Latest News

June 14, 2016

இலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவம் எதற்காக?கருணாநிதி கேள்வி
by admin - 0

இலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவம் எதற்காக? என கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் கருணாநிதி,
இலங்கை அரசு, ஈழத் தமிழர்களிடம் பாகுபாடு காட்டாமல் உள்ளது என்பதை நிரூபிக்க முதற் கட்டமாக தமிழர் பகுதிகளிலே இருந்து உடனடியாக இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை சிறிசேன அரசு நம்பத்தக்க வகையில் நேர்மையோடு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போருக்குப் பின், அங்கே தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்வுரிமைகளுக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழர்கள் வாழும் இந்தப் பகுதிகளிலே குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென்றும், தமிழர்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவாவது அனுமதிக்க வேண்டுமென்றும், அங்கே உள்ள தமிழர்களும், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்று வெற்றி பெற்றுள்ள அதிபர் திரு. சிறீசேன அவர்கள், தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் திரும்பப் பெறப்பட்டு விடுமென்றும், இராணுவத்தினரும், சிங்களவர்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளைத் திரும்பப் பெற்றுவிடலாமென்றும் இனியும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட மாட்டார்கள் என்றும், சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் கூடிய அமைதியான வாழ்வுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும், முப்பதாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வரும் இலங்கை அரசியல் சட்ட 13வது திருத்தம் நேர்மையான முறையில் அமுலுக்குக் கொண்டு வரப்படுமென்றும், வெற்றி பெறுவதற்கு முன் திரு. சிறிசேன அளித்த உறுதிமொழிகளை தமிழ் மக்கள் அப்படியே நம்பினார்கள், அவைகள் எல்லாம் நிச்சயம் நிறைவேறும் என்றும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் இலங்கை அதிபர் திரு. சிறிசேன அவர்கள் 2-2-2015 அன்று வெளியிட்ட அறிக்கையில்,

பாரம்பரியமாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவம் (தரைப்படை, கடற்படை, விமானப்படை) பொது அமைதியினை நிலைநாட்டிப் பேணுவதற்கான கடமைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார். நான் அப்போதே 13-2-2015 அன்று, அதிபர் தேர்தலின் போது திரு. சிறிசேன கொடுத்த வாக்குறுதிக்கு எதிரான இந்த அறிக்கை எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இலங்கையில் உள் நாட்டுப் போர் முடிவடைந்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து நிறுத்தப் பட்டுள்ளது, சட்டம் ஒழுங்கைப் பராமரித்து மக்களின் பாதுகாப்புப் பணிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் காவல்துறையினரே மேற்கொள்ள வேண்டுமென்று தான் அங்கேயுள்ள தமிழர்கள் விரும்புகிறார்கள், எனவே இராணுவம் அவசியமில்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் முதலமைச்சரின் இந்தக் கோரிக்கையை அங்கேயுள்ள இராணுவம் முற்றிலுமாக நிராகரித்து, தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெற முடியாது என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் முக்கிய இராணுவ முகாமான சாலவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கு தீப்பிடித்து பெரிய சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதுபற்றி இலங்கையின் அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, சாலவ இராணுவ வெடி மருந்துக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தால் அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இராணுவத்திற்கு 500 கோடி ரூபாய் வரை இழப்பு உண்டாகியுள்ளது. இந்த விபத்திற்குப் பிறகு, வடக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள இராணுவம் மற்றும் இராணுவ ஆயுதக் கிடங்குகளை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை அனைத்து தரப்பிலுமிருந்து எழுந்துள்ளது.

இதுகுறித்து கண்டியில் உள்ள புத்தமதத் தலைமைப் பீடத்திற்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஸ்கிரி மாநாயக்கதேரரிடம் ஆலோசனைகள் பெற்றேன். அப்போது அவர் இராணுவ முகாம்களை அகற்றக்கூடாது என்று கூறினார். ஆகையால் வடக்கின் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்று புத்த மதத் தலைமைப் பீடத்தின் அறிவுரைகளைப் பெற்று இலங்கை  அமைச்சர் தெரிவித்திருப்பது தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போன்ற தீராத வேதனையை ஏற்படுத்தி யிருக்கிறது.

கடந்த ஆண்டு இலங்கைத் தீவில் நடைபெற்ற தேர்தலில் ஈழத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கை - எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக, அவர்களிடம் வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு, இராணுவம் அங்கே தொடர்ந்து இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை புத்த மதத் தலைவரைக் கலந்து கொண்டா ஒரு அமைச்சர் அறிவிப்பது? அது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நியாயமான செயலாகுமா?

இலங்கை அரசு, ஈழத் தமிழர்களிடம் பாகுபாடு காட்டாமல் உள்ளது என்பதை நிரூபிக்க முதற்கட்டமாக தமிழர் பகுதிகளிலே இருந்து உடனடியாக இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை சிறிசேன அரசு நம்பத் தக்க வகையில் நேர்மையோடு எடுக்க வேண்டும்.

தேர்தலின் போது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. அதைக் காப்பாற்ற அவர்கள் வாய்மை உணர்வோடு முன்வருவதே ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் செயல். இதுவே உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் விருப்பம் - வேண்டுகோள்.

இலங்கை அரசு அதை நிறைவேற்றுமா? இந்திய அரசு அதற்கு முன் நிற்குமா? எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments