந்த நாட்டை ஆளவந்தவர்கள் புரிந்தாலும் புரியதமாதிரியே நடிப்பதுதான் வேதனை.
நாட்டின் சகல பகுதிகளிலும் வாழும் இந்து மக்களின் உணர்வுகள் இவை. எனவே அவர்களின் அபிலாசைகளை மெச்சி அவர்களுக்குரிய நிவாரணங்களை வழங்குமாறு ஒவ்வொருவரையும் வேண்டுகிறோம். அது நடக்காவிட்டால் புதுவருடத்தினை அவர்கள் கொண்டாடுவதை எதிர்பார்க்க முடியாது.
அதே சமயம் இந்த நாட்டிலும் வௌி நாட்டிலும் வாழ்கின்ற இந்து மக்களிடம் நாம் விடுக்கும் வேண்டுகோள், அவர்கள் எல்லோரையும் பிரார்த்தனையிலீடுபடுமாறும், அவர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கும் பிரச்சினைகள் தீர இறையருள் கிடைக்கும் எனவும் எல்லாம்வல்ல பரம்பொருளைப் பிரார்த்திப்போம்.
No comments
Post a Comment