Latest News

April 15, 2017

"அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை
by admin - 0

"அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை

அணு ஆயுத தாக்குதல் மூலம் திருப்பி தாக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள வட கொரியா, கொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது.
வட கொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105வது பிறந்த நாள் நினைவு கொண்டாடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
வட கொரியாவின் வலிமையை வெளிகாட்டும் வகையில், படைவீரர்கள், பீரங்கிகள் மற்றும் பிற ராணுவ ஆயுதங்கள் அனைத்தும் தலைநகர் பியாங்யோங்கில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்றன.

இன்னொரு அணு ஆயுத சோதனைக்கு தற்போதைய தலைவர் கிம் ஜாங்-உன் ஆணையிடலாம் என்கிற ஊகங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
போருக்கு போர்
"முழுமையானதொரு போர் தொடுக்கப்பட்டால், முழுமையானதொரு போரால் திருப்பி தாக்கி பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று வட கொரிய ராணுவ அதிகாரி சோய ரொங்-ஹெய தெரிவித்திருக்கிறார்.
"எந்தவொரு அணு ஆயுத தாக்குதலுக்கு எதிராகவும் எங்களுடைய பாணியில் அணு ஆயுத தாக்குதல் நடத்தி பதிலடி வழங்க நாங்கள் தயார்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் எந்த நேரத்திலும் போர் மூளலாம் என அதிகரித்து வருகின்ற பதட்டங்களுக்கு மத்தியில், சனிக்கிழமை நடத்தப்பட்ட ராணுவ அணிவகுப்பில், தன்னுடைய ராணுவ வலிமையின் ஆடம்பர படைக்கலக்காட்சியை வட கொரியா வெளிப்படுத்தியுள்ளது.
ராணுவ நிறுவனங்களின் வரிசைகளின் அணிவகுப்பும், படைப்பிரிவுகளின் தனித்தனி குழுக்களின் அணிவகுப்பும் தலைநகர் பியோங்யாங்கின் மையத்திலுள்ள கிம் இல்-சொங் சதுக்கத்தில் நடைபெற்றன.

உலக நகரங்களை தாக்கும் வலிமை?

இந்த அணிவகுப்பில் முதல்முறையாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் பலுஸ்டிக் ஏவுகணைகள் இடம்பெற்றிருந்தன.
இதன் மூலம் உலக அளவிலுள்ள இலக்குகளை தாக்கும் வகையில், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.


அணு ஆயுதங்களை வெற்றிகரமாக தயாரிக்கும் நிலையை கொரியா நெருங்கி கொண்டிருக்கிறது என்கிற கவலைகளுக்கு மத்தியில், சனிக்கிழமை நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு வட கொரியாவின் தற்போதைய ராணுவ திறன்களை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது


வட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தை கைவிட அமெரிக்காவிடம் இருந்து அதிகரித்து வருகின்ற அழுத்தங்களை கண்டுகொள்ளாமல், அந்நாடு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதனுடைய எதிர்கால தொலைநோக்குத் திட்டங்களுக்கு அணு ஆயுத திட்டம் மிகவும் முக்கியமானது என்பதை இந்த அணிவகுப்பு தெளிவாக்கியுள்ளது.

கடற்படை அணி ஒன்றை கொரிய தீபகற்பத்தை நோக்கி அமெரிக்க ராணுவம் ஆணையிட்டதற்கு பிறகு, அங்கு பதட்டம் அதிகரித்து வருகிறது.
« PREV
NEXT »

No comments