Latest News

November 05, 2016

கடற்படையினருக்கும் மீனவர்களுக்குமிடையில் முறுகல்; மன்னாரில் பதற்றம்
by admin - 0

மன்னாரில் ஸ்ரீலங்கா கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலால் மன்னார் கடற்கரைப் பிரதேசங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இன்று காலை மன்னார் பள்ளிமுனை உட்பட்ட நகரை அண்மித்த கடற்கரைக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற போது, அங்கிருந்த கடற்படையினர் மீனவர்களிடம் புதிது, புதிதாக அனுமதிப் பத்திரங்களை கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், முறுகலாக மாறியுள்ளது. 

ஸ்ரீலங்கா கடற்படையினரின் இந்த அத்துமீறல்கள் தொடர்பில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறையிட்ட போதும், அது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறு கூறி அவர் தன் கடமையிலிருந்து ஒதுங்கிக்கொண்டதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.





மன்னார் - பள்ளிமுனை, பனங்கட்டுக்கொட்டில், பெரியகடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று காலை மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற நிலையில், ஸ்ரீலங்கா கடற்படையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது வழமையாக எடுத்துச் செல்லும் படகு மற்றும் மீனவருக்கான அனுமதிப் பத்திரங்களை மீனவர்கள் எடுத்துச் சென்றிருந்த போதிலும், வழமைக்கு மாறாக கடற்படையினர், படகிலிருந்து அனைத்து மீன்பிடி உபகரணங்களுக்கும் அனுமதிப் பத்திரங்களை கேட்டுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள், யுத்தகாலத்தில் இல்லாத பாஸ் நடைமுறை தற்போது எதற்கு என கடற்படையினரிடம் கேள்வியெழுப்பிய நிலையில், ஆத்திரமடைந்த கடற்படை மீனவர்களை மீன்பிடிக்கவிடாது தடுத்ததாலேயே முறுகல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்றா? கடற்படை, இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும்  மீனவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து, ஏராளமான கடற்படையினர் குறித்த கிராமங்களில் குவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஆயிரக்கணக்கான மீனவர்களும் ஒன்று திரண்டுள்ளதால் பதற்ற நிலமை பல மணி நேரங்கள் நீடித்துள்ளது. 

இந்த நிலையில் மன்னார் மாவட்ட நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, மீனவர்கள் மற்றும் கடற்படையினருடன் கலந்துரையாடி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் கடற்படையினர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதை அவதானித்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு இடையிலான முறுகலைத் தணிக்க முயற்சித்த போதிலும் கட்டுப்படுத்த முடியாமல் போனதை அடுத்தே மன்னார் குரு முதல்வர் தலைமையிலான தரப்பினரை சம்பவ இடத்திற்கு அழைத்திருக்கின்றனர்.

இதற்கமைய இன்று இடம்பெற்ற பதற்றத்திற்கான காரணம் தொடர்பாக இரு தரப்பினரிடமும் கேட்டறிந்த நீரியல்வள திணைக்கள அதிகாரி பீ.எஸ். மிராண்டா, மீனவர்களின் தொழில் அனுமதி பத்திரத்தை பரிசீலிக்க கடற்படையினருக்கு அதிகாரம் இல்லை என ஸ்ரீலங்கா கடற்படையினரிடம் நேரடியாக தெரிவித்தனர். 

இதேவேளை முத்தரிப்புத்துறை கிராமத்திற்குள் கடந்த மாதம் 18 ஆம் திகதி புகுந்த நான்கு கடற்படைச் சிப்பாய்களை மடக்கிப்பிடித்த கிராம மக்கள் அவர்களை நையப்புடைத்த சம்பவத்தை அடுத்தே ஸ்ரீலங்கா கடற்படையினர், மன்னார் மீனவக் கிராங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீதான கெடுபிடிகளை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். 

குறிப்பாக வங்காலை, முத்தரிப்புத்துறை, நறுவிலிக்குளம் மற்றும் சிலாவத்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும்போது ஸ்ரீலங்கா கடற்படையினர் தம்மை கைதுசெய்வதுடன், தமது படகுகளை பறிமுதல் செய்யவதாகவும் மீனவர்கள் முறையிட்டு வருகின்றனர். 

இந்த நிலையிலேயே மன்னார் நகரை அணட்மித்த மீனவக் கிராமங்களான பள்ளிமுனை உட்பட அயலிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடற்படையினரின் கெடுபிடிகளுக்கு முகம்கொடுத்திருக்கின்றனர்.

இது குறித்து மன்னார் மாவட்ட சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறையிட்டும், அவர் உதாசீனமாக நடந்துகொண்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கின்றார்.
« PREV
NEXT »

No comments