Latest News

October 16, 2016

லெப். கேணல் செல்வியின் நினைவாக……
by admin - 0

லெப். கேணல் செல்வியின் நினைவாக……
அக்டோபர் 16, 2016
 
அம்மா செல்வி! அன்னைத் தமிழீன்ற
ஆரணங்கே! அன்புநிறை எழில் மகளே!
இம்மா நிலத்தின் இனிமைகள் துறந்து
இன்னுயிர் தன்னை ஈய்ந்த ஏந்திழையே!
கும்மி யடித்துக் குலவிடும் பொழுதுகளிற்;
குன்றென நிமிர்ந்து குலம்காக்கப் புறப்பட்டவளே!
தெம்மாங்கு பாடுமடி தேன்தமி ழீழம்!
தென்றலே நின்புகழும் தேசமெங்கும் ஒலிக்கும்!

பெற்றவர் உற்றவர் பேணிக் காத்தவர்
பேரன்பு மிக்கநல் உடன் பிறந்தவர்
சுற்றத்தவர் சொத்துக்கள் சுகமான வாழ்வு
சூழ்ந் திலங்கு தூயநல்; தோழமைகள்
கற்றவுயர் பாடங்கள் கல்விக் கூடங்கள்
கவினுறு வாழ்வியற் பேறுகள் தம்மை
முற்றிலும் நீக்கி முடிவுதமி ழீழமென
முனைந்து களம்புகுந்த மின்னற் கொடிநீ!

அந்நாளில் எம்மினம் இறுகப் பற்றிய
அடுக்களை வாழ்வினை அறவே உடைத்து
இந்நாளில் அண்ணன்தன் ஏற்றமிகு பாதையில்
எடுத்தடி வைத்துமே ஈழத்தாய் மீட்பினிற்
பன்னாட்டு மக்களும் போற்றிடும் வண்ணம்
பலமிகு செயல்பல பாங்குறப் புரிந்து
எந்நாளும் உனையெண்ணி உருகி வணங்கிடும்
எண்ணம் தனைத்தந்து ஏகினையே இறைவனடி!

சோதியா படையின் துணைத் தளபதியாய்த்
தோற்றம் பெற்றுநீ ஆற்றிய வெற்றிகள்
சேதியாய்த் தந்தாய்! செந்தணற் பிழம்பினில்
சேயிழை நீயங்கு சிறுத்தையாய் நின்றகதை
காதினில் வீழ்ந்தன கண்மணியே கன்னிநீ
கட்டளைக ளிட்டுச் சுட்டுவிரல் நீட்டிநின்றாய்!
மேதினியில் நின்பெருமை மிக்கவே புகன்றிடுவர்
மெல்லென வீசிடும் மென்காற்றாய்த் தோன்றிடுவாய்!

வரலாற்று முதன்மைமிகு குடாரப்பில் நலமே
வாய்த்த தரையிறக்க நிகழ்வு தன்னில்,
அரசினைத் தோற்கடித்த இத்தாவில் ஊடுறுப்பில்,
அண்ணன் பால்ராஜுடன் ஆற்றிய பணிகள்
முரசறை வெற்றி முழக்கமென ஒலித்தன
மூத்தபெண் தளபதியே! முல்லை மலரே!
உரம்தந்;து சென்றாய்! உள்ளத்திற் பதித்தோம்!
உயர்வே! திருவே! உன்னதமே! வந்திடுவாய்!

போர்க்கருவி மட்டுமன்றிப் பொன்னான நின்கைகள்
புதுமைகள் படைத்திடும் எழுதுகோல் தாங்கி
நேரிய பண்பினில் நற்பாடல்கள் புனைந்து
நெஞ்சினிக்க வானலை தொலைக்காட்சி வந்து
சீரிய சிந்தையிற் தோன்றிடும் அறிவினாற்
தொன்மைமிகு தொல்காப்பிய இலக்கியம் ஆய்ந்து
பாரினிற் பரந்துபட்ட பாவையர் பெருமையுறப்
பகுத்தறிவுச் சின்னமெனப் பரணிபாட வைத்தாய்!

தங்காய்! நின்பெருமை சாற்றிடும் தகமைதான்
சற்றும் எமக்கில்லை, சான்றாண்மை மிக்கவுன்
இங்கித வாhழ்வில்நாம்; ஏட்டுச்சுரைக் காய்களே!
இனமானம் காத்தவெம் இளநிலவே ஒளிர்வாய்!
நங்காய்! நஞ்சினை நின்கழுத்தில் நீசுமந்து
நவிலுதற் கரியநற் கொடையால் மிளிர,
பங்கமிகு வாழ்வினிற் பாதைவகுத் தோம்நாம!;
பெண்தெய்வம் நீயன்றோ? பாதங்கள் தொழுதோம்!

கவியாக்கம்:- கனடாவிலிருந்து பவித்திரா.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
« PREV
NEXT »

No comments