Latest News

June 11, 2016

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்துச் செல்வதைக் கண்டுகொள்ளாத அரசாங்கம்!
by admin - 0

kavinthan
மகிந்த அரசாங்கம் பெற்ற ஆடம்பரச் செலவுகளுக்கான பெருமளவு கடன் தொகையை மக்கள் பணத்திலிருந்து திருப்பிச் செலுத்தும் மைத்திரி அரசாங்கம் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காகப் பெற்ற கடன், கனமழை வெள்ளப் பெருக்கினால் பாயிரழிவுகளை எதிர்நோக்கிப் பாதிக்கப்பட்ட நிலையில்  வட்டியினால் கடன் தொகை அதிகரித்துச் செல்கின்றமை அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலக்கமுற்றுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தாமல் பொறுப்பற்ற நிலையில் கண்மூடியிருந்து வருகின்றது.

வன்னிப் பகுதிகளில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்த விவசாயிகள் மீள்குடியேற்றத்தின்போது 2010, 2011 காலப்பகுதிகளில் வங்கிகளிடமிருந்து பெற்ற விவசாயக் கடனைப் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்குக் காரணமாக விவசாயிகளின் பயிர்ச்செய்கைகள் அனைத்தும் முற்றாக அழிவடைந்தன. இதனால் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட விவசாயக் கடன்களை மீளச் செலுத்தமுடியாது கலங்கி நின்றார்கள். அப்போது ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதாகவும் மானியமாக்குவதாகவும் கூறியது. இதனைக் கேள்வியுற்ற பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஓரளவு மன நிம்மதியடைந்தார்கள். ஆனாலும் அது நீடிக்கவில்லை. மகிந்த அரசாங்கத்தின் கூற்று வெறும் வாய்ப்பேச்சளவில் மட்டுமே இருந்தமைதான் அதற்குக் காரணம். விவசாயக் கடன்களை வழங்கிய வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு கடிதமூலம் அறிவித்தும், விவசாயிகளது வீடுகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை வாய்க்குவந்தபடி தரக்குறைவாகக் ஏசியும் வந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் அப்போது பெற்ற விவசாயக் கடன்களை தற்போதுவரை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் வங்கி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடமுடியாதவர்களாக கடன் சுமையுடன் அவலப்படுகின்றார்கள். 
வன்னி யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு விவசாயிகள் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட விவசாயக் கடன்களை பயன்படுத்தி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டபோது கனமழை, வெள்ளப் பெருக்குக் காரணமாக ஏற்பட்ட  பயிரழிவுகளால் வங்கிக் கடன்களை இன்றுவரை திருப்பிச் செலுத்த முடியாது கலங்கி நிற்கும் விவசாயிகளின் வங்கிக் கடன்தொகைகள் வட்டியினால் பெருமளவுக்கு அதிகரித்துச் செல்கின்றன. வட்டியுடன் அதிகரித்த கடன் தொகையை உடனடியாகத் திருப்பிச் செலுத்துமாறும் திருப்பிச் செலுத்தாதவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகு உட்படுத்தப்படுவார்கள் எனவும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயக் கடன்களைப் பெற்று இயற்கையின் சீற்றத்தால் விவசாய நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கடன் தொகை வட்டியினால் அதிகரித்துச் செல்கின்ற அதேவேளை கடனாளிகளாகவுள்ள விவசாயிகள் வங்கி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடமுடியாத நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

விவசாயக்கடன் பெற்ற கடனாளியாகவுள்ளவர்கள் தமது அவசர தேவையின் நிமித்தம் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களிடம் பண உதவி கோரி தமது வங்கிக் கணக்கு இலக்கத்தைக் கொடுத்தபோது அந்த வங்கிக் கணக்குக்கு அவர்களால் அனுப்பப்பட்ட பணாத்தை உரியவரிடம் வழங்குவதற்கு வங்கிகள் மறுத்ததுடன் விவசாயக் கடன் தொகையை வட்டியுடன் கட்டியதன் பின்னர் அனுப்பப்பட்ட பணத்தை வழங்குவதாகக் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளால் கூறிக்கவலை தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயக் கடன் தொகையைக் கட்ட முடியாத பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் தற்கொலை செய்துகொண்டுள்மை ஊடகங்களில் வெளிவந்த உண்மையாகவுள்ளன. 

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவசாயக் கடன் தொகைகள் ஒரு முடிவின்றிய நிலையில் வட்டியால் அதிகரித்துச் செல்கின்றமையால் கடன்சுமை தாங்க முடியாத கலக்கத்துடன் பல விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் விரக்தியுடன் காணப்படுகின்றார்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன்சுமை வட்டியினால் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் ஆட்சியாளர்கள் எவருமே இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தமது ஆடம்பரச் செலவுகளுக்காகப் பெற்ற பெருமளவு கடன் தொகைகளை தற்போதைய நல்லாட்சிக்கான மைத்திரி அரசாங்கம் மக்கள் பணத்திலிருந்து திருப்பிச் செலுத்தி வருகின்றது. ஆனால் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காகப் பெற்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டபோது கனமழை, வெள்ளப்பெருக்குக் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் கலங்கிநிற்கும் ஏழை விவசாயிகளின் விவசாயக் கடன்களை இரத்துச் செய்யவோ மானியமாக்கவோ மனமின்றியிருந்து செயற்பட்டு வருவதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.

சிவேந்தன்.
« PREV
NEXT »

No comments