Latest News

November 20, 2016

மாவீரர் பெற்றோர், உறவினர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு
by admin - 0



மாவீரர் பெற்றோர், உறவினர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு


தமிழீழத் தாய் நாட்டின் விடிவிற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் மாவீரர்களை விடுதலைக்கு வித்தாக உவந்தளித்த பெற்றோர் , குடும்பத்தினர் மற்றும் உருத்துடையோரை கெளரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் இடம்பெற்றது.

தமிழீழ மாவீரர் பணிமனையும், நாடுகடந்த தமிழிழ்ழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான மாவீரர் குடும்பம் மற்றும் போராளிகள் நலன்காக்கும் அமைச்சும் இணைந்து மாவீரர் பெற்றொர், குடும்பத்தினர் மற்றும் உருத்துடையோரை கெளரவிக்கும் நிகழ்வை சிறப்பான முறையில் பிரித்தானியாவிலுள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் (OX17 3NX) உள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில் (20-11-2016) இன்று நடாத்தியது.

தமிழீழ மண்ணும், மக்களும் உவகை கொள்ளும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் பிரித்தானியாவில் உள்ள மாவீரர் குடும்பங்களையும், உருத்துடையோரையும் இன்றைய தினம் கெளரவித்ததில் தமிழீழ மாவீரர் பணிமனை - ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த நாமும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான மாவீரர் குடும்பம் மற்றும் போராளிகள் நலன் பேணும் அமைச்சும் மட்டற்ற மன நிறைவடைகிறோம்.

இன்றைய இந்த நிகழ்வில் 150 ற்கும் மேற்பட்ட மாவீரர் குடும்பங்கள் கலந்துகொண்டிருந்ததோடு, போராளிகள் உட்பட 400 க்கும் மேற்பட்ட மக்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

போராளி இன்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை லெப்.கேணல் குமரப்பா அவர்களின் சகோதரன் திரு. பால அவர்களும், தாயகத்தின் மன்னாரை சேர்ந்த அருட்தந்தை செபமாலை ஜெபநேசரட்ணம் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

தமிழீழத் தேசியக் கொடியினை போராளி குணா அவர்கள் ஏற்றி வைக்க, பிரித்தானியத் தேசியக் கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுரேன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

பொது மாவீரர்களுக்கான நினைவுத்தூபிக்கான ஈகச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயர் திருமதி. இரத்தினேஸ்வரி அம்மா அவர்கள் ஏற்றிவைக்க மூத்த முன்னாள் போராளி திரு. தம்பிராசா அவர்கள் மலர்மாலையினை அணிவித்ததை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

மலர் வணக்கத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் குடும்ப நலன்பேணல் அமைச்சர் திருமதி. பாலாம்பிகை அவர்கள் ஆரம்பித்துவைக்க அனைவரும் வரிசைக்கிரமமாக சென்று தீபம் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து அரங்க நிகழ்வுகளாக தலைமை உரையினை போராளி இன்பன் அவர்களும், போராளி கயல்விழி, தமிழீழ வைப்பகத்தின் முதன்மை மேலாளர் திரு. பாலகிருஸ்ணன், போராளி புரட்சி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. யோகி, போராளியும், உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சங்கீதன் ஆகியோர் மாவீரர் நினைவு உரைகளை வழங்கினர். 

நிகழ்விற்கு வருகை தந்திருந்த மாவீரர் குடும்பங்களையும், உருத்துடையோரையும் கெளரவித்து மாவீரர் நினைவு இலட்சினைகளை போராளிகளும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான குடும்பம் மற்றும் போராளிகள் நலன் பேணும் அமைச்சர் திருக்குமரன் அவர்களும் வழங்கினர்.

கலை நிகழ்வுகளாக கவிதை மற்றும் மாவீரர் கானங்கள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தாயகத்தில் உள்ள மாவீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்கு உதவும் நோக்கோடு பிரித்தானியாவில் உள்ள போராளிகள் ஒன்று சேர்ந்து ஒரு தொகை நிதியை தமிழீழ மாவீர பணிமனையிடம் (எம்மிடம்) கையளித்தமை அனைவரின் கவனத்தை ஈர்த்திருந்ததோடு ஒரு திருப்புமுனையாகவும், ஏனையவர்கட்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்திருந்தது.

இறுதியாக உறுதியேற்போடு கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது.




 
காலத்தால் அழியாத எம் காவிய நாயகர்களை தமிழீழ விடுதலைக்கு உவந்தளித்த எமது உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வு உலகத் தமிழர் வரலாற்று மையவளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் மற்றும் போராளிகள் குடும்பநலன் அமைச்சு. பிரித்தானியா.  தமிழீழ மாவீரர் பணிமனை ஐக்கிய இராட்சியம். ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து மாவீரர் குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு மதிப்பளித்தது இதில் மாவீரர் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர் 

 

 

 
 
 
 


 

« PREV
NEXT »

No comments