Latest News

August 05, 2016

வன்னியில் மீண்டும் வீட்டுத்திட்ட அதிகாரிகளின் அடாவடி கேட்பாரின்றித் தொடர்கின்றது.
by admin - 0

வன்னியில் மீண்டும் வீட்டுத்திட்ட அதிகாரிகளின் அடாவடி கேட்பாரின்றித் தொடர்கின்றது. 


வன்னியில் யுத்தப் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்ட நிதியை மக்களுக்கு வழங்க மறுக்கும் வீட்டுத் திட்ட உத்தியோகத்தர்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட வீடுகளை தம்மிடம் வழங்குமாறும் தமக்கு வழங்கினால் தாம் பொறுப்பேற்று உரிய காலத்திற்குள் வீடுகளைக் கட்டி மக்களுக்கு வழங்குவதாகவும் இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் மக்களிடம் கேட்டு வருகின்றார்கள். 
வன்னி யுத்தத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு தற்போது அரசாங்கத்தால் வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளதற்கமைவாக மக்கள் தமது வீடுகளை கட்டும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். வீட்டுத் திட்ட நிதியை மக்களுக்கு வழங்கும் வீட்டுத் திட்ட உத்தியோகத்தர்கள் அந்நிதியை மக்களுக்கு உரிய காலத்தில் வழங்காது இழுத்தடித்து வருவதுடன் மக்களால் அமைக்கப்படும் வீட்டுக் கட்டு வேலைகளில் பல்வேறுபட்ட பிழைகளைக் கூறி தமக்குத் தெரிந்த நல்லமாதிரி வீடுகட்டும் தொழிலாளர்கள் இருப்பதாகவும் தம்மிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கினால் அவர்களைக்கொண்டு தாம் கட்டி வழங்குவதாகவும் மக்களிடம் கூறும் உத்தியோகத்தர்கள் இதனை யாரிடமும் கூறவேண்டாம் எனவும் கூறியுள்ளார்கள். 

தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்ட வீடுகளை அமைப்பதற்கான நிதியில் ஐம்பதாயிரம் ரூபா பணத்தை மாத்திரம் வழங்கிவிட்டு, வீட்டினை லிண்டர் வரை கட்டி முடித்த பின்னர்தான் மீதி அடுத்த கட்டப் பணத்தைத் தருவோம். கஸ்டமென்றால் நீங்கள் கடன் வேண்டி வீட்டினைக் கட்டி முடியுங்கள் மீதிப் பணத்தினைத் தருவோம் என்றும் வீட்டுத் திட்ட உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் கூறியுள்ளார்கள். 

கடந்த காலங்களிலும் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட நிதியை மக்களுக்கு விடுவிக்கும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு கஸ்டங்களை வழங்கி வந்தார்கள். முழங்காவில் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்ட நிதி விடுவிக்கும் உத்தியேர்கத்தர்கள் பாதிக்கப்பட்ட விதவைப் பெண்களை வீட்டுத்திட்ட நிதி விடுவிப்புக்காக பாலியல் இலஞ்சம் கேட்டுத் துன்புறுத்திய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்ட நிதியை விடுவிக்காமல் தமது அலுவலகங்களுக்கு மக்களை அலைய வைத்த வீட்டுத்திட்ட நிதி விடுவிப்பு உத்தியோகத்தர்கள் தமது வாய்க்கு வந்தபடி மிகவும் கேவலமாக பேசிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

மக்களுக்கு வீட்டுத்திட்ட நிதியை விடுவிக்காமல் மக்களுக்கான வீடுகளை தாம் பொறுப்பேற்று ஒப்பந்த அடிப்படையில் கட்டித் தருவதாகவும் கூறிய பல அடாவடிகளும் இடம்பெற்றுள்ளன.

அதேபோன்ற சம்பவங்கள்தான் தற்போதும் இடம்பெற்று வருகின்றன. இதனை வெளியில் கூறினால் தமக்கான வீட்டுத்திட்டத்தை வழங்காமல் நிறுத்திவிடுவார்கள் என்ற அச்சத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் காணப்படுகின்றார்கள். இவ்விடயத்தில் எவரும் கவனம் செலுத்தாமல் ஏனோதானோ என இருந்து வருகின்றார்கள்.
« PREV
NEXT »

No comments