Latest News

November 05, 2016

மண்கிண்டிமலை, “இதயபூமி-1” தாக்குதலும் தலைவரின் நீண்ட கால போர் நுட்பமும்.
by admin - 0


 

1980களின் இறுதியில், மரபுப்படையணியாக புலிகளமைப்பு வளர்ச்சியை கண்டநேரத்தில், இந்திய இராணுவத்தினருடன் சண்டையிடும் முடிவை தலைவர் எடுத்தபோது, பலநூறு போராளிகள் அமைப்பை விட்டு வெளியேயிருந்தனர்.!
இந்திய இராணுவத்தினருடனான போரின் போது சிலநூறு போராளிகளே, தனியாகவும், சிறு, சிறு குழுக்களாகவும், தமிழீழமெங்கும் களத்தில் நின்றனர்.! 
1990களில் ஆரம்பத்தில் இந்திய இராணுவம், எம் தேசத்தை விட்டு அகன்றதும், பல்லாயிரம் போராளிகள் புலிகளமைப்பில் தங்களை இணைத்தனர். 
ஒரு கெரில்லா அமைப்பாக சுருங்கி இருந்த புலிகளமைப்பு, பெரும் மரபுவழி படையாக மாற்றம் பெற்றது.
1990ம் ஆண்டு 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான பின்னர்தான், பெரும் மரபுவழிப்படையணிகளை நகர்த்துவது தொடங்கி, அதை சீராக்குவது வரை, பட்டறிவின் மூலம் தங்களை வளர்த்துக்கொண்டனர் புலிகள். 
இதில் முதல், முதலாக “ஆகாய கடல் வெளிச்சமர்” என பெயர் சூட்டப்பட்ட, முதலாவது வலிந்த தாக்குதல் ஆணையிறவுப் பெரும் தளத்தின் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.
அந்தக்காலம், புலிகளின் பட்டறிவுக்காலம்.! 
நாம் நிர்ணயித்த இலக்கை அன்று அடைய முடியாது போனது. அந்தத் தாக்குதல் ஒரு மாதத்துக்கு மேல் நீடித்தது. இரண்டு இராணுவங்கள் இலங்கையில் உள்ளது என சர்வதேச ஊடகங்கள் வர்ணித்தன. 
இந்தத் தாக்குதல்கள் மூலம் பெரும் நிவாகப்பட்டறிவையும், போர் நுணுக்கங்களையும் எமது போராளிகள் கற்றுக்கொண்டனர். 
இதன் பின்னர், பல மினிமுகங்கள், தொடர் காவலரண் தகர்ப்பு, முன்னேற்ற முறியடிப்பு, என தங்களை புலிகள் யுத்த ரீதியாக வளர்த்துக் கொண்டனர்.
மணலாற்றில் அமைந்திருந்த, மண்கிண்டிமலை முகாம் மீது, ஒரு வலிந்த தாக்குதலுக்கு தயாராகினர் புலிகள்.
அதற்கான வேவு நடவடிக்கை புலிகளால் ஆரம்பிக்கப்பட்டு, முழுமை பெற்றிருந்தது. இறுதி வேவு லெப். கேணல் தனத்தின் தலைமையில் நிறைவு பெற்றிருந்தது. எல்லாம் தயாராகி போராளிகளுக்கான பயிற்சிகள் நிறைவு பெற்றிருந்தன. 
“இதயபூமி-1” என தலைவரால் பெயர் சூட்டப்பட்டு, பெரும் தாக்குதலொன்றிற்கு புலிகள் தயாராகினர். மணலாறு மாவட்ட தளபதி, அன்பு அண்ணை தலைமையில், பால்ராஜ் அண்ணையின் வழிகாட்டலுடன், ஒரு பகுதிக்கு தனம் தலைமை தாங்கினார்.
fb_img_1471368666708
இந்த இராணுவ முகாமை பொறுத்தவரை இராணுவத்துக்கே சாதகமான பிரதேசம். என்னை பொறுத்தவரை புலிகளைத் தவிர, வேறு எந்த இராணுவத்தினரும் இப்படியான ஒரு இலக்கை தெரிவு செய்திருக்க மாட்டார்கள்.! 
ஏனெனில் அந்த காவலரண்களின் அமைவிடம் உயரமான இடங்களில், பள்ளத்தை நோக்கியவாறே பெரும்பாலும் அமையப்பெற்றிருந்தது. 
அந்த முகாமுக்கு காப்பாக சிறு, சிறு மலைகளும் காடுகளும் என, எதிரிக்கே முழுவதும் சாதகமான புவியமைப்பை, அந்த முகாம் கொண்டிருந்தது. 
அப்படியான ஒரு முகாம் மீதான தாக்குதல் ஒன்றை நடத்தும் நோக்கில் புலிகள் இருளோடு இருளாக நகர ஆரம்பித்தனர். காவலரணில், காவலிருந்த சிங்கள சிப்பாய்களின் கண்ணில் மண்ணைத் தூவி, இராணுவ முகாமினுள் நுழைந்து, எதிரியின் பிரடிக்கு பின்னால் நிலை எடுத்தனர்.
fb_img_1478271522143
இந்த நேரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும். 
இப்படி உள் நுழையும் போது, போராளி ஒருவரை விசப்பாம்பு தீண்டி விட்டது. தன்னால் சண்டை குழம்பக் கூடாது என்றுணர்ந்த அந்த போராளி, வேதனையை பொறுத்தபடி, சத்தமில்லாது அந்த பாம்பு நகரும் வரை காத்திருந்து, அங்கிருந்து பின் நகர்ந்து, அந்த தாக்குதல் வெற்றிபெற வழிகோலினான். 
இவர்கள் தான் எங்கள் வீரர்கள்.!
25.07.1993 அன்று திட்டமிட்டபடி மண்கிண்டிமலை முகாம் மீது புலிகளால், அந்த வரலாற்றுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.!
fb_img_1478271519776
இந்த தாக்குதலை சிங்களச் சிப்பாய்கள் எதிர் பார்க்கவில்லை. அடுத்தது திருப்பி தாக்குவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பமும், புலிகள் வழங்கவில்லை.
திடீர் தாக்குதலால் நிலை குலைந்த சிங்களப்படை சிதறி ஓடியது. பெரும் காடு சூழ்ந்த பிரதேசம் என்பதால் அது அவர்களுக்கு சாத்தியமாகி இருந்தது. 
அன்று 100மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் 8 போராளிகள் வீரச்சாவடைந்தனர். புலிகளால் 81MM மோட்டர் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.
fb_img_1478271537199
தலைவரால் பெயர் சூட்டப்பட்டு, புலிகளின் இந்த பாய்ச்சல், சிங்களத்துக்கு அவமானத்தை உண்டாக்கியது. குறைந்த இழப்புடன் பெரும் சேதத்தை எதிரி சந்தித்தான். 
இந்தத் தாக்குதலுக்கு பழிவாங்கவேதான், இதே ஆண்டு ஒன்பதாம் மாதம் “ஒப்ரேசன் யாழ்தேவி”யை தொடங்கி கிளாலியை கைப்பற்ற ஆரம்பிக்கையில், புலிகளால் முதுகெலும்பு உடைக்கப்பட்டது. (இந்த தாக்குதல் பற்றி முன்னரே பதிவு செய்துள்ளேன்)
1993ம் ஆண்டு புலிகளின் ஆண்டு. அன்று பல வெற்றிகளை நாம் எம் கைகளில் வைத்திருந்தோம்.!
fb_img_1478271534619
ஏன் இந்த தாக்குதல் புலிகளால் அன்று மேற்கொள்ளப்பட்டது? 
இதில் தான் தலைவரின் போர் உத்தியை, நீங்கள் அறிய வேண்டும்.! 
1993இல் பூநகரி தாக்குதலுக்காக, கிட்டத்தட்ட ஒரு வருடம் கடும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. அதனால், குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு, பெரும் தாக்குதல் எதுவும் புலிகளால், எதிரி மீது மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சிங்கள உளவுத்துறையினர் எச்சரிக்கை ஒன்றை தமது அரசுக்கு விடுத்தனர். 
புலிகள் பெரும் போர் ஒன்றுக்கு தயாராகின்றார்கள் என்ற செய்தி, சிங்கள நாளேடுகளில் செய்தியாக உலா வந்தது. இதனால் சிங்களப்படை முகாம்கள் உச்சவிழிப்புடன் வைக்கப்பட்டது. 
இதனால், அவர்களை திசை திருப்ப வேண்டிய தேவை புலிகளுக்கு எழுந்தது. பூநகரி தாக்குதலின் ஒரு அங்கம் தான் “இதயபூமி-1” தாக்குதல் என்றால் அது மிகையாகாது. 
இப்படியான நேரத்தில் தான் இந்த தாக்குதலுக்கு தலைவர் திட்டமிட்டார்.! 
அதனால், பூநகரி தாக்குதலில் பங்குபற்ற, பயிற்சி எடுத்த படையணியினருக்கு, இந்த தாக்குதல் பற்றி தெரியாமல், வேறு ஆண், பெண் களப்போராளிகளுடன், வெளி வேலைகளில் இருந்த போராளிகளையும், புதிய போராளிகளையும் இணைத்து, அவர்களைக் கொண்டே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 
இந்தத் தாக்குதலின் வெற்றியாலும், தாக்குதலுக்கு பெயர் சூட்டப்பட்டமையாலும், இந்த தாக்குதலுக்காகத்தான், புலிகள் பயிற்சி எடுத்தனர் என, சிங்களம் ஒரு முடிவுக்கு வந்தது. 
ஆனால், மீண்டும் காத்திகை மாதம் மூன்றாவது தடவையாக “தவளை” என்று பெயர் சூட்டி, பூநகரி மீது நீரிலும், நிலத்திலும் தாக்குதல் மேற்கொண்டபோது, சிங்களத்துக்கு தெரிந்திருக்கும் “இதயபூமி-1 வெறும் ட்ரெய்லர்” தான் என்று.! 
எங்கள் தலைவனின் போர் நுட்பத்துக்கு சிறிய உதாரணம் இந்தத் தாக்குதல்.! 
இந்த உத்தி வெளித்தெரியாத போதும், இதுபோன்ற தலைவரின் போர் நுட்பங்கள், எமது வரலாற்றில் புதையுண்டு போயுள்ளது.! 
இந்தத் தாக்குதலின் வெற்றி, புலிகளின் போரிடும் உளவுரணை அன்று மேம்படுத்தி இருந்தது.!
அதன் வெளிப்பாடே பூநகரி வெற்றி.! 
இந்த தாக்குதலின் போது (சரியாக எனக்கு நினைவில்லை) 10 இலட்சத்திற்கு மேற்பட்ட எதிரியின் பணம் அன்று புலிகளால் கைப்பற்றப் பட்டிருந்தது. 
அந்த பணத்தில், அந்த தாக்குதலில் பங்கு பற்றிய போராளிகளுக்கு, முள்ளியவளையில் ஒரு பாடசாலையில் வைத்து விருந்து வைக்கப்பட்டது. 
அந்த விருந்தில் எமது மக்களும் பங்குபற்றி, தம் சந்தோசத்தை கொண்டாடினர்.!!
நினைவுகளுடன்
-ஈழத்து துரோணர்
« PREV
NEXT »

No comments