Latest News

June 11, 2016

அரிய வகை தோல் நோயால் கற்சிலை போல் மாறிய 11 வயது சிறுவன்
by admin - 0

நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ் தர்ஜி என்ற 11 வயது சிறுவன் இக்தியோசிஸ் (Ichthyosis) என்னும் அரியவகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

இந்நோயின் தாக்கத்தினால் ரமேஷ் தர்ஜி நாளாக நாளாக கற்சிலையைப் போன்று உருமாறி வருகின்றான்.

இதனைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருந்தும், போதிய பணம் இல்லாததால் தங்களின் மகனை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லையென ரமேஷ் தர்ஜியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ரமேஷ் தர்ஜி பிறந்த 15 நாட்களிலேயே அவனது தோல் முற்றிலும் உரிந்துவிட்டதுடன் புதிதாக உருவான தோல் கடினத் தன்மையுடையதாகவும் கறுப்பாகவும் மாற ஆரம்பித்துவிட்டதாக அவனது தாய் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் அகோரமான தோல் மற்றும் உருவம் காரணமாக மற்ற குழந்தைகள் அவனைக் கண்டு அச்சமடைகின்றனர்.
இதனால் அவனுக்கு நண்பர்கள் என்று எவரும் இல்லை.

அவனை முதலில் மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது, அவனுக்கு பூஞ்சைத் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரமேஷ் தர்ஜிக்கு 5 வயது ஆனபோது அவனால் நடக்கவே முடியாமற்போனது. குழந்தை வலியால் அழுதபோது, அவன் ஏன் அழுகிறான் என்பது பெற்றோருக்குத் தெரியாமற்போனது.

மறுபடியும் அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது அவனுக்கு மிக அரிதாக ஏற்படும் இக்தியோசிஸ் நோய் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

என்றாலும், அவனை குணப்படுத்த பெற்றோரிடம் பண வசதி இருக்கவில்லை.

இந்த நிலையில் தான் குழந்தை குறித்த காணொளி ஒன்றினை சமூக வலைத்தளத்தில் கண்டுள்ளார் நேபாளத்தைச் சேர்ந்த பாடகர் சஞ்சய் சிரேஷ்தா.

அவர், ரமேஷ் தர்ஜியின் மருத்துவ செலவிற்காக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரித்தானிய பாடகி Joss Stone இன் அறக்கட்டளையும் இணைந்து கொண்டது.

காத்மாண்டில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சி மூலம் 1375 பவுண்ட்களை சேர்க்கக்கூடியதாக இருந்தது.

நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், பாடகி ஜோஸ் ஸ்டோன் சிறுவனுடன் சில மணி நேரங்கள் இருந்து அவனை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.

ரமேசுக்கு தற்போது காத்மாண்டு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையளித்து வருகின்றனர்.

அவனது தோல் செதில்களை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். பிசியோதெரப்பி வழங்கவும் மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ரமேஷின் பெற்றோர் தற்போது காத்மாண்டில் தங்கியிருந்து அவனுக்கான சிகிச்சைகளை செய்து வருவதுடன், பாடகி ஜோஸின் அளப்பரிய உதவிக்கு தங்கள் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments