Latest News

September 05, 2016

தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? முக்கிய இரகசியம் மஹிந்தவிடம்
by admin - 0

தமிழீழவிடுதலைப் புலிகளை நான் அழித்து விட்டேன் இனி இந்த நாட்டில் யுத்தம் இல்லை, நாட்டில் இனிமேல் மூவின மக்களும் ஒற்றுமையாக இருப்பார்கள். 2009க்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அதிகளவாக இதனையே கூறிவந்தார்.

அதன் பின்னர் யுத்தத்தினை நான் முற்று முழுதாக நிறைவு செய்யவில்லை, நான் ஆட்சிக்கு வரும் போது ஏற்கனவே 75 சதவீதமான யுத்தம் நிறைவு பெற்றிருந்தது என்ற கருத்தினை மஹிந்த வலியுத்தி வருகின்றார்.

இதனை மஹிந்த அடிக்கடி கூறத் தொடங்கியது, ஜனாதிபதி மைத்திரி இரகசியத்தை வெளியிடுவேன் எனக் கூறியதன் பின்னரே என்பதனை அறிய முடியுமானதாக இருக்கும்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் கட்சி பான் கீ மூன் வருகையினை எதிர்த்து போராட்டம் நடத்தியது. அதே போல் பிக்குகளும் போராட்டம் நடத்தினார்கள். 

விமல் வீரவன்ஸ மஹிந்தவிற்கு சாதகமானவர் என்பதும் அறிந்த விடயமே. இவ்வாறான போராட்டங்கள் ஐ நா செயலாளரின் கவனத்தை திசை திருப்பவே ஆரம்பிக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது.

இந்த இரு ஆர்ப்பாட்டங்களும் முன்வைத்தது புலிகள் மீண்டும் வருவார்கள், பான் கீ மூன் வடக்கிற்கு சாதகமான ஒருவரே என்ற கோரிக்கையினையே. 

அதே சமயம் நாட்டில் சுதந்திரக்கட்சியின் 65ஆவது மாநாட்டினையும் தவிர்த்து மஹிந்த மலேசியா சென்றிருந்தார். தேர்தல் காலகட்டத்தில் மஹிந்த தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்ய சுதந்திர கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டிய அவசியம் உள்ளது. அதனையும் தாண்டி மஹிந்த மலேசியா சென்றிருந்தார்.

தற்போது மஹிந்தவிற்கு எதிராக மலேசியாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது விடுதலைப் புலிகளே எனவும் இறுதி யுத்தத்தில் தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் மலேசியாவில் இருக்கின்றார்கள். அவர்களே என்னைத் தாக்க முற்பட்டார்கள் என்றும் மஹிந்த கூறுகின்றார். இதனை சிங்கள ஊடகங்களும் பிரபல்யப்படுத்துகின்றன.

இவற்றை தொகுத்து நோக்கும் போது மஹிந்தவிற்கு தற்போது தனது அரசியல் பலத்தை மீண்டும் நிலைநிறுத்த விடுதலை புலிகள் என்ற ஆயுதம் அவசியம். அதன் காரணமாக பெரும்பான்மையின மக்களை தன் பால் ஈர்த்துக் கொள்ள இவ்வாறானவை மஹிந்த தரப்பில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகவே நோக்கப்படுகின்றது.

இல்லாவிடின் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளை மீண்டும் வரவைக்க அவசியம் இல்லை என்றே கூறப்படுகின்றது. 

மற்றொரு பக்கம், மஹிந்தவின் இரசியங்களை வெளியிடுவேன் என ஜனாதிபதி கூறியது நினைவிருக்கும். மஹிந்தவின் போர்க் குற்றம் மற்றும் இறுதி யுத்தம் மட்டுமே தற்போதைய காலகட்டத்தில் மஹிந்த தொடர்பில் உள்ள இரகசியம் ஊழல். வெள்ளை வான் போன்றவை புலித்துப்போன விடயம்.

இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் வெளிவர வேண்டிய இரகசியங்களை ஜனாதிபதி கூறும் முன்பே மஹிந்த சிறிது சிறிதாக வெளிப்படுத்த முயல்வதாகவும், அதன் காரணமாகவே விடுதலை புலிகள் பற்றி தற்போது மஹிந்த அதிகளவாக பிரச்சாரம் செய்கின்றார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக அவதானிகள் தெரிவித்து வருகின்றார்கள்.

இங்கு இரகசியத்தினை வெளியிடுவதில் முந்திக் கொள்ளப்போவது மஹிந்தவா? மைத்திரியா? என்பது புரியவில்லை. இருந்தாலும் தற்போதைய சூழலில் மஹிந்த அதனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாய நிலையிலேயே இருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஒன்று அரசியல் நிலைப்பாட்டை தக்க வைக்க மஹிந்த திட்டமிட்டு நடத்துகின்ற செயல் அல்லது விடுதலை புலிகளின் தலைவரின் மரண மர்மம். அத்துடன் சரணடைந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் போன்றவை இன்றளவும் வெளிப்படுத்தப்படவில்லை.

இறுதி யுத்தம் தொடர்பில் வேறு யாராவது கூறி அது தனக்கு பாதகமாக மாறும் முன்னர் தானே வெளிப்படுத்த மஹிந்த முயல்கின்றார் என்ற இரு வகை சந்தேகம் மட்டுமே தற்போது காணப்படுவதாக அரசியல் அவதானிகள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் கூடியவிரைவில் இரகசியங்கள் வெளியே வரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

« PREV
NEXT »

No comments