வடக்கில் மீண்டும் யுத்தம் ஏற்படலாம் என்ற அச்சம் மத்திய அரசாங்கத்திடம் காணப்படுகின்றமையே, வடக்கில் ராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளமைக்கான காரணம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.காக்கைத்தீவு பிரதேசத்தில் கழிவுப் பொருட்களின் மீள்சுழற்சி நிலையமொன்றை திறந்துவைக்க சென்றிருந்த வடக்கு முதல்வரிடம், வடக்கில் ராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்து, அரசாங்கத்திடம் எவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளிக்கும்போதே வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
அத்தோடு, இராணுவத்தின் நிலையை மாற்றி, இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையில் சுமுகமான நிலையை ஏற்டுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக குறிப்பிட்ட வடக்கு முதல்வர், தாம் இதனை வரவேற்பதாகவும், எனினும் ராணுவம் வடக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு, கொஸ்கம ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தினை அடுத்து, வடக்கில் காணப்படும் மயிலிட்டி ஆயுதக்கிடங்கை அகற்றுவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும், இதுகுறித்து ஆராய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் வடக்கு முதல்வர் மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment