அண்மைக் காலங்களாக புலம்பெயர் அமைப்புக்கள் தோல்வி கண்டு வருகின்றனவா என்ற ஐயப்பாட்டை நேற்றைய தினம் இலண்டனில் மைத்திரியின் வருகைக்க் எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஏற்படுத்துகின்றது. இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் பிரித்தானியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய இருநூறு பேருக்கும் குறைவானவர்களே கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு வேதனைக்குரிய விடயம்
.
அதே போன்றதொரு தோற்றப்பாட்டை கடந்த பங்குனி மாதம் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐநாவின் மனித உரிமை ஆணையகத்திற்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டமும் ஏற்படுத்தியிருந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திலும் கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்குட்பட்ட தமிழ் மக்களே பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டார்கள். இவ் எண்ணிக்கை கடந்த கால ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை விட பாரிய வீழ்ச்சியாகும். அப்படியானால் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியில் இருந்த இனவெழுர்ச்சியும் ஓர்மமும் அற்றுப் போய்க் கொண்டிருக்கின்றதா என்ற கேள்வி மனதில் இயல்பாக எழலாம்.
ஆனால் அதுவல்ல உண்மை. மக்களிடம் இனவெழுர்சியும் ஓர்மமும் ஈழம் மீதான தீராத தாகமும் அப்படியே தான் உள்ளன. எனினும் புலம் பெயர் அமைப்புகளின் ஒற்றுமையின்மை, அதிகாரம் மற்றும் தலைமைத்துவப் போட்டி மனப்பாங்கு, இரட்டை வேட நிலைப்பாடு, பணம் வசூலிப்பு, வசூலித்த பணத்திற்கு கணக்கு வழக்குக் காட்டாமை இப்படிப் பல்வேறு காரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம்.
எனினும் இவை எல்லாவற்றையும் புறந்தள்ளி மக்கள் ஒற்றுமையாக ஒன்று கூடும் நாட்கள் என்றால் அது தமிழீழ தேசியத்தலைவரின் பிறந்த நாளும் அதற்கு அடுத்த நாள் வரும் மண்ணில் வித்தாகிய மாவீரர்களின் மாவீரர் நாளுமேயாகும். ஆக புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் தேசியத் தலைவர் மீதான மதிப்பும் மரியாதையும் துளியளவும் குறையவில்லை. மாவீரர்களின் ஒப்பற்ற தியாகங்களையும் அவர் மறக்கவில்லை. ஆனால் புலம் பெயர் அமைப்புக்களை புறக்கணிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். அவற்றில் நிர்வாகங்களில் இருப்பவர்களை திருடர்கள் போல் பார்க்கின்றார்கள் அவ்வளவு தான்.
எனவே மறு சீரமைக்க வேண்டியது மக்களை அல்ல. புலம் பெயர் அமைப்புக்களையும் அமைப்புக்களில் உள்ளவர்களையும் மட்டுமே. முதலில் ஒரு நாட்டில் உள்ள தமிழர்களை ஒரே ஒரு அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்வேறு கூறுகளாக உள்ள அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். அத்துடன் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள அமைப்புக்களுக்கிடையில் சிறந்த தொடர்பாடல்களையும் ஒத்தாசைகளையும் ஏற்படுத்துதல். தாய்மண்ணில் வாழும் தமிழ் மக்களுடன் சிறப்பான உறவுப் பாலத்தை அமைத்தல். மக்கள் மத்தியில் பணம் வசூலிப்பதையும் வெளிப்படைத்தன்மையற்ற செயற்பாடுகளையும் நிறுத்தி அவர்களின் கேள்விகளுக்கு துரோகிப் பட்டம் சூட்டாமல் தகுந்த பதில்களை வழங்கி மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்புக்களாகச் செயற்படத் தவறின் காலப் போக்கில் இத்தகைய அமைப்புக்களின் தலைமைகளில் இருப்பவர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுமே இத்தகைய போராட்டங்களில் கலந்து கொள்வார்கள்.
No comments
Post a Comment