Latest News

May 12, 2016

தே.மு.தி.கவை பின்னுக்கு தள்ளும் நாம் தமிழர், பா.ம.க! வெளியான புது கருத்துக் கணிப்பு
by admin - 0

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு செய்தி ஊடகங்களில் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக பாமக, நாம் தமிழர் கட்சிகளுக்கு ஆதரவு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.

தனித் தனியாக கட்சிகளைப் பிரித்துப் பார்த்தால் பாமக, நாம் தமிழர் கட்சிகளுக்கு அடுத்த இடத்தில்தான் தேமுதிக, மதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் வருகின்றன.

வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு என்பது உட்பட பல்வேறு கேள்விகளைக் கேட்டு கருத்துக் கணிப்பை நடத்தி வெளியிட்டுள்ள பிரபல செய்தி ஊடகம் ஒன்று, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் தாக்கம் குறித்தும் அலசியுள்ளது.

இதில் முக்கியமானது நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ள ஆதரவு. பலரும் இந்தக் கட்சிக்கு என்ன கிடைத்து விடப் போகிறது என்ற ஊகத்தில் இருந்துவரும் நிலையில் நாம் தமிழர் கட்சியும் தலை தூக்கியுள்ளதாக இந்த கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

உங்கள் வாக்கு யாருக்கு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அதிமுக முதலிடத்தையும், திமுக 2வது இடத்தையும் பிடித்துள்ளன. மக்கள் நலக் கூட்டணி அதாவது தேமுதிக தலைமையிலான அணி 3வது இடத்தில் உள்ளது.

பாமகவுக்கு நான்காவது இடம், நாம் தமிழர் கட்சி 5வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விடயமாக கருதப்படுவது பாஜகவை பின்னுக்குத் தள்ளியுள்ளது நாம் தமிழர் கட்சி.

பாஜகவுக்கு 6வது இடம்தான் கிடைத்துள்ளது. கட்சிகள் அடிப்படையில் பிரித்துப் பார்த்தால் நாம் தமிழர் 4-வது தெரிவாக மக்கள் மத்தியில் இருப்பதை அறிய முடியும்.

திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது மக்கள் நலக் கூட்டணி. இக்கூட்டணிக்கு கிடைத்துள்ள ஆதரவு 8.55 சதவீதம். பாமகவின் ஆதரவு 4.47 சதவீதம். நாம் தமிழருக்குக் கிடைத்துள்ள ஆதரவு 2.12.

தேமுதிக கூட்டணியில் மொத்தம் 6 கட்சிகள் உள்ளன. சராசரியாகப் பார்த்தால் அக்கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் 1.45 சதவீத ஆதரவு வருகிறது. அப்படிப் பார்க்கும்போது சதவீத அடிப்படையில் பாமகதான் 3வது சக்தியாக உள்ளது. 4வது இடம் நாம் தமிழருக்கு.

தேமுதிக உள்ளிட்டோருக்கு அதற்கு அடுத்த இடம்தான். தற்போதைய சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது பாமகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே. எனவே அவர்களது சொந்த செல்வாக்கை அறிய இந்த கருத்துக் கணிப்புகள் உதவும்.

மேலும் தெற்கு, மேற்கு மண்டலங்களில் நான்காவது பெரிய கட்சியாக நாம் தமிழருக்கு ஆதரவு காணப்படுகிறது. பிற மண்டலங்களிலும் கூட இதன் தாக்கம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.

சீமானின் கருத்துகள் தீவிரமாக இருந்தாலும் கூட அவரது செயல்பாடுகள் மக்களிடையே நன்கு சென்று சேர்ந்துள்ளது என்பதையும் இந்தக் கருத்துக்கணிப்பு புலப்படுத்துகிறது.

வரும்காலங்களில் சற்று சீரிய வகையில் உறுதியுடன், தெளிவாக செயல்படும்போது நாம் தமிழர் கட்சிக்கு நல்ல வளர்ச்சி இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

தற்போதைய நிலையில் பாமகவுக்கு அடுத்த இடத்திற்கு நாம் தமிழர் கட்சி வந்துள்ளதே மிகப் பெரிய சாதனைதான். இது முதல் தேர்தல் என்பதாலும், இப்போதுதான் அலை ஏற்படுத்தி வருகிறது என்பதாலும் இந்தத் தேர்தலை தனது நிலையை பரீட்சித்துப் பார்க்க நாம் தமிழர் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.
« PREV
NEXT »

No comments